Wednesday, June 14, 2017

மாநில செய்திகள்
“வீடியோ காட்சியில் இருப்பது நான்; குரல் என்னுடையது அல்ல” எம்.எல்.ஏ. சரவணன் பேட்டி


“வீடியோ காட்சியில் இருப்பது நான்; ஆனால் குரல் என்னுடையது அல்ல” என்று ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து மதுரை தெற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. விளக்கம் அளித்தார்.

ஜூன் 14, 2017, 05:15 AM
சென்னை,

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, இரண்டாக அ.தி.மு.க. பிளவுபட்டு நின்ற நேரத்தில், சசிகலாவை ஆதரிப்பதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக, மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் கூறிய வீடியோ காட்சி நேற்று முன்தினம் ‘டைம்ஸ் நவ்’ ஆங்கில தொலைக்காட்சியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதற்கு மறுப்பு தெரிவித்திருந்த எம்.எல்.ஏ. சரவணன் நேற்று சென்னை வந்து, ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்து விளக்கம் அளித்தார். பின்னர், வெளியே வந்த எம்.எல்.ஏ.சரவணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஓ.பன்னீர்செல்வம் நேற்று நடந்த சம்பவத்தை பற்றி என்னிடம் விசாரித்தார். நடந்ததை கூறினேன். அந்த சம்பவமானது முற்றிலும் தவறானது, பொய்யானது. நான் எந்தவொரு வார்த்தையும் பேசவில்லை.

தவறான தகவல்கள்

கடந்த 10 நாட்களுக்கு முன்பு நாகப்பட்டினத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆனால், நான் கட்சி மாறி போய்விட்டேன், வேறு அணிக்கு போய்விட்டேன் என்று கூறினார்கள். அப்போது, நான் அந்தக் கூட்டத்தில் தான் இருந்தேன்.

இந்த மாதிரி கடந்த 10 நாட்களாக தவறான தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. நானும் அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறேன். நேற்று வெளியான வீடியோ காட்சி தவறானது என்பதை ஓ.பன்னீர்செல்வத்திடம் எடுத்து கூறியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு சரவணன் அளித்த பதில்களும் வருமாறு:-

குரல் என்னுடையது கிடையாது

கேள்வி:- அப்படி என்றால் எதுவும் நடக்கவில்லையா?. அந்த வீடியோவில் வெளியான காட்சி உண்மை இல்லையா?.

பதில்:- அது நான் பங்கேற்ற ஏதோ ஒரு நிகழ்ச்சி. எதுவென்று ஞாபகம் இல்லை. பழைய நிகழ்ச்சி. அதில் இருப்பது என்னுடைய குரல் கிடையாது. மிமிக்ரி, டப்பிங் செய்து, போலியாக வெளியிடப்பட்டுள்ளது.

கேள்வி:- குரல் உங்களுடையது கிடையாது என்றால், அந்த வீடியோவில் இருப்பது நீங்கள் தானே?.

பதில்:- ஆமாம். வீடியோ படத்தில் இருப்பது நான் தான். பழைய வீடியோ. ஆனால், அந்த குரல் என்னுடையது கிடையாது. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 3 கூட்டணி தலைவர்களான தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். அவர்களை பற்றியும் நான் பேசியது மாதிரி கருத்து வந்திருக்கிறது. அதுவும் முற்றிலும் தவறான பொய்யான கருத்து. அந்த தலைவர்களை பற்றி நான் பேசவே இல்லை. எந்த நிகழ்வு பற்றியும் பேசவில்லை. அது தான் உண்மை.

யார் என்றே தெரியாது

கேள்வி:- டி.வி. நிருபர் ஷானவாசிடம் நீங்கள் பேட்டியளிக்க வில்லையா?.

பதில்:- ஷானவாஸ் என்பவர் யார் என்றே எனக்கு தெரியாது.

கேள்வி:- அப்படி என்றால் இதுகுறித்து நீங்கள் போலீசில் புகார் அளிக்க போகிறீர்களா?.

பதில்:- கண்டிப்பாக புகார் அளிப்பேன். சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறோம். கண்டிப்பாக இதுகுறித்து கிரிமினல் வழக்கு தொடர இருக்கிறோம்.

கேள்வி:- அப்படி என்றால், ஏன் இவ்வளவு தாமதமாக விளக்கம் தருகிறீர்கள்?.

பதில்:- வீடியோ வெளியான தகவல் நேற்று இரவு 8 மணிக்கு எனக்கு கிடைத்தது. நான் அப்போது சென்னைக்கு தான் கிளம்பிக்கொண்டிருந்தேன். நாளை (இன்று) சட்டமன்ற கூட்டம் இருப்பதால் அதில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டேன். அதனால், அந்த வீடியோவை என்னால் உடனே பார்க்க முடியவில்லை. இன்று தான் பார்த்தேன். இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் விசாரித்தார். உரிய விளக்கத்தை நான் கொடுத்திருக்கிறேன்.

சட்டப்படி நடவடிக்கை

கேள்வி:- அப்படி என்றால் வீடியோவில் பேசியது யார்?.

பதில்:- அது எனக்கு தெரியாது.

கேள்வி:- நீங்கள் தான் பேசியதாக சொல்லப்படுகிறதே?.

பதில்:- அது தவறானது. சட்டப்படி நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்துகிறோம்.

இவ்வாறு சரவணன் கூறினார்.

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...