Friday, June 16, 2017

போலி ஜாதிச் சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்தவர்களை நீக்குங்கள்: மத்திய அரசு உத்தரவு

By DIN  |   Published on : 16th June 2017 04:51 AM  |   
அரசின் பல்வேறு துறைகளில் போலி ஜாதிச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து பணியில் சேர்ந்தவர்களை பணிநீக்கம் செய்யுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
போலி ஜாதிச் சான்றிதழ் சமர்ப்பித்து பணிக்குச் சேர்ந்தவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து அனுப்புமாறு மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அரசின் பொதுத் துறை நிறுவனங்களில், 1,800-க்கும் மேற்பட்டோர் போலி ஜாதிச் சான்றிதழ்களை சமர்ப்பித்து பணிக்குச் சேர்ந்துள்ளதாக, அதிகாரப்பூர்வத் தகவல்கள் கிடைத்துள்ளன. அதனடிப்படையில், இந்த உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அண்மையில் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போதைய விதிகளின்படி, அரசு ஊழியர் ஒருவர், தவறான தகவலை அல்லது போலியான சான்றிதழை சமர்ப்பித்து பணிக்கு சேர்ந்தது, பணி நியமனம் செய்த நிர்வாகத்துக்குத் தெரியவந்தால், அவரைப் பணியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கலாம்.
எனவே, மத்திய அரசின் அனைத்து துறைகளும், தங்களது கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் காலியாக இருந்த தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பணியிடங்களுக்கு, போலி ஜாதிச் சான்றிதழ் சமர்ப்பித்து சேர்ந்துள்ளார்களா என்ற விவரங்களை சேகரிக்கவும். அந்த விவரங்களை தங்களது துறைகளுக்கு அறிக்கையாக அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில், 1,832 பேர் போலி ஜாதிச் சான்றிதழ்களை சமர்ப்பித்துப் பணிக்குச் சேந்திருப்பதாக மத்தியப் பணியாளர், பயிற்சித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், மக்களவையில் கடந்த மார்ச் மாதம் தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் கூறியிருந்ததாவது: மொத்தமுள்ள 1,832 பேரில் 276 பேர் பணிநீக்கம் அல்லது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 521 பேர் மீதான குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எஞ்சிய 1,035 பேர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவர்களில் 1,296 பேர், வங்கிச் சேவைத் துறைகளில் போலிச் சான்றிதழ்களை சமர்ப்பித்து பணிக்குச் சேர்ந்துள்ளனர் என்று ஜிதேந்திர சிங் கூறியிருந்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024