Sunday, June 18, 2017

பெருமாள் கோயில்களில் சடாரி வைப்பதன் தத்துவம் என்ன?

BHUVANESHWARI K

பெருமாள் கோயில்களில் பக்தர்களின் தலையில் சடாரி வைப்பார்கள். பார்ப்பதற்கு கிரீடம்போல் இருப்பதால், நம் தலையில் கிரீடம் வைப்பதாக நாம் நினைத்துக்கொள்வோம். உண்மையில் சடாரி என்பது, கிரீடம் போன்ற ஒரு பீடத்தின் மீது வைக்கப்பட்டிருக்கும் பகவானின் பாதங்களையே குறிக்கும். இதன் பின்னணியில் வைகுண்டத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் அமைந்திருக்கிறது. முதலில், அந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக ராமாயண காலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போம்.




தந்தையின் வார்த்தைகளைக் காப்பாற்ற, மரவுரி தரித்து வனவாசம் சென்றார் ஶ்ரீராமன். அவருடன் கணவனைப் பிரிய மனமில்லாத சீதையும், அண்ணனுக்கு சேவை செய்வதையே தன் பிறவிப் பயனாகக் கருதிய லட்சுமணனும் உடன் சென்றனர். தம்மை நாடி வருவோரின் பாவங்களைத் தீர்க்கும் கங்கை நதியின் கரையை அடைந்த ராமபிரானை வரவேற்ற குகன், தன்னுடைய பரிவாரங்களுடன் அங்கே இருக்கிறான்.

என்றுமே மனதைச் சமநிலையில் வைத்திருக்கும் ராமபிரானின் உள்ளத்தில் அன்று குழப்பமே மிஞ்சி நின்றது. தனக்கு ஏற்பட்ட தர்மசங்கடத்தை எப்படிச் சமாளிப்பது என்பதில் ஏற்பட்ட குழப்பம்தான் அது. தர்மசங்கடத்துக்குக் காரணமாக அமைந்தது, பரதனின் வரவும், கண்ணீர் பெருக அவன் நின்ற நிலையும்.

தசரதன், தான் கைகேயிக்குக் கொடுத்த இரண்டு வரங்களைக் காப்பதற்காகத் தன் உயிரினும் மேலான ராமனை கானகம் அனுப்பினான். இதை அறிந்த பரதன், தன் தமையன் வனம் சென்றதற்குத் தானும் காரணமாக ஆகிவிட்டதை எண்ணி வருந்தினான். அயோத்தியை ஆள்வதற்கு தமையனுக்கே உரிமை உள்ளது என்றும், தனக்கு அரியாசனம் ஏற்க விருப்பம் இல்லை என்றும் கூறி, தன் பரிவாரங்களுடன் காட்டுக்கு வந்தான்.

'எண்ணில் கோடி இராமர்கள் என்னிலும் அண்ணல் நின் அருளுக்கு அருகாவரோ' என்று கோசலையின் வாயிலாகக் கம்பன் பெருமைப்படுத்திய பரதன், ராமபிரான் திரும்பி வந்து அயோத்தியின் சிம்மாசனத்தை ஏற்க வேண்டும் என்று பிரார்த்தித்தான்.

ஆனால், பரதனின் வேண்டுகோளை மறுத்த ராமபிரான், பரதன் சொல்வதுபோல் தான் அரசுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டால், தந்தைக்குக் கொடுத்த வாக்கை மீறியதுபோல் ஆகும் என்று மறுத்துவிட்டார். அதே நேரம், பரதனுக்கும் நாட்டை ஆள்வதில் விருப்பம் இல்லை. சிக்கலான இந்த நிலைக்கு ஒரு தீர்வாகத்தான், பரதன் ராமபிரானின் பாதுகைகளைப் பெற்றான். தன் தலை மீது வைத்து அயோத்தி எல்லையில் இருந்த நந்திகிராமத்துக்கு வந்தான். ராமன் துறந்த திருமுடியை சிம்மாசனத்தின் மீது வைத்தான். அதன் மேல் ராமபிரானின் திருவடியை வைத்து பட்டாபிஷேகம் செய்து, ராமபிரானின் சேவகனாக ஆட்சிசெய்து வந்தான்.



