Monday, June 12, 2017

அரசின் கருணைப் பார்வைக்காக காத்திருக்கும் 20 ஆயிரம் டாஸ்மாக் பணியாளர்கள்

By -ஆர்.முருகன்.  |   Published on : 12th June 2017 06:40 AM  | 


tasmac

அரசு வேலைக்காக முன்பணம் செலுத்திவிட்டு, 14 ஆண்டுகள் பணிபுரிந்தும் உரிய அங்கீகாரம் இல்லாமல், தமிழக அரசின் கருணைப் பார்வைக்காக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் மதுவிலக்கு: இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு மாநிலங்களில் மதுவிலக்கை அமல்படுத்துவதில் அந்தந்த மாநில முதல்வர்கள் ஆர்வம் செலுத்தினர். தமிழகத்தில் (சென்னை மாகாணம்) ஓமந்தூர் ராமசாமியின் முயற்சியால் 1950-களில் பூரண மதுவிலக்கு அமலுக்கு வந்தது. காங்கிரஸூக்கு பிறகு அண்ணா ஆட்சியிலும் மதுவிலக்கு அமலில் இருந்தது. ஆனால், முதல்வராக கருணாநிதி இருந்தபோது 1971-இல் ஆகஸ்ட் 30 -இல் மதுவிலக்கு விலக்கிக்கொள்ளப்பட்டது. தாற்காலிக நடவடிக்கையாக இதை தொடங்கியிருப்பதாக கூறிய கருணாநிதி, 1973இல் ஜூலை 30-ஆம் தேதி கள்ளுக்கடைகளையும், 1974-இல் செப்டம்பர் 1ஆம் தேதி சாராயக் கடைகளையும் மூட உத்தரவிட்டார்.
இதற்குப் பிறகு எம்ஜிஆர் ஆட்சியிலும் மதுவிலக்கு அமலில் இருந்தது. ஆனால், நிர்வாக நெருக்கடியால் 1981-இல் மே 1-ஆம் தேதி சாராயக் கடைகளையும், கள்ளுக்கடைகளையும் திறக்க உத்தரவிட்டார் எம்ஜிஆர். 1983-இல் தமிழக அரசால் டாஸ்மாக் நிறுவனம் தொடங்கப்பட்டு, அதன் கீழ் மது விற்பனை நடைபெறத் தொடங்கியது. இருப்பினும் தனியாரும் மது விற்பனையில் இருந்தனர். 2003-இல் "டாஸ்மாக்" மூலம் நேரடியாக மது விற்பனை தொடங்கி, இன்றுவரை நீடித்து வருகிறது. இதற்கிடையே 1989-இல் மலிவு விலை மது அறிமுகம் செய்யப்பட்டது. பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியதால், ஜெயலலிதா ஆட்சியில் இந்த மலிவு விலை மது விற்பனை நிறுத்தப்பட்டது.
30 ஆயிரம் பேர் நியமனம்: பெருநகரங்களில் ஒரு மதுக்கடைக்கு தலா 9 பேர், நகரங்களில் 7 பேர், ஊரகப் பகுதிகளில் 3 பேர் என கணக்கிட்டு, 14 ஆண்டுகளுக்கு முன் 30 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட்டனர். மேற்பார்வையாளருக்கு ரூ.50 ஆயிரம், விற்பனையாளருக்கு ரூ.15 ஆயிரம், உதவி விற்பனையாளருக்கு ரூ.10 ஆயிரம் என முன்பணம் செலுத்தியும், வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமும் இந்த 30 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர். இவர்கள், தமிழகத்தில் இருந்த 6,320 மதுக்கடைகளில் பணியமர்த்தப்பட்டனர்.
4 ஆயிரம் கடைகள் மூடல்: இந்த நிலையில், தமிழக அரசின் படிப்படியான மதுவிலக்கு கொள்கையால் 1000 கடைகள், உயர்நீதிமன்ற உத்தரவால் 3,300 கடைகள் என 4,300 கடைகள் மூடப்பட்டுள்ளன. மூடப்பட்ட கடைகளில் பணிபுரிந்த 20 ஆயிரம் ஊழியர்கள் வேலையில்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மூடப்பட்ட கடைகளை வேறு இடங்களில் திறக்க முயற்சி எடுத்தாலும் மக்களின் கடும் எதிர்ப்பால் முடியாமல் போகின்றன. இதனால், சுமார் 300 கடைகளை மட்டுமே மீண்டும் திறக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே, 20 ஆயிரம் பணியாளர்களும் ஏற்கெனவே இயங்கி வரும் 2 ஆயிரம் கடைகளில் பணியமர்த்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், ஒரு கடையில் குறைந்தது 20 பேர் பணிபுரியும் நிலை உருவாகி, கடும் நிர்வாக சிக்கலுக்கு வழிவகுத்துள்ளது.
