Thursday, June 15, 2017

3 பொறியியல் கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை 249 -இல் 50 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் தேர்ச்சி அண்ணா பல்கலை. வெளியிட்டுள்ள பட்டியலில் அம்பலம்

By DIN  |   Published on : 14th June 2017 03:28 AM  |   
annauniv1
அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய 2016 நவம்பர் -டிசம்பர் பருவத் தேர்வுகளில் மூன்று பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது.
மேலும், இரண்டு பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்திலும், 67 கல்லூரிகளில் இரட்டை இலக்கத்திலும் மாணவர் தேர்ச்சி விகிதம் இருப்பதும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் மாணவர் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையிலான பொறியியல் கல்லூரிகளின் பட்டியலில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவிலேயே பிற மாநிலங்களைவிட தமிழகத்தில்தான் அதிக பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இங்கு 523 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் சிறந்த கல்லூரிகளைத் தேர்வு செய்வது என்பது மாணவர்களுக்கும், அவர்களுடைய பெற்றோருக்கும் மிகப் பெரிய சவாலாக இருந்து வருகிறது.
இதைக் கருத்தில் கொண்டு, அனைத்துப் பொறியியல் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகித விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்தப் பட்டியலை வெளியிட உத்தரவிட்டது.
இதையடுத்து, பொறியியல் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகித விவரம் கடந்த 2014 -15 கல்வியாண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது.
தற்போது 2017 -18 கல்வியாண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை வரும் 27 -ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த நிலையில், 2016 -ஆம் ஆண்டு ஏப்ரல் -மே மற்றும் நவம்பர் -டிசம்பர் பருவத் தேர்வுகளின் மாணவர் தேர்ச்சி விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கிறது.
இதில், 2016 ஏப்ரல் -மே பருவத் தேர்வுக்கு 516 பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் தேர்ச்சி விகித விவரங்களும், நவம்பர் -டிசம்பர் பருவத் தேர்வுக்கு 506 பொறியியல் கல்லூரிகளுக்கான விவரங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
பல்கலைக்கழகத்தின் aucoe.annauniv.edu  என்ற இணையதளத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த விவரங்களை, பொறியியல் படிப்புகளில் சேரவுள்ள மாணவர்களும், அவர்களுடைய பெற்றோரும் பார்த்து எந்தக் கல்லூரியைத் தேர்வு செய்வது என்பதை முடிவு செய்யலாம் என்கின்றனர் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
ஒருவர் கூட தேர்ச்சி இல்லை: 2016 நவம்பர்-டிசம்பர் பருவத் தேர்வைப் பொருத்தவரை 3 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. அதாவது கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஒருவர் மட்டும் பருவத் தேர்வில் பங்கேற்று, தோல்வியடைந்துள்ளார். நெல்லையில் உள்ள ஒரு கல்லூரியில் 25 பேர் தேர்வில் பங்கேற்று, ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒரு தனியார் கல்லூரியில் 57 பேர் தேர்வில் பங்கேற்றுள்ளனர். அவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.
மேலும், திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு கல்லூரியில் 255 பேர் தேர்வெழுதி 8 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேனியில் உள்ள ஒரு கல்லூரியில் 67 பேர் பங்கேற்றதில் 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்தப் பருவத் தேர்வில் 67 பொறியியல் கல்லூரிகளில் இரட்டை இலக்கத்தில் மட்டுமே மாணவர் தேர்ச்சி இடம்பெற்றுள்ளது. மேலும் 249 பொறியியல் கல்லூரிகள் 50 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளன.
2016 ஏப்ரல்-மே பருவத் தேர்வைப் பொருத்தவரை திண்டுக்கல், நெல்லை, தேனி, வேலூர், கோவை ஆகிய பகுதிகளில் உள்ள 5 பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர் தேர்ச்சி விகிதம் உள்ளது. இதில், தேனி கல்லூரியில் 88 பேர் தேர்வெழுதி 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். திண்டுக்கல் கல்லூரியில் 94 பேர் எழுதி 8 பேரும், கோவை கல்லூரியில் 54 பேர் எழுதி 3 பேரும், நெல்லை கல்லூரியில் 43 பேர் தேர்வெழுதி 9 பேரும், வேலூர் கல்லூரியில் 14 பேர் தேர்வெழுதி 3 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும், 46 கல்லூரிகளில் இரட்டை இலக்கத்திலும், 184 கல்லூரிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவும்தான் மாணவர் தேர்ச்சி விகிதம் உள்ளது.
100 சதவீத தேர்ச்சி இல்லை: இந்த இரண்டு பருவத் தேர்வுகளிலும் எந்தவொரு பொறியியல் கல்லூரியும் 100 சதவீத தேர்ச்சி பெறவில்லை.
நவம்பர் - டிசம்பர் பருவத் தேர்வில் 94.74 சதவீத மாணவர் தேர்ச்சியுடன் சேலம் இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் 94.65 சதவீத மாணவர் தேர்ச்சியுடன் கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமும், 93.47 சதவீத மாணவர் தேர்ச்சியுடன் கரூர் வி.எஸ்.பி. பொறியியல் கல்லூரிகளும் உள்ளன.இவற்றுடன் சேர்த்து மொத்தம் 8 கல்லூரிகள் மட்டுமே 90 சதவீதத்துக்கு மேல் மாணவர் தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளன.
இதேபோல், ஏப்ரல்-மே பருவத் தேர்வில் 98.95 சதவீத மாணவர் தேர்ச்சி விகிதத்துடன் நாமக்கல் விவேகானந்தா பெண்கள் பொறியியல் கல்லூரி முதலிடத்தில் உள்ளது.
இதற்கு அடுத்த இடங்களில் 98.02 சதவீத மாணவர் தேர்ச்சி விகிதத்துடன் விருதுநகர் மெப்கோ ஸ்கெலங்க் பொறியியல் கல்லூரியும், 97 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமும் இடம்பெற்றுள்ளன. இவற்றுடன் சேர்த்து இந்தப் பருவத் தேர்விலும் மொத்தம் 8 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே 90 சதவீதத்துக்கு மேல் மாணவர் தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளன.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024