'ராமபிரான் அவதார புருஷராக இருந்தாலும்கூட, தேவர்களுக்கு நிகரான சூரியகுல அரசர்கள் அமர்ந்து ஆட்சிசெய்த சிம்மாசனத்தில், பாதுகைகளையா வைப்பது? ராமபிரானின் வேறு ஏதேனும் ஒரு பொருளைப் பெற்று வைத்திருக்கலாமே? மேலும், பரதன் பாதுகைகளை அரியணையின் மீது நேரடியாக வைக்காமல், அவரின் திருமுடியை வைத்து அதன்மேல்தான் திருவடிகளை வைத்தான். இது எப்படிச் சரியாகும்?' என்ற கேள்வி எழுவது எல்லோருக்கும் இயல்புதான்.

இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதுபோல் அமைந்ததும், வைகுண்டத்தில் நடைபெற்றதுமான ஒரு சம்பவத்தை இங்கே பார்ப்போம்.

ஒருமுறை வைகுண்டத்தில் மகாவிஷ்ணு சயனம்கொள்வதற்காகச் சென்றார். எப்போதும் இல்லாத வழக்கமாக, அவர் தன் பாதுகைகளுடனேயே ஆதிசேஷன் மீது சயனம் கொண்டார். அந்தச் சமயம் முனிவர்கள் வந்திருக்கும் செய்தியைக் கேட்டு, அவர்களைக் காண தன் பாதுகைகளை ஆதிசேஷன் மீது வைத்துச் சென்றார்.

அவர் சென்றவுடன் ஆதிசேஷன் மீது இருந்த திருமுடியும், சங்கும், சக்கரமும் அந்த பாதுகைகளைத் தூற்றத் தொடங்கின. `பகவானின் திருமுடியை அலங்கரிக்கும் நான் இருக்கும் இடத்தில் நீ எப்படி இருக்கலாம்?’, `பாதங்களை அலங்கரிக்கும் நீ ஆதிசேஷன் மீது அமர்வதற்கு அருகதை அற்றவன்’ என்றெல்லாம் கூறின. இன்னும் கடினமான வார்த்தைகளால் தூற்றவும் தொடங்கின.

எவ்வளவுதான் பொறுத்துக்கொள்வது? ஒரு கட்டத்தில் கோபம்கொண்ட பாதுகைகள், 'பகவானை தரிசிக்கவரும் ரிஷிகளும், முனிவர்களும் என்னையே வணங்குகின்றனர். நீங்கள் அவரது கரத்தில் இருந்தாலும் உங்களை யாரும் வணங்குவதில்லை' என்று கூறின. ஆனாலும், அவை மூன்றும் விடுவதாக இல்லை. 'கௌரவத்தால் உயர்ந்த நாங்கள் இருக்கும் இடத்தில் நீ இருக்கக் கூடாது' என்று கூறின.

இதைக் கேட்டு மனம் நொந்த பாதுகைகள் விஷ்ணுவிடம் முறையிட்டன. இதைக் கேட்ட பகவான் புன்னகைத்தவாறே, 'அனைத்தும் நாம் அறிவோம். எனது பார்வையில் எல்லாம் ஒன்றேயாகும். இதை அறியாத சங்கும், சக்கரமும், திருமுடியும் இதற்கான பலனை ஒருநாள் அனுபவிக்கும்' என்று கூறினார்.



இதன் பலனாகவே திரேதா யுகத்தில் ஶ்ரீராமாவதாரத்தில் சங்கும் சக்கரமும் பரத, சத்துருக்ணனாகப் பிறந்தன. பாதுகைகளை இழிவுபடுத்திய அவை, தமது இந்தப் பிறப்பில் பாதுகைகளைத் தம் தலையில் சுமந்துசென்றன. மேலும், அந்தப் பாதுகைகளை திருமுடி மீது வைத்ததற்கு இதுவே காரணமாக அமைந்தது.

இறைவனுக்கு முன்னே அனைவரும் ஒன்றே. அவன் சந்நிதியில் பணக்காரன் - ஏழை; உயர்ந்த ஜாதி - தாழ்ந்த ஜாதி என்ற பாகுபாடுகள் இல்லை என்ற தத்துவத்தை நமக்கு உணர்த்தவே இப்படி 'சடாரி' வைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 30.12.2024