Wednesday, June 14, 2017

மாநில செய்திகள்

வீடியோ பேச்சு வெளியீடு:“எம்.எல்.ஏ. சரவணனிடம் உரிய விளக்கம் கேட்டு இருக்கிறோம்” ஓ.பன்னீர்செல்வம் பேட்டி


அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக எம்.எல்.ஏ. சரவணன் கூறிய வீடியோ பேச்சு வெளியானது குறித்து அவரிடம் உரிய விளக்கத்தை கேட்டு இருக்கிறோம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
ஜூன் 14, 2017, 05:00 AM
சென்னை,

மதுரை தெற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணன் பேசியபோது ரகசியமாக பதிவுசெய்யப்பட்ட வீடியோ காட்சி என்று கூறி, ஆங்கில தொலைக்காட்சியான ‘டைம்ஸ் நவ்’ நேற்று முன்தினம் வெளியிட்டது.

இந்த வீடியோ பதிவில் எம்.எல்.ஏ. சரவணன், ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அ.தி.மு.க. பிளவுபட்டபோது, சசிகலா அணிக்கு ஆதரவாக செயல்படுவதற்காக சென்னையை அடுத்த கூவத்தூர் விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது பற்றி கூறுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

ஆங்கில தொலைக்காட்சியில் வெளியான இந்த காட்சிகள், தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. ஆனால், இதற்கு எம்.எல்.ஏ. சரவணன் மறுப்பு தெரிவித்தார்.

அதாவது, “அந்த வீடியோவில் வெளியான எந்தக் கருத்தையும் நான் சொல்லவில்லை. எனது குரலைப்போல் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். கூவத்தூரில் எனக்கு பணம் தருவதாக யாரும் சொல்லவில்லை. நானும் யாரிடமும் பணம் வாங்கவில்லை” என்று எம்.எல்.ஏ. சரவணன் கூறினார்.

ஆலோசனை

தற்போது, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியில் எம்.எல்.ஏ. சரவணன் இருந்து வருகிறார். எனவே, இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் கருத்து கேட்பதற்காக சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்திற்கு முன்பு நேற்று காலை பத்திரிகையாளர்கள், ஊடகத்தினர் குவிந்தனர்.

அப்போது, வீட்டில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வம், அதன் பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு ஓ.பன்னீர்செல்வம் அளித்த பதில்களும் வருமாறு:-

விளக்கம் கேட்டு இருக்கிறோம்


கேள்வி:- அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது தொடர்பாக, எம்.எல்.ஏ. சரவணன் பேசிய வீடியோ ஆதாரம் வெளியாகி இருக்கிறதே அதுபற்றி உங்கள் கருத்து என்ன?.

பதில்:- சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பேசியதாக நேற்று தொலைக்காட்சியில் வெளிவந்த வீடியோ காட்சி குறித்து, அவரே உரிய விளக்கம் தந்திருக்கிறார். நாங்களும் அவரிடம் உரிய விளக்கம் கேட்டிருக்கிறோம்.

கேள்வி:- அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுமா?

பதில்:- அவரிடம் உரிய விளக்கத்தை கேட்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, நிருபர்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். ஆனால், அவர் எதற்கும் பதில் அளிக்காமல் சென்றுவிட்டார்.

நேரில் விளக்கம்

இந்த நிலையில் அதுகுறித்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் விளக்கம் அளிப்பதற்காக சென்னை அடையாறு, கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு நேற்று காலை சரவணன் வந்தார்.

பிற்பகல் 12.45 மணியளவில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அவர் விளக்கம் அளித்தார். அப்போது அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி நிர்வாகிகள் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், டாக்டர் மைத்ரேயன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் உடன் இருந்தனர். அதனைத்தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் அங்கிருந்து புறப்பட்டார்.

அப்போது நிருபர்கள், சரவணன் எம்.எல்.ஏ. உங்களிடம் விளக்கம் அளித்தாரா? என்று மீண்டும் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ‘வீடியோ குறித்து எங்களிடம் சரவணன் எம்.எல்.ஏ. விளக்கம் கொடுத்து இருக்கிறார்’ என்றார். அதையடுத்து, ஜெயலலிதாவின் மரணம் அரசியலுக்கு பயன்படுத்தப்படுகிறதா?, சரவணன் எம்.எல்.ஏ.வின் குற்றச்சாட்டு உண்மையா? என்று கேள்விகள் எழுப்பினார்கள். ஆனால் அந்த கேள்விகளுக்கு அவர் பதில்கூற மறுத்துவிட்டு அங்கிருந்து காரில் சென்றுவிட்டார்.

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...