2017-06-17@ 00:43:52
புதுடெல்லி: வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) மூலம் மெகா கமிஷனுக்கு செல்லாத நோட்டு மாற்றுவது விறுவிறுப்பாக நடக்கிறது. என்ஆர்ஐ, ஏஜென்ட் கமிஷன் போக, ஒரு கோடி ரூபாய்க்கு 9 லட்சம் ரூபாய் தரப்படுகிறது. கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டை தடுக்க பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டு செல்லாது என, கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி நரேந்திரமோடி அறிவித்தார். இதன்பிறகு இவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்ற 50 நாள் அவகாசம் தரப்பட்டது. இதுதவிர, ரூ.4,500 வரை ரொக்கமாக மாற்றவும் அனுமதிக்கப்பட்டது. இதில் முறைகேடுகள் நடப்பதாக தெரியவந்ததால் ரொக்கமாக மாற்றுவது நிறுத்தப்பட்டது.
வங்கிகளில் அவகாசம் முடிந்தாலும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு செல்லாத நோட்டு மாற்ற இந்த மாதம் 30ம் தேதி வரை வாய்ப்பு உள்ளது. ஒருவர் அந்நிய செலாவணி சட்டப்படி ரூ.25,000 வரை மட்டும் மாற்றிக்கொள்ளலாம். எனவே, இவர்கள் மூலம் செல்லாத நோட்டுக்களை ஏஜென்ட்கள் மாற்றி வருகின்றனர். இது குறித்து ஏஜென்ட் ஒருவர் கூறியதாவது: இந்தியாவில் வசிப்பவர்கள் செல்லாத நோட்டு மாற்றுவதற்கான அவகாசம் முற்றிலும் முடிந்து விட்டது. மாற்ற முடியாத பலர் இதை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். எனவே, வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலம் இந்த பணத்தை மாற்றி வருகிறோம். 100 ரூபாய் கொடுத்தால் 9 ரூபாய்தான் கிடைக்கும். மீதி கமிஷனாக போய்விடும். அதாவது, ஒரு கோடி ரூபாய் மாற்ற வேண்டும் என்றால், 91 லட்ச ரூபாய் போக ரூ.9 லட்சம் மட்டும் கிடைக்கும்.
செல்லாத நோட்டு வைத்திருப்பவரிடம் உள்ள ஒரு கோடி ரூபாய் என்ஆர்ஐ-க்கு (வெளிநாடு வாழ் இந்தியர்) அனுப்பப்படுகிறது. அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் புது நோட்டாக வாங்கிக்கொண்டு எங்களது கமிஷன் போக ரூ.9 லட்சம் சம்பந்தப்பட்டவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. வருமான விவரங்களை அரசிடம் தெரிவிக்க விரும்பாத பலர் இந்த வழியை நாடுகின்றனர். எதிர்கால வருமான வரி விசாரணைகளில் இருந்தும் இதன் மூலம் தப்பிக்க முடியும். எனவே சொற்ப தொகை கிடைத்தாலும் போதும் என நினைக்கின்றனர். ரிஸ்க் கருதி வரும் 25ம் தேதி வரை மட்டும் மாற்றித்தரப்படும் என்றார்.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சிலர் கூறுகையில், எங்களுக்கு இந்த தகவல் கிடைத்தது. ஆனால், பணம் மாற்ற வருபவர்கள் பக்காவான ஆதார ஆவணங்களை சமர்ப்பிக்கின்றனர். எங்களது அதிகார எல்லைக்கு மேல் இதில் விசாரணை நடத்த முடியாது என்றனர். கருப்பு பணத்தை ஒப்புக்கொள்ளும் கடைசி வாய்ப்பாக, கரீப் கல்யாண் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதில், ஒப்புக்கொள்ளப்படும் பணத்துக்கு வரி, அபராதம், கரீப் கல்யாண் டெபாசிட் போக 25 சதவீதம் உடனே கிடைக்கும். இருப்பினும் இத்திட்டத்துக்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment