Tuesday, June 13, 2017

நீட்’ தேர்வு முடிவை வெளியிடலாம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு



மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு முடிவை வெளியிட மதுரை ஐகோர்ட்டு விதித்த இடைக்கால தடையை நேற்று ரத்து செய்த சுப்ரீம் கோர்ட்டு, தேர்வு முடிவை வெளியிடலாம் என்று உத்தரவிட்டது.
ஜூன் 13, 2017, 05:45 AM
மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு முடிவை வெளியிட மதுரை ஐகோர்ட்டு விதித்த இடைக்கால தடையை நேற்று ரத்து செய்த சுப்ரீம் கோர்ட்டு, தேர்வு முடிவை வெளியிடலாம் என்று உத்தரவிட்டது.

புதுடெல்லி

இந்த ஆண்டு முதல் இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு ‘நீட்’ என்ற தேசிய தகுதி நுழைவுத்தேர்வை நடத்தி மாணவர்களை சேர்க்க சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) முடிவு செய்தது.

நீட் தேர்வு

இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சுப்ரீம் கோர்ட்டும், நீட் தேர்வின் அடிப்படையில்தான் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 7-ந்தேதி நடைபெற்ற நீட் தேர்வில் நாடு முழுவதும் 12 லட்சம் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள். தமிழ்நாட்டில் 85 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள்.

ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட 10 மொழிகளில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவு கடந்த 8-ந்தேதி வெளியாவதாக இருந்தது.

ஐகோர்ட்டு இடைக்கால தடை

இதற்கிடையே, நீட் தேர்வில் கேள்விகள் ஒரே மாதியாக கேட்கப்படவில்லை என்றும், கேள்வித்தாள் பாரபட்சமாக இருந்ததாகவும் கூறி சில மாணவிகள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பாக அவர்கள் தாக் கல் செய்த மனுவில் இந்தி, குஜராத்தி மொழிகளின் வினாத்தாள்களில் கேட்கப்பட்ட கேள்விகள் எளிமையாக இருந்ததாகவும், தமிழ் உள்ளிட்ட சில மொழிகளின் வினாத்தாள்களில் கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், எனவே நீட் தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு நீட் தேர்வு முடிவை வெளியிட கடந்த மாதம் 24-ந்தேதி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

இதை எதிர்த்து சி.பி.எஸ்.இ. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பி.சி. பந்த், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சி.பி.எஸ்.இ. சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மணிந்தர் சிங் வாதாடுகையில் கூறியதாவது:-

மாநில மொழிகள்

மதுரை ஐகோர்ட்டு விதித்துள்ள இடைக்கால தடை, நீட் தேர்வு தொடர்பாக ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவு மற்றும் இந்த தேர்வை நடத்தி முடிவை வெளியிடுவதற்காக விதிக்கப்பட்ட காலக்கெடு ஆகியவற்றுக்கு எதிராக அமைந்து உள்ளது. இந்த ஆண்டு ஆங்கிலம் இந்தி தவிர, சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் 8 மாநில மொழிகளில் இந்த தேர்வு நடத்தப்பட்டு உள்ளது.

10½ லட்சம் பேர் ஆங்கிலம் மற்றும் இந்தியில் தேர்வு எழுதி இருக்கிறார்கள். 1 லட்சத்து 30 ஆயிரத்தில் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் மற்ற மாநில மொழிகளில் தேர்வு எழுதி இருக்கிறார்கள்.

கேள்வித்தாள் மாற்றம் ஏன்?

இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஒரே கேள்வித்தாள் இருந்தது. மாநில மொழிகளில் கேள்வித்தாள்கள் வேறு மாதிரி அமைக்கப்பட்டு இருந்தன. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையை விட பிற மொழிகளில் எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால், அந்த மொழிகளில் கேள்விகள் மாற்றி அமைக்கப்பட்டு இருந்தன.

அவற்றில் ஏதாவது ஒரு மொழி கேள்வித்தாளில் உள்ள ஏதாவது கேள்விகள் ரகசியமாக வெளியானாலும், பெருவாரியான மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக கேள்விகள் இவ்வாறு மாற்றி அமைக்கப்பட்டு இருந்தன. ஆனால் அனைத்து கேள்வித்தாள்களும் ஒரே அளவில் அமைக்கப்பட்டு இருந்தன. இதனை நிபுணர்களும் உறுதி செய்து இருக்கிறார்கள்.

சுமார் 12 லட்சம் பேர் எழுதியுள்ள நீட் தேர்வின் முடிவு கடந்த 8-ந்தேதியன்று வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால் மதுரை ஐகோர்ட்டின் உத்தரவால் தேர்வு முடிவை வெளியிட முடியாமல் போனது.

இடைக்கால தடை ரத்து

எனவே மாணவர்களின் நலன் கருதி, தேர்வு முடிவை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், நீட் தேர்வு குறித்து குஜராத் ஐகோர்ட்டிலும் ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் உள்ள வழக்குடன் குஜராத் ஐகோர்ட்டில் உள்ள வழக்கு விசாரணையையும் சுப்ரீம் கோர்ட்டுக்கே மாற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதைத்தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டு விதித்த இடைக் கால தடையை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

தேர்வு முடிவை வெளியிட அனுமதி

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவு, உரிய கால அட்டவணைக்குள் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய உத்தரவுக்கு எதிரானது. எனவே ஐகோர்ட்டின் தடை உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. நீட் தேர்வின் முடிவை சி.பி.எஸ்.இ. வருகிற 26-ந்தேதிக்குள் வெளியிட அனுமதி அளிக்கப்படுகிறது.

அதே நேரத்தில் மாணவர் சேர்க்கையும், கலந்தாய்வும் இந்த வழக்கின் இறுதித்தீர்ப்புக்கு உட்பட்டது.

விசாரிக்கக்கூடாது

இந்த ஆண்டு நீட் தேர்வு தொடர்பான வழக்குகளை எந்த ஐகோர்ட்டும் விசாரிக்கக்கூடாது. சென்னை மற்றும் குஜராத் ஐகோர்ட்டுகளில் வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளிடம் விளக்கம் கோரி நோட்டீசு அனுப்ப வேண்டும். கோடை விடுமுறைக்கு பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.

எப்போது வெளியாகும்?

வருகிற 26-ந்தேதிக்குள் நீட் தேர்வு முடிவை வெளியிடலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி இருப்பதால், தேர்வு முடிவு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024