Saturday, June 10, 2017

முகங்கள்: சுண்டல் கடை சுரபா

பாரதி வி



பலாப் பழத்தில் மொய்க்கும் ஈக்களைப் போல அந்தக் கடையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இப்படி, அப்படித் திரும்ப நேரமில்லாமல் சுண்டலையும் சமோசாவையும் வாடிக்கையாளர்களுக்குக் கொடுப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார் சுரபா. சென்னை செங்குன்றத்தில் இவரின் கடையைத் தெரியாதவர்களே இல்லையென்றால், உணவின் ருசியைப் பற்றித் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

சிவகங்கையைச் சேர்ந்த சுரபா, திருமணத்துக்குப் பிறகு செங்குன்றம் வந்தார். இங்கு அரிசி வியாபாரிகள் அதிகமாக இருந்ததால், கணவருடன் சேர்ந்து ஒரு சிற்றுண்டிக் கடையை நடத்தினார். ஆனால் போதிய வருமானம் கிடைக்கவில்லை. வறுமை வாட்டியது.

“எங்களுக்கு மகளும் மகனும் பிறந்தாங்க. அவங்களை நல்ல பள்ளிக்கூடத்துல படிக்க வைக்கணும்னு ஆசைப்பட்டோம். ஆனால் டிபன் கடையில் எதிர்பார்த்த வியாபாரம் இல்லை. டிபன் கடையை சுண்டல், சமோசா கடையாக மாத்தினோம். நாங்க எதிர்பார்த்ததை விட வியாபாரம் நல்லா நடந்தது. காலை எழுந்ததிலிருந்து இரவு வரை வேலை இருந்துட்டே இருக்கும். சில குடிகாரர்கள் ரகளை செய்வாங்க. எல்லாத்தையும் தாங்கிக்கிட்டு, வியாபாரம் செஞ்சோம். திடீர்னு என் கணவர் இறந்துட்டார். இந்தக் கடை இருக்கறதால என் குழந்தைகளைக் காப்பாத்த முடியுது” என்கிறார் சுரபா.

இப்போது இவரது மகன் நாசீரும் கடையில் வேலை செய்கிறார். ஒரு சிலரை வேலைக்கும் அமர்த்தியிருக்கிறார். ஆனால் சமோசா மாவு பிசைவதற்கு மட்டும் ஆட்கள் கிடைக்கவில்லை. மாவு பிசையும் இயந்திரம் 2 லட்சம் ரூபாய் என்பதால் வாங்க முடியாமல், கைகளிலேயே பிசைந்துகொண்டிருக்கிறார் சுரபா.

“இருபது வருஷமா மாவு பிசைந்ததில் எலும்பு தேய்ஞ்சிருச்சு. மகள் பானு கல்லூரியில் படிச்சாலும் வீட்டு வேலைகள் முழுவதையும் கவனிச்சுக்குவா. பாவம், அவளுக்கும் ஓய்வே இருக்காது. படிப்பதை விட, அதிகமாக வேலை செய்யறாளேன்னு கஷ்டமா இருக்கு” என்று சொல்லும்போதே சுரபாவுக்குக் கண்ணீர் பெருகிவிட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024