Sunday, June 18, 2017

ஜூன்.18; கக்கன் என்கிற அரிதிலும் அரிதான அரசியல் தலைவர்! பிறந்த தின சிறப்புப் பகிர்வு

தும்பைப்பட்டி எனும் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பில் தோன்றினார் இவர். சேரிப்பகுதியின் கோயிலுக்கு கக்கன் அவர்களின் தந்தைதான் பூசாரி. அந்த கோயிலில் பெருக்கி,சுத்தம் செய்து பூஜையில் ஈடுபடுகிற பழக்கம் கக்கன் அவர்களுக்கு இளம் வயதிலே இருந்தது..

பள்ளிக்கல்வியை படிக்க அமெரிக்க மிஷன் வருடத்திற்கு அவருக்கு பதினெட்டு ரூபாய்உதவித்தொகை தந்தது. அதற்காக மிஷனுக்கு சொந்தமான நிலத்தில் கற்கள் பொறுக்கி,முட்கள் நீக்கி வேலை பார்த்தார். பள்ளி இறுதி தேர்வில் ஆங்கிலத்தில் ஒரே ஒரு மதிப்பெண்ணில் தோல்வியுற்றார். பள்ளிக்கூடத்தில் கள்ளுக்கடை மறியலில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்ட தொண்டர்கள் உறங்க பள்ளிக்கூட பகுதிக்கு வருகிற பொழுது காந்தியின் போராட்ட முறைகளை அறிந்து கொண்டார் இவர். 1932லேயே சொர்ணம் பார்வதி என்கிற கிறிஸ்துவ பெண்ணை தோழர் ஜீவானந்தம் தலைமையில் திருமணம் செய்து கொண்டார்.


வைத்தியநாத ஐயரின் வழிகாட்டுதலில் எண்ணற்ற போராட்டங்களில் பங்கு கொண்டார். சிறை சென்று கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாகவும் செய்தார். ஒரு முறை சவுக்கால் அடித்தும்,குதிரையின் கீழே படுக்க வைத்தும் கொடுமைப்படுத்துகிற அளவுக்கு தீர்க்கமாக விடுதலைப்போரில் பங்கு கொண்டார். வைத்தியநாத ஐயருடன் இணைந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் ஆலய நுழைவு போராட்டத்தை வெற்றிகரமாக நிகழ்த்தினார்.

1945-ல் திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் ஊழியர் மகாநாட்டில் காமராஜரை சந்தித்த பொழுது இருவரும் நெருக்கமானார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்,சட்ட சபை உறுப்பினர்,அரசியல் அமைப்பு குழு உறுப்பினர் என்று பல்வேறு பதவிகள் வகித்த இவர் காமராஜர் மற்றும் பக்தவச்சலம் ஆகியோர் அமைச்சரவையில் பொறுப்பேற்று கொண்ட துறைகள் என்னென்ன தெரியுமா ? அமைச்சரவையில் வேளாண்மை, உணவு, சிறுபாசனம், மதுவிலக்கு, கால்நடை, தாழ்த்தப்பட்டோர் நலன்,பொதுப்பணி, உள்துறை, காவல்துறை, நீதித்துறை, சிறைத்துறை ஆகியன !

அரசு வாகனத்தில் குடும்ப உறுப்பினர்கள் போக அனுமதிக்க மாட்டார். மனைவி ஒரு நாள் அரசு ஊழியரை மண்ணெண்ணெய் வாங்கிவர அனுப்பிய பொழுது கடுமையாக கண்டித்தார். அவரின் தம்பி விசுவநாதன் வேலையில்லாமல் இருந்த பொழுது சிபாரிசு செய்ய மறுத்தார் அவர். அரசு அதிகாரி லயோலா கல்லூரிக்கு அருகில் அவரின் தம்பிக்கு மனை ஒதுக்கிய பொழுது அந்த கோப்பை வாங்கி கிழித்துப்போட்டு விட்டு ,”எத்தனையோ ஏழைகள் மழைக்கு ஒதுங்க கூட இடமில்லாமல் நோகிறார்கள்..இப்படி ஒரு இடம் தேவையா ?" எனக்கேட்டார்.

விசுவநாதனுக்கு காவல் துறை வேலை கிடைத்த பொழுது ,”இது நேர்மையாக கிடைத்திருந்தாலும் என் சிபாரிசால்தான் கிடைத்தது என்பார்கள் ! இந்த வேலைக்கு இவன் வேண்டாம் “ என்று தடுத்துவிட்டார். இவர் அமைச்சராக இருந்த காலத்தில் பல்வேறு அணைகள் கட்டப்பட்டன. மதுரை வேளாண்மைக் கல்லூரியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார். தாழ்த்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளை திறந்தார். அம்மக்களுக்கு வீட்டு வசதி வாரியம் அமைத்து வீடுகள் கட்டிகொடுத்தது ஒரு புறம் என்றால்,லஞ்ச ஒழிப்புதுறையை தமிழகத்தில் கொண்டு வந்ததும் கக்கனே !

கலவரங்களை தடுக்க ரகசிய காவலர் முறையைக்கொண்டு வந்தார். அமைச்சராக இருந்த கக்கன் அரசு விடுதியில் தங்கப்போனார் அங்கே வேறொரு அதிகாரி தங்கியிருந்தார். ஒன்றுமே சொல்லாமல் நண்பரின் வீட்டில் போய் தங்கிக்கொண்டார். அறுபத்தி ஏழு தேர்தலில் கடன் வாங்கி போட்டியிட்டார். தேர்தலில் தோற்றுப்போனார். அவருக்கு நிதி திரட்டி இருபதாயிரம் தந்தார்கள். அதை முழுக்க தேர்தல் செலவுகளை அடைக்க கொடுத்துவிட்டு அரசு வாகனத்தை தொடாமல் அரசு பேருந்துக்கு காத்திருந்து வீட்டுக்கு போனார்.



சொந்த மகளை கான்வென்ட் பள்ளிகளில் சேர்க்காமல் அரசு பள்ளியில் படிக்க வைத்தார் ,”எனக்கு எங்கே அங்கே எல்லாம் படிக்க வைக்க சக்தியிருக்கு ?” என்று கேட்டார். விடுதலைப்போரில் ஈடுபட்டதற்காக தனியாமங்கலத்தில் அவருக்கு தரப்பட்ட நிலத்தை வினோபாவின் பூமிதான இயக்கத்துக்கு தந்துவிட்டார் அவர். அமைச்சர் பதவியை விட்டு விலகியதும் வாடகை வீடு தேடி தெருத்தெருவாக அலைந்தார். முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கே பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.

எம்.ஜி.ஆர் மதுரை முத்துவை பார்க்க வந்தவர் செய்தி கேட்டு இவரைக்கண்டு கலங்கினார் ,”நல்ல சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறேன் !” என்று அவர் கேட்டுக்கொள்ள ,”நீங்கள் பார்க்க வந்ததே போதும் !” என்று இயல்பாக மறுத்தார். யாருமே கண்டுகொள்ள ஆளில்லாமல் மரணித்துப்போனார்.

சொத்தே இல்லாமல் நாட்டுக்கே சொத்தாகிப்போன அவரின் பிறந்தநாள் இன்று.

No comments:

Post a Comment

Want timely info on outbreaks in China: India to WHO

Want timely info on outbreaks in China: India to WHO  DurgeshNandan.Jha@timesofindia.com 05.01.2025 New Delhi : India has upped its vigil a ...