Monday, June 19, 2017

சேலம் ரயில்வே ஸ்டேஷனில் சிக்னலும் போடல... கார்டும் ஏறல... பறந்தது ஆலப்புழா எக்ஸ்பிரஸ்

2017-06-18@ 02:31:24




* நடுவழியில் 1 மணி நேரம் நிறுத்தம்

* டிரைவர்களிடம் அதிரடி விசாரணை

சேலம்: சேலத்தில் ரயில் இன்ஜின் டிரைவருக்கு சிக்னல் கொடுக்கும் கார்டு ஏறுவதற்கு முன், ஆலப்புழா எக்ஸ்பிரஸ் சென்னைக்கு புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. விதியை மீறி ரயிலை எடுத்துச் சென்ற டிரைவர்களிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து சென்னைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (22640) நேற்று வழக்கம்போல் அதிகாலை 1.20 மணிக்கு சேலத்திற்கு வந்தது. அப்போது ரயிலின் கடைசி பெட்டியில் நின்றபடி பச்சை விளக்கை காட்டி சிக்னல் கொடுக்கும் கார்டு மது என்பவர், கீழே இறங்கி அருகில் பார்சல் அனுப்பும் பெட்டியை ஆய்வு செய்து கொண்டிருந்தார். அதிகளவில் பார்சல்கள் இறக்கி, ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் திடீரென ரயில் புறப்பட்டது. இதை சற்றும் எதிர்பார்க்காததால் கார்டு மதுவால் தனக்குரிய பெட்டியில் ஏற முடியவில்லை. உடனே, நான் சிக்னல் கொடுப்பதற்கு முன் எப்படி ரயிலை எடுத்துச் செல்லலாம்? என வாக்கி டாக்கியில் பேசியுள்ளார். அதையும் இன்ஜினில் இருந்து இரு டிரைவர்களும் கவனிக்கவில்லை. இதனால், ரயில் சேலத்தை கடந்து தின்னப்பட்டியை நோக்கிச் சென்றது. இதையடுத்து நிலைய மேலாளருக்கு கார்டு மது தகவல் கொடுத்தார். உடனடியாக தின்னப்பட்டி ஸ்டேஷன் மாஸ்டருக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் கொடுத்து, ஆலப்புழா-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தச் செய்தனர். வேகமாக சென்று கொண்டிருந்த ரயில், நடுவழியில் திடீரென ஒரு ஸ்டேஷனில் நின்றதால் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே அந்த பகுதியில், ரயில்களை நிறுத்தி பயணிகளிடம் நகைபறிப்பு சம்பவம் நடந்தது என்பதால் பெண்கள் பீதி அடைந்தனர். சுமார் 1 மணி நேரத்திற்கு பின், தின்னப்பட்டிக்கு கோவையில் இருந்து சென்னை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தடைந்தது. அந்த ரயிலில் வந்திறங்கிய கார்டு மது, ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி பச்சை விளக்கை காட்டி சிக்னல் கொடுத்தார். இதையடுத்து ஒரு மணி நேர தாமதத்திற்கு பின் அந்த ரயில் புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் நிம்மதி அடைந்தனர். இச்சம்பவம் பற்றி, சேலம் ரயில்வே கோட்ட போக்குவரத்து பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் தங்களின் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ரயில் புறப்பட, கடைசி பெட்டியில் இருக்கும் கார்டு பச்சை விளக்கை எரியச் செய்து சிக்னல் கொடுப்பதோடு, வாக்கி டாக்கியிலும் புறப்படலாம் என தகவல் கொடுக்க வேண்டும். இத்தகவலை பெற்ற பின்னர் தான், இன்ஜின் டிரைவர்கள் ரயிலை எடுக்க வேண்டும். ஆனால், ரயிலில் கார்டு ஏறாத நிலையில், சிக்னல் ஏதும் பெறாமல் தன்னிச்சையாக டிரைவர்கள் ரயிலை எடுத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் டிரைவர்கள் இருவர் மீதும் துறைரீதியான நடவடிக்கை பாயும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் ரயில்வே ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

400 flights delayed, 45 cancelled, 19 diverted at IGI

400 flights delayed, 45 cancelled, 19 diverted at IGI  05.01.2025 New Delhi : Dense fog, which led to zero visibility for over eight hours, ...