Monday, June 19, 2017

சினிமா பாணியில் ஆசிரியையை கடத்திய கும்பல் கைது.. திருச்சி போலீஸ் அதிரடி

சி.ய.ஆனந்தகுமார் தீக்‌ஷித்

திரைப்பட பாணியில் ஆசிரியை ஒருவரை கடத்திய கும்பலை 7 மணிநேரத்தில் திருச்சி போலீஸ் கைது செய்துள்ளது.

திருச்சி டி.வி.எஸ் டோல்கட் அருகில் உள்ள என்.எம்.கே நகர் 2-வது தெருவில் வசித்து வரும் துரைராஜ் என்பவருக்கு முத்துக்குமார், தனலெட்சுமி உள்ளிட்ட இரு பிள்ளைகள். அதில் தனலெட்சுமி, திருச்சி ராஜா காலனி பகுதியில் உள்ள கமலா நிக்கேத்தன் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை 8.00 மணியளவில், முத்துக்குமார், அவரது தங்கை தனலெட்சுமியை அவர் பணிபுரியும் பள்ளிக்கு தனது பைக்கில் அழைத்துச் சென்றார்.





அப்போது, பள்ளிக்கு அருகில் இன்டிகோ கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்தக் காரில் இருந்து இறங்கிய நபர் ஒருவர், இரு சக்கர வாகனத்தை மறித்து தனலெட்சுமியின் அண்ணன் முத்துக்குமார் மீது மிளகாய்ப் பொடியை தூவினார். அடுத்த சில நொடிகளில் காரில் மறைந்திருந்த மூன்றுபேர், பள்ளி ஆசிரியை தனலெட்சுமியை காரில் வலுக்கட்டாயமாக ஏற்றியதோடு, மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்று விட்டார்கள். ஆசிரியையின் அலறல் சத்தம் அப்பகுதியில் மட்டுமல்லாமல், திருச்சி மத்திய பேருந்துநிலையம் பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளி ஆசிரியை கடத்தப்பட்டதாக தகவல் பரவ கூடுதல் பரபரப்பு உண்டானது.

இந்நிலையில், தகவலறிந்து வந்த கன்டோன்மென்ட் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து, ஆசிரியை தனலெட்சுமியின் அண்ணன் முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்தனர். அடுத்த சில மணிநேரங்களில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண், கன்டோன்மென்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையில் எஸ்.ஐ அலாவுதீன், சந்துரு உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

முதற்கட்ட போலீஸ் விசாரணையில், ஆசிரியை தனலெட்சுமியை கடத்தியது தனலெட்சுமியின் முறைமாமனான கஜேந்திரன் மற்றும் அவனது நண்பர்கள் என்பது தெரியவந்தது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகேயுள்ள மேலதிருப்பந்துருத்தியைச் சேர்ந்த கஜேந்திரன். கட்டட மேஸ்திரி வேலை செய்து வந்ததும், கடந்த ஆறுமாதத்துக்கு முன்பு வரை, தனலெட்சுமியின் வீட்டிலேயே குடியிருந்து வேலைக்குச் சென்றுவந்ததும் தெரியவந்தது. மேலும், கஜேந்திரன் தனலெட்சுமியை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு, அவரை பெண் கேட்டதும் தெரிந்தது.

இதனையடுத்து தனலெட்சுமிக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவருக்கு வருகின்ற செப்டம்பர் மாதம் திருமணம் நடக்க உள்ளது. இந்நிலையில், தனது காதலுக்கு தனலெட்சுமி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆத்திரம் அடைந்த கஜேந்திரனும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து தனலெட்சுமியை கடத்திச் சென்றிருக்கலாம் என்று விசாரணையில் தெரிய வந்தது.

மேலும், கஜேந்திரனின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, சிக்னல் திருவாரூர் மாவட்டம் திருவிடைவாசல் கொரடாச்சேரியில் காட்டியது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர். மதியம் 1 மணியளவில் கொரடாச்சேரி வழியாகச் சென்ற கடத்தல் காரை தனிப்படை போலீசார் வழிமறித்தனர்.

அதையடுத்து காரில் இருந்த தனலெட்சுமியை மீட்டதுடன், இந்தக் கடத்தலில் ஈடுபட்ட திருச்சி என்.எம்.கே. காலனியைச் சேர்ந்த துவாரகன், மயிலாடுதுறை கூறைநாட்டை சேர்ந்த முகமது நசீர், தஞ்சாவூர் மாவட்டம் மேல திருப்பந்துருத்தியைச் சேர்ந்த அரவிந்த் ஆகியோரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அப்போது கஜேந்திரன் தப்பியோடினார். ஆனாலும், போலீசார் விரட்டிப்பிடித்தனர். ஆசிரியை தனலட்சுமியை போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை, திருச்சிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை விசாரித்ததில், கஜேந்திரன் தனது அத்தை மகள் தனலெட்சுமியை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒருதலையாக காதலித்து வந்தேன் என்றும், அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்ததால், தனது நண்பர்கள் உதவியுடன் தனது அத்தை மகள் தனலெட்சுமியை கடத்தியதாகவும் ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் கஜேந்திரன் உள்பட 4 பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

Holiday calling: Daily direct flights to Bangkok now

Holiday calling: Daily direct flights to Bangkok now Arvind.Chauhan@timesofindia.com 05.01.2025 Lucknow : To cater to the increasing rush fo...