Friday, June 2, 2017

தேசிய செய்திகள்

தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு : டி.டி.வி. தினகரனுக்கு நிபந்தனை ஜாமீன்

தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், டி.டி.வி.தினகரனை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய டெல்லி தனிக்கோர்ட்டு உத்தரவிட்டது.

ஜூன் 02, 2017, 04:45 AM

புதுடெல்லி,

தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், டி.டி.வி.தினகரனை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய டெல்லி தனிக்கோர்ட்டு உத்தரவிட்டது. அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.டி.டி.வி.தினகரன் கைது

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் 25–ந் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா ஏஜெண்டு நரேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். டெல்லி தனிக்கோர்ட்டு உத்தரவின் பேரில் அவர்கள் அங்குள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி தினகரன், மல்லிகார்ஜூனா, சுகேஷ் சந்திரசேகர் ஆகியோர் தனிக்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதில் சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.நிபந்தனை ஜாமீன்

தினகரன், மல்லிகார்ஜூனா ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையின் போது, அவர்களுக்கு ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. விசாரணை முடிந்ததை தொடர்ந்து ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை தனிக்கோர்ட்டு நீதிபதி பூனம் சவுத்ரி தள்ளிவைத்தார்.

இந்த நிலையில் நீதிபதி பூனம் சவுத்ரி நேற்று தினகரன், மல்லிகார்ஜூனா ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை வழங்கினார். அவர்கள் இருவரையும் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார். 14 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பில் 11 பக்கங்கள் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது டெல்லி குற்றப்பிரிவு போலீசார், தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனா தரப்பு வக்கீல்கள் முன்வைத்த வாதங்கள் குறித்து விரிவாக கூறப்பட்டு உள்ளது. மீதி 3 பக்கங்களில் நீதிபதி தன்னுடைய கருத்தையும் முடிவையும் தெரிவித்து உள்ளார்.

நீதிபதியின் தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–சதிச்செயல்

ஜாமீன் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் போது இந்த வழக்கு குறித்து எந்த விதமான முன் முடிவுகளையும் பாரபட்சமான அணுமுறைகளையும் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கில் வழக்கு தொடர்பாக முன்வைக்கப்பட்ட தடயங்கள் மற்றும் சாட்சியங்கள் குறித்த விரிவான ஆய்வை தவிர்க்க வேண்டி இருக்கிறது.

இந்த வழக்கில் விரிவான முறையில் விசாரணை நடக்கும் போது இவை அனைத்தையும் ஆழமாக ஆராய வேண்டிய தேவை உள்ளது. டெல்லி போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் மனுதாரர் சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. என்னுடைய பார்வையில், இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் தடயங்களை வைத்துப் பார்க்கும் போது சதிச்செயல் நடைபெற்றது என்ற அனுமானத்தை அளிக்கிறது.

ஆனால் அனுமானங்களில் அடிப்படையில் சதிச்செயல் தொடர்பான குற்றத்தை நிரூபிக்க முடியாது. வலுவானதும், ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான தடயங்களின் அடிப்படையில் மட்டுமே இந்த குற்றச்செயல் நிரூபிக்கப்பட வேண்டும்.தடை இல்லை

மேலும் மனுதாரரை இனி எந்த வகையான காவலிலும் வைத்து விசாரிக்க தேவை இல்லை. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இடையேயான தொலைபேசி உரையாடல் பதிவுகள் அடங்கிய குறுந்தகடு ஏற்கனவே போலீசாரால் கைப்பற்றப்பட்டு உள்ளது. தினகரனின் செல்போன் கைப்பற்றப்பட்டு உள்ளது. அவரிடம் இருந்து இனி கைப்பற்ற வேண்டியது எதுவும் இல்லை.

குற்றம் சாட்டப்பட்டவர் அ.தி.மு.க. கட்சியின் துணைப் பொதுச்செயலாளர். சமூகத்தில் மிகவும் ஆழமான வேர்களை உடையவர். மேலும் இந்த வழக்கில் லஞ்சம் அளிப்பதாக ஆசை காட்டப்பட்ட அல்லது லஞ்சம் பெறுவதாக கூறப்படும் நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

இந்த வழக்கின் தகுதி குறித்து இப்போதைக்கு எந்த கருத்தையும் பதிவு செய்யாமல், மேலே கூறப்பட்டுள்ள வி‌ஷயங்கள் மற்றும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு பரிசீலனை செய்யும் போது மனுதாரர் தினகரனுக்கு ஜாமீன் வழங்குவதில் எவ்வித தடையும் இல்லை.ரூ.5 லட்சம்

எனவே, அவரை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்படுகிறார். குற்றம் சாட்டப்பட்ட தினகரன் சொந்த ஜாமீன் தொகையாக ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும். மேலும் இருவர் பிணைத் தொகையாக தலா ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும்.

மேலும் இந்த வழக்கு தொடர்பான எந்த ஆதாரத்தையோ, சாட்சியங்களையோ அவர் கலைக்கக் கூடாது. கோர்ட்டின் அனுமதியின்றி அவர் நாட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது. அவர் தனது பாஸ்போர்ட்டை உடனடியாக கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும். அத்துடன், எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.

இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

மேற்கண்ட இதே நிபந்தனைகளுடன் மல்லிகார்ஜூனாவையும் ஜாமீனில் விடுதலை செய்ய நீதிபதி பூனம் சவுத்ரி உத்தரவிட்டார்.இன்று விடுதலை?

பிணைத்தொகை செலுத்துவது உள்ளிட்ட மற்ற சட்ட ரீதியான நடைமுறைகள் நிறைவு பெற்று தினகரனும், மல்லிகார்ஜூனாவும் திகார் சிறையில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக தினகரன் தரப்பு வக்கீல் சி.பரமசிவமும், தினகரனின் உதவியாளர் ஜனார்த்தனனும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...