Sunday, June 4, 2017

சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுநருக்குக் கிடைத்த டாக்டர் மகள்... நெகிழ்ச்சிக் கதை!

எம்.குமரேசன்


செய்த வினை, நம்மைத் தொடரும் என்பார்கள். எட்டு வருடங்களுக்கு முன் ரிக்‌ஷா ஓட்டுநர் செய்த நன்மைக்கு, இப்போது பலன் கிடைத்துள்ளது. மகள் இல்லாத அந்தத் தந்தைக்கு, ஒரு மகள் கிடைத்துள்ளார். வங்கதேசத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆகாஷ் என்பவர், பப்லு ஷேக் என்கிற ரிக்‌ஷா ஓட்டுநரின் கதையை ஃபேஸ்புக்கில் பதிவிட, அது வைரலானது. அந்தப் பதிவில் சொல்லப்பட்ட விஷயம் இதுதான்!



`நான் ஒரு ரிக்‌ஷா ஓட்டுநர். 34 ஆண்டுகளாக ரிக்‌ஷா ஓட்டிவருகிறேன். மூன்று ஆண் குழந்தைகளுக்குத் தந்தை. மனைவியிடம் `நமக்கு ஒரு மகள் இல்லையே ’ என அடிக்கடி ஆதங்கப்படுவேன். ரிக்‌ஷாவில் ஏறுபவர்களில் பாதிப்பேர் கோபத்தில் இருப்பார்கள். மீதிப்பேர் 'அப்படிப் போ... இப்படிப் போ' என கட்டளையிட்டுக்கொண்டே வருவார்கள்.

ஒருநாள் காலை, இளம் பெண் ஒருவரின் தந்தை என்னிடம் வந்தார். தன் மகளை பத்திரமாகக் கல்லூரிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். புறப்படும்போது மகளிடம், 'ரிக்‌ஷாவை நன்றாகப் பிடித்துக்கொள்' எனக் குழந்தைக்குச் சொல்வதுபோலச் சொன்னார். என்னிடம் 'பள்ளம் மேடு பார்த்து ஓட்ட வேண்டும். குலுங்கவே கூடாது ' என்றார். அந்தப் பரிதவிப்பில், மகள்மீது அவர் வைத்திருந்த பாசம் மட்டுமே எனக்குத் தெரிந்தது.

நானும் கவனத்துடன் ஓட்ட ஆரம்பித்தேன். சிறிது தொலைவுதான் போயிருப்பேன். ரிக்‌ஷாவில் இருந்த பெண் கேவிக் கேவி அழத்தொடங்கினார். அழுவதை நிறுத்தவே இல்லை. நான் திரும்பிப் பார்த்தால், என்னைக் கடுமையான வார்த்தைகளால் திட்டினார். மொபைல்போனில் யாரையோ அழைத்தார். போனில், `காச் மூச்' எனக் கத்தினார். ஏதோ... காதல் விவகாரம் என்று மட்டும் புரிந்தது. எதிர்முனையிலிருந்து என்ன பதில் வந்தது எனத் தெரியவில்லை. திடீரென ரிக்‌ஷாவிலிருந்து குதித்துவிட்டார். இருக்கையில் பணம் இறைந்து கிடந்தது. நானும் பின்னாலேயே ஓடினேன்.

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ரயில் தண்டாவளத்தை நோக்கிப் பாய்ந்தார். எனக்கு அந்தப் பெண்ணின் தந்தை முகம் நினைவில் வந்துபோனது. மகள்மீது அக்கறைகொண்டு அவர் கூறிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் காதுக்குள் ஒலித்தன. அந்தப் பெண்ணோ, ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்திருந்தார். `தயவுசெய்து தண்டவாளத்தைவிட்டு வெளியேறுங்கள்' எனக் கெஞ்சினேன். அந்தப் பெண்ணோ, 'படிக்காத முட்டாளே... இங்கிருந்து போய்விடு' எனக் கத்தினார். கதறி அழுதுகொண்டே இருந்தார். நான் அமைதியாக அவர் முன்னால் நின்றேன். ரயில் வருகிறதா... என அவ்வப்போது பார்த்துக்கொண்டேன்.

`கதறி அழட்டும், அழுகை ஓய்ந்தபிறகுப் பேசிக்கொள்ளலாம்' எனக் காத்திருந்தேன். அழுகை நிற்க, மூன்று மணி நேரம் ஆனது. பொறுமையாக நானும் அதே இடத்தில் அமர்ந்திருந்தேன். ரயில் வரவில்லை; மழை வந்தது. மழைத்துளிகள் விழுந்தன. சிறிது நேரம் கழித்து என்னைப் பார்த்தார். நான் அமைதியாக முன்னால் அமர்ந்திருந்தேன். சைக்கிள் ரிக்‌ஷாவைக் கொண்டுவரச் சொன்னார். மனம் மாறியதால் எனக்குள் மகிழ்ச்சி. நான் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. ரிக்‌ஷாவைக் கொண்டு வர ஓடினேன்.

ரிக்‌ஷாவில் ஏறியதும் என்னைப் பார்த்து, 'அங்கிள், இங்கே நடந்ததை யாரிடமும் சொல்லக் கூடாது. இனிமேல் என் வீட்டுப் பக்கம் உங்களைப் பார்க்கக் கூடாது' என்றார். அதற்குமேல் நாங்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அமைதியாக அவரை வீட்டில் இறக்கிவிட்டேன். இந்தச் சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. இரவு உணவைச் சாப்பிட மனம் இல்லை. மகளுக்காக ஏங்கிக்கொண்டிருந்த என் மனம், `இப்போது மகள் இல்லாமல் இருப்பதே நல்லது' என்றது.

சமீபத்தில் நடந்த விபத்தால் நான் சாலையில் மயங்கிக் கிடந்தேன். நினைவில்லாத நிலையில் என்னை மருத்துவமனையில் அனுமதித்தனர். நினைவு திரும்பியதும்... வார்டில் பரபரப்புடன் பெண் ஒருவர் என்னைக் கவனித்துக்கொண்டிருந்தார். எங்கேயோ பார்த்ததாக நினைவு. உற்று கவனித்தேன். ஆஹா.... இது அந்தப் பெண் அல்லவா? எட்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த ரயில் பாதை சம்பவம் நினைவுக்கு வந்தது. அதே பெண்தான். இப்போது கழுத்தில் ஸ்டெதஸ்கோப்புடன் வெள்ளை உடை அணிந்து டாக்டராகியிருந்தார்.

என்னை பெரிய டாக்டர் ஒருவரிடம் அழைத்துச் சென்றார். அவரிடம் 'தன் தந்தை' என அறிமுகப்படுத்தினார். பெரிய டாக்டர், அவரைப் பார்த்து ஏதோ ஆங்கிலத்தில் கேட்டார். 'அன்று இந்த அப்பா இல்லைன்னா நான் டாக்டராகியிருக்க மாட்டேன்' என பதில் வந்தது. ஒரு மகளுக்குத் தந்தையான தருணத்தை அப்போது உணர்ந்தேன். அப்படியே கண்களை மூடிக்கொண்டு அந்தத் தந்தை ஸ்தானம் கொடுத்த பரவசத்தை உணர்ந்தேன். இப்போது எனக்கும் ஒரு மகள் கிடைத்திருக்கிறாள்... அதுவும் டாக்டர் மகள்!

பெற்றால்தான் பிள்ளையா?

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024