'ஸ்வீட்' எடுங்க... கொண்டாடுங்க : மகிழ்ச்சி மழையில் இந்தியா, மண்ணைக் கவ்வியது பாக்.,
dinamalar
பர்மிங்காம்: மழை அடிக்கடி குறுக்கிட்ட சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் இந்திய வீரர்கள் சாதித்துக் காட்டினர். வான் மழையை மிஞ்சிய கேப்டன் கோஹ்லி, யுவராஜ் சிங் ரன் மழை பொழிந்தனர். இவர்களது அபார ஆட்டம் கைகொடுக்க, 'டக்வொர்த்-லீவிஸ்' விதிமுறைப்படி இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. மீண்டும் 'நமத்து போன பட்டாசாக' சொதப்பிய பாகிஸ்தான் அணி 'சரண்டர்' ஆனது. இதனால் வழக்கமான பரபரப்பு இல்லாமல், போட்டி 'உப்புசப்பின்றி' முடிந்தது.இங்கிலாந்து மற்றும் வேல்சில் 8வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. நேற்று பர்மிங்காமில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.
அஷ்வின் இல்லை
ஆடுகளம் 'வேகத்துக்கு' ஒத்துழைக்கும் என்பதால், இந்திய அணியில் நட்சத்திர 'ஸ்பின்னர்' அஷ்வின் நீக்கப்பட்டார். 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது, 'பவுலிங்' தேர்வு செய்தார்.
நல்ல அடித்தளம்
இந்திய அணிக்கு ரோகித் சர்மா, தவான் சேர்ந்து நல்ல அடித்தளம் அமைத்தனர். இந்திய அணி 9.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 46 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட, ஆட்டம் 50 நிமிடங்கள் தாமதமானது. பின் ஆட்டம் துவங்கியதும் இந்திய வீரர்கள் ரன் வேகத்தை அதிகரித்தனர். ஷதாப் கான் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரோகித் சர்மா அரைசதம் கடந்தார். தவானும் அரைசதம் கடக்க, போட்டியில் சூடு பிடித்தது. ஷதாப் 'சுழலில்' தவான்(68) அவுட்டானார்.
48 ஓவர் போட்டி
இந்திய அணி 33.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட, 48 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டது. ஷதாப் பந்தை தட்டி விட்ட கோஹ்லி வீணாக ஒரு ரன்னுக்கு ஓடினார். மறுபுறத்தில் இருந்து ஓடி வந்த ரோகித் சர்மா 'டைவ்' அடித்து 'கிரீசை' தொட்டார். இது தொடர்பாக 'டிவி' அம்பயரிடம் சந்தேகம் கேட்கப்பட்டது. 'ரீப்ளே'வில் பேட், 'கிரீசில்' இருந்து லேசாக விலகி இருப்பது தெரிய வர, சர்ச்சைக்குரிய முறையில் ரோகித் சர்மா(91) ரன் அவுட்டானார்.
யுவராஜ் அரைசதம்
கடைசி கட்டத்தில் யுவராஜ், கோஹ்லி சேர்ந்து பாகிஸ்தான் பவுலர்களை ஓட ஓட 'அடித்தனர்'. ஹசன் அலி ஓவரில் யுவராஜ் ஒரு பவுண்டரி, கோஹ்லி ஒரு சிக்சர் அடிக்க மொத்தம் 17 ரன்கள் எடுக்கப்பட்டன. யுவராஜ்(53) எல்.பி.டபிள்யு., ஆனார்.
கோஹ்லி 'ஸ்பெஷல்'
போகப் போக கோஹ்லி யின் 'ஸ்பெஷல்' ஆட்டத்தை காண முடிந்தது. ஹசன் அலி ஓவரில் நின்ற இடத்தில் இருந்தே அழகாக பவுண்டரி அடித்தார். பின் ஒரு அற்புத சிக்சர் விளாசினார். ஹர்திக் பாண்ட்யாவும் ரன் மழையில் நனைந்தார். இவர், இமாத் வாசிம் ஓவரில் வரிசையாக மூன்று சிக்சர்கள் விளாசினார். கடைசி பந்தில் கோஹ்லியும் ஒரு பவுண்டரி அடிக்க, இந்த ஓவரில் மட்டும் மொத்தம் 23 ரன்கள் எடுக்கப்பட்டன. கடைசி 4 ஓவரில் 72 ரன்கள் எடுக்கப்பட்டன. இந்திய அணி 48 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 319 ரன்கள் குவித்தது. கோஹ்லி 81(68 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), பாண்ட்யா(20) அவுட்டாகாமல் இருந்தனர்.
