பெற்றோரது சீரற்ற நடத்தையால் சிக்கலுக்கு உள்ளாகும், மகள்களின் தாம்பத்ய வாழ்க்கை?
By கார்த்திகா வாசுதேவன் | Published on : 12th June 2017 05:08 PM |
'நூலைப் போல சேலை... தாயைப் போல பிள்ளை', என்பது தமிழின் மிகப் பிரசித்தி பெற்ற பழமொழி. இதில் தாயை மட்டும் சேர்ப்பானேன். தகப்பனுக்குப் பங்கில்லையா என்ன? அப்படியல்ல பல சந்தர்பங்களில் தாய், தந்தை வேறுபாடுகளின்றி இருவருக்குமே இந்தப் பழமொழி பொருந்தித் தான் போகிறது. குறிப்பாக ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ திருமண பேச்சு வார்த்தைகள் நிகழும் சமயத்தில் தான் இந்தப் பழமொழியை நாம் அதிகம் கேட்டிருக்கக் கூடும். எதற்காக அப்படிச் சொல்ல வேண்டும் என்றால்; திருமண பந்தத்தின் அடி வேரான தாம்பத்தியமும், அதன் மூலம் உருவாகும் வாரிசுகளும் மட்டுமே இந்தப் பழமொழியை நிர்ணயிக்கின்றன என்பதாலே தான். பொதுவாக பெண் பிள்ளைகளுக்கு முதல் ஹீரோ அவரவர் அப்பாக்களே! அதே போல ஆண்களுக்கு... எதிர்கால மனைவி எனும் விசயத்தில் அவர்களது ஆதர்ஷம் என்றென்றும் அவரவர் அம்மாக்கள் தான்.
இன்றைக்கும், என் அம்மாவைப் போல நீ ருசியாகச் சமைக்கவில்லை, என் அம்மாவைப் போல நீ வீட்டை நறுவிசாக நிர்வகிக்கவில்லை, என் அம்மாவைப் போல உனக்கு சாமர்த்தியமாக, புத்திசாலித்தனமாகப் பிள்ளைகளை வளர்க்கத் தெரியவில்லை என்று கூறி மனைவியை இம்சிக்கும் கணவர்கள் நிறைய உண்டு. அதே போல; என் அப்பாவைப் போல நீங்கள் பொறுப்பாக இல்லையென்றோ, என் அப்பாவைப் போல நீங்கள் பாசமாக இல்லையென்றோ கணவனைக் குறை கூறும் பெண்களும் கூட நிறைய உண்டு. இதை எதற்காகச் சொல்ல வேண்டுமெனில், இப்படித்தான் தொன்று தொட்டு மனித வாழ்க்கை முறை இருந்து வருகிறது. நாம் நமக்கான வாழ்க்கையின் நியதிகளை நமது பெற்றோர்களிடமிருந்தே கற்றுக் கொள்ள முயல்கிறோம். அப்படி இருக்கும் போது பெற்றொரிடமிருந்து நல்ல தனங்கள் மட்டுமல்ல கெட்ட தனங்களும் கூட எந்தத் தடையுமின்றி நம்மை வந்து அடைவது எளிதாகி விடுகிறது. அதிலும் நாம் வாழும் இந்தச் சமூகத்தில் ஆண்களை விட பெண்களே இவற்றால் அதிகமும் பாதிக்கப் பட்டு வருகிறார்கள் என்பதும் கண்கூடான உண்மை.
அவ்வகையில் இந்த தலைமுறை இளம்பெண்களின் இல்லற வாழ்வில் அவர்களது பெற்றோரது தாக்கம் பலவகையிலும் எதிரொலிக்கிறது என்று சமீபத்தில் அமெரிக்காவில் மனநல ஆய்வுப் பத்திரிகையொன்று ஆய்வுக்கட்டுரை சமர்பித்திருக்கிறது. அந்தக் கட்டுரை மூலமாகத் தான் நாம் இதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. தம்மைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கை முறைகளை சற்று நேரம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு சிந்தித்தாலே போதும் ஒவ்வொருவருமே இதை வெகு எளிதாக உணர்ந்து கொள்ளலாம்.
ஜோ.டி. குரூஸின் ‘கொற்கை’ நாவலில் வரும் பெண் கதாபாத்திரங்களில் ஒன்று ஓரினச் சேர்க்கையாளராக சித்தரிக்கப் பட்டிருக்கும். அந்தப் பெண்ணின் அவ்விதமான நடத்தைக்கு காரணம் இளம் பிராயத்தில் அவளது தாய், அவளது தந்தையால் மிக மோசமாக வல்லுறவுக்கு உள்ளாக்கப் படும் செயலே என்று நாவல் சொல்கிறது. தன் மனைவி மாதவிடாய் காலத்து ஒதுக்கத்தில் இருக்கிறாள், என்பதைக் கூட உணர மறுக்கும் பாலியல் வெறி பிடித்த கணவர்கள் பலர் இந்த சமூகத்தில் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த நாவலில் வரும் சம்பவம் ஒரு சாட்சி. இது உண்மைச் சம்பவத்தை தழுவி எழுதப் பட்டதாகக் கூட இருக்கலாம். நடு இரவில் குழந்தைகள் தூங்குகிறார்கள் எனும் அசட்டையான நம்பிக்கையாலோ, அல்லது அலட்சியத்தாலோ தகப்பனான ஒரு ஆண் செய்யும் இப்படியான காரியங்கள் நிச்சயமாக மகள்களின் தாம்பத்ய வாழ்வை அல்லது முறையான பாலியல் ஆர்வத்தை திசை மாறச் செய்து விடுகின்றன என்கின்றன மனநலம் சார்ந்த மருத்துவ ஆய்வுகள்.
அது மட்டுமல்ல குழந்தைப் பருவத்தில் தவறாகப் புரிந்து கொள்ளப் படும் பாலியல் நடவடிக்கைகள் திருத்தவோ, மாற்றவோ எவருமில்லாத சூழலில் அப்படியே குழந்தைகள் மனதில் நீடித்து நிலைத்து வளர்ந்து பெரியவர்களாகும் போது சிலருக்கு தாம்பத்யத்தைப் பற்றிய ஒவ்வாமையை அல்லது விருப்பமின்மையை ஏற்படுத்தி விடுகிறது. அதற்கொரு உதாரணம் மானஸாவின் கதை.
No comments:
Post a Comment