Sunday, June 4, 2017

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர விவகாரம்... தேர்தல் கமிஷன் முக்கியத் தகவல்!
ர.பரத் ராஜ்

சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பல்வேறு எதிர்க்கட்சிகள், 'மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு உள்ளன. யாருக்கு வாக்கு செலுத்தினாலும் பா.ஜ.க.வுக்கு வாக்கு பதிவாகும்படி அது வடிவமைக்கப்பட்டு உள்ளது' என்று குற்றம் சாட்டின. மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியான சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது. சில கட்சிகள் இதற்கும் ஒருபடி மேலே போய், 'மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு இருக்கும் எனப் பரவலாக புகார்கள் வருவதால், பழையபடி வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்தி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.' என்றும் தெரிவித்தன.



இந்நிலையில்தான் தேர்தல் கமிஷன், 'மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறையில் குறை இருக்கும் என்று சந்தேகிக்கும் கட்சிகள், வாக்குப்பதிவு இயந்திரத்தை சோதனை செய்யலாம்' என்று கூறியிருந்தது. இதையடுத்து அதற்கான நிகழ்ச்சியை நேற்று ஒருங்கிணைத்திருந்தது தேர்தல் கமிஷன். ஆனால் இந்த சோதனை செய்யும் நிகழ்ச்சியில் தேசிய அளவில், தேசியவாத காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே பங்கேற்றன.

அந்தக் கட்சிகளும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதனை செய்யாமல் நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டன.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தலைமை தேர்தல் அதிகாரி நஜீம் ஜைதி, 'இந்திய தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவிகிதம் பாதுகாப்பானவை. அதில் எந்தவித கோளாறுகளும் இல்லை என்று நிரூபணமாகியுள்ளது. இனிமேல் வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதனை செய்ய எந்தவித சவால்களும் ஏற்றுக் கொள்ளப்படாது. இன்று சோதனை செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்ற இரு கட்சிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் எப்படி வேலை செய்யும் என்பதைப் பற்றி தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது.' என்று கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024