விக்கெட் மடமட
பின் களமிறங்கிய பாகிஸ்தானுக்கு 'டக்வொர்த்-லீவிஸ்' விதிமுறைப்படி 48 ஓவரில் 324 ரன்கள் எடுக்க வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 4.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் எடுத்த போது, மழை குறுக்கிட, 41 ஓவரில் 289 ரன்கள் எடுக்க வேண்டுமென இலக்கு மாற்றப்பட்டது. இந்திய 'வேகங்களிடம்' ஷேசாத்(12), பாபர்(8) சரணடைந்தனர். அரைசதம் எட்டிய நிலையில் அசார் அலி(50) நடையை கட்டினார். மற்ற பேட்ஸ்மேன்களும் தாக்குப்பிடிக்கவில்லை ஜடேஜாவின் துல்லிய 'த்ரோ'வில் சோயப் மாலிக்(15) ரன் அவுட்டானார். ஹபீஸ்(33) பெரிதாக சோபிக்கவில்லை.பாகிஸ்தான் அணி 33.4 ஓவரில் 164 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.
'டாப்-ஆர்டர்' அசத்தல்
'டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்களான ரோகித் (91), தவான் (68), கோஹ்லி (81*), யுவராஜ் (53) அரைசதம் கடந்தனர். இதன்மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில், 3வது முறையாக இந்திய அணியின் முதல் 4 பேட்ஸ்மேன்கள் அரைசதம் கடந்த சம்பவம் அரங்கேறியது.
பவுலிங்கில் ஏமாற்றிய பாகிஸ்தானின் வகாப் ரியாஸ், 8.4 ஓவரில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல் 87 ரன்கள் வழங்கினார். இதன்மூலம் சாம்பியன்ஸ் டிராபி அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் வழங்கிய பவுலரானார். இதற்கு முன், ஜிம்பாப்வே அணியின் பன்யாங் கரா (86 ரன், எதிர்-இங்கிலாந்து, 2004) ரன் வள்ளலாக இருந்தார். இவர்களை அடுத்து, இலங்கையின் மலிங்கா (85 ரன், எதிர்-நியூசிலாந்து, 2009), தென் ஆப்ரிக்காவின் டிசாட்சொபே (83 ரன், எதிர்-இந்தியா, 2013) உள்ளனர்.
நேற்று, 91 ரன்கள் எடுத்த இந்தியாவின் ரோகித் சர்மா, ஒருநாள் போட்டி அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் தனது அதிகபட்ச ரன்னை பதிவு செய்தார். இதற்கு முன், 2012ல் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் 68 ரன்கள் எடுத்திருந்தது அதிகபட்ச ரன்னாக இருந்தது. இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக 12 ஒருநாள் போட்டியில் விளையாடிய ரோகித், 5 அரைசதம் உட்பட 537 ரன்கள் எடுத்துள்ளார்.
முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் சேர்த்த இந்தியாவின் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி, சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிகபட்சமாக 3வது முறையாக ஒரு இன்னிங்சில் 100 அல்லது அதற்கு மேல் ரன்கள் சேர்த்தது. இதற்கு முன், தென் ஆப்ரிக்கா (127 ரன், முதல் விக்கெட், 2013), வெஸ்ட் இண்டீஸ் (101 ரன், முதல் விக்கெட், 2013) அணிகளுக்கு எதிராக அதிக ரன்கள் சேர்த்தது.இவர்களை அடுத்து, வெஸ்ட் இண்டீசின் கெய்ல் - சந்தர்பால் மற்றும் தென் ஆப்ரிக்காவின் கிப்ஸ் - ஸ்மித் ஜோடிகள் தலா 2 முறை இந்த இலக்கை எட்டின.
பேட்டிங்கில்அசத்திய இந்திய அணி 319 ரன்கள் குவித்தது. இதன்மூலம் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்தது. இதற்கு முன், 2009ல் செஞ்சுரியனில் நடந்த போட்டியில் 248 ரன்கள் எடுத்தது அதிகபட்சமாக இருந்தது. * தவிர இது, சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவின் 2வது அதிகபட்ச ஸ்கோர். கடந்த 2013ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 331 ரன்கள் குவித்தது அதிகபட்ச ரன்னாக உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி அரங்கில், ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் சேர்த்த ஜோடி வரிசையில் இந்தியாவின் ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடி 2வது இடம் பிடித்தது. இதுவரை 6 இன்னிங்சில் 518 ரன்கள் குவித்தது. முதலிடத்தில் வெஸ்ட் இண்டீசின் கெய்ல்-சந்தர்பால் ஜோடி (635 ரன், 9 இன்னிங்ஸ்) உள்ளது.
பாக்., பவுலர்கள் காயம்
நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்களான முகமது ஆமிர், வகாப் ரியாஸ் காயம் காரணமாக பாதியில் 'பெவிலியன்' திரும்பினர்.
பீல்டிங் சொதப்பல்
பாகிஸ்தான் வீரர்களின் பீல்டிங் சொதப்பலாக இருந்தது. ஷதாப் கான் வீசிய 38.4வது ஓவரில் யுவராஜ் சிங் துாக்கி அடித்த பந்தை ஹசன் அலி நழுவவிட்டார். அப்போது 8 ரன்கள் மட்டும் எடுத்திருந்த யுவராஜ், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அரைசதம் கடந்தார். இதேபோல வகாப் ரியாஸ் வீசிய 43.6வது ஓவரில் கோஹ்லி கொடுத்த 'கேட்ச்' வாய்ப்பை பகார் ஜமான் கோட்டைவிட்டார்.
No comments:
Post a Comment