தேவை மாற்றுப் பணி: இந்த சிக்கலுக்குத் தீர்வு காணவும், 20 ஆயிரம் குடும்பங்களின் நிலையை உணர்ந்தும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாக உள்ளது. வேலையிழந்துள்ள 20 ஆயிரம் பேரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இளநிலை, முதுநிலை பட்டதாரிகள். மேலும், ஆயிரம் பேர் ஆசிரியர் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு முடித்தவர்கள். எனவே, அவரவர் கல்வித் தகுதி, பணிமூப்பு, பணி விருப்பம் என்ற அடிப்படையில் அரசு துறைகளில் மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாக உள்ளது. அரசுப் பணியில் 240 நாள்கள் பணி முடித்தாலே நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ள நிலையில், 14 ஆண்டுகள் பணிபுரிந்தும் இன்னும் திரிசங்கு நிலையிலேயே காலம் கடத்தி வருகின்றனர் 30 ஆயிரம் பணியாளர்கள்.
முன் உதாரணம்: இந்தப் பணியாளர்களை வரைமுறைப்படுத்துவதில் அரசுக்கு எந்தவித சிக்கலும் எழப்போவதில்லை என்கின்றனர் அரசு ஊழியர் சங்கத்தினர். ஏனெனில், 1983-இல் எம்ஜிஆர் ஆட்சியில் சாராயக் கடைகளை மூடியபோது அதில் பணிபுரிந்த 2 ஆயிரம் ஊழியர்களை அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் என பல்வேறு பணிகளுக்கு நியமிக்கப்பட்டனர்.
இதேபோல, 2002-இல் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக விருப்பத்தின் பேரில் பணியில் சேர்ந்த 10 ஆயிரம் தாற்காலிக ஊழியர்களுக்கு சிறப்புத் தேர்வு நடத்தி தகுதியானவர்களை 2008-இல் பணிவரன்முறைப்படுத்தியுள்ளது தமிழக அரசு. 2013-ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசுடமையாக்கியதால் அதில் பணிபுரிந்த ஊழியர்கள் அரசின் பல்வேறு துறைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். எனவே, டாஸ்மாக் பணியாளர்களையும் அரசின் பல்வேறு துறைகளில் பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் கு. பால்பாண்டியன் கூறியது:
மதுக்கடைகளை மூடியதால் வேலையிழந்துள்ள 20 ஆயிரம் பேருக்கும், அரசின் கொள்கையால் இனி வரும் காலங்களில் மூடப்படவிருக்கும் கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் உத்தரவாதம் அளிக்க, அவரவர் கல்வித்தகுதிக்கேற்ப மாற்றுப் பணி வழங்க வேண்டும். நியாய விலைக்கடைகளில் விற்பனையாளர், எடையாளராக நியமிக்கலாம். அரசு மருத்துவமனைகள், பொதுத்துறை நிறுவனங்களில் உதவியாளர் பணியிடங்களில் நியமிக்கலாம். பட்டதாரிகளை அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர் பணிக்கு நியமிக்கலாம். ஆசிரியர் படிப்பு முடித்தவர்களை பள்ளிகளில் இப்போதுள்ள காலிப் பணியிடங்களில் நியமிக்கலாம்.
அரசு துறைகளில் மட்டும் லட்சக்கணக்கில் காலிப் பணியிடங்கள் உள்ளதை அரசே ஒப்புக் கொள்கிறது. ஆனால், வேலையிழந்தவர்களுக்கு மாற்றுப் பணி வழங்க மௌனம் சாதித்து வருகிறது என்றார் அவர்.
விரைவில் நல்ல செய்தி வரும்
டாஸ்மாக் பணியாளர்களது பல்வேறு கட்ட போராட்டங்களால், வேலையிழந்த 20 ஆயிரம் பேருக்கு இப்போதுள்ள கடைகளில் கூடுதல் நியமனம் என்ற அடிப்படையில் பணி வழங்கப்பட்டுள்ளது தங்களுக்கு கிடைத்துள்ள முதல் வெற்றி என சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஜி.வி.ராஜா தெரிவித்தார். மேலும், அவர் கூறியது:
மாற்றுப் பணி வழங்குவது தொடர்பாக 30 ஆயிரம் டாஸ்மாக் ஊழியர்களின் கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்களை தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலர் நிரஞ்சன் மார்டி கேட்டுப் பெற்றுள்ளார். வரும், 20-ஆம் தேதி திருச்சியில் குடும்பத்துடன் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, அதற்கு முன்பாக தமிழக அரசிடம் இருந்து நல்ல செய்தி வரும் என்ற எதிர்பார்ப்புள்ளது என்றார்.
 

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024