வீட்டு மனை பத்திரப் பதிவுக்கு புதிய அரசாணை! முழு விபரம்
Published on : 12th June 2017 01:03 PM |
பதிவு துறையில் கடந்த ஆண்டில் மட்டும் ரூ.1,500 கோடி இழப்பு ஏற்பட்டது. நில மதிப்பு குறைந்த நிலையில்கூட நிலங்களுக்கான சந்தை வழிகாட்டி மதிப்பு ஏற்கனவே உயர்த்தப்பட்ட நிலையிலேயே நீடிக்கிறது. எனவே, அதன் அடிப்படையிலேயே பத்திர பதிவு கட்டணமும் உயர்ந்த நிலையிலேயே நீடிக்கிறது.
இந்த கட்டணத்தில் பத்திர பதிவு செய்ய மக்கள் தயங்கியதால் அரசுக்கு வரவேண்டிய வருவாய் வெகுவாக குறைந்தது. எனவே, வழிகாட்டி மதிப்பீட்டுத் தொகையை குறைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பை 33 சதவீதம் குறைத்து அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் பத்திர பதிவு செலவு குறையும் என சொல்லப்படுகிறது.
08.06.2017 நடந்த அமைச்சரவை கூட்டம் முடிந்த பிறகு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி வெளியீடு எண். 360 நாள் 08.06.2017 செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2016-ம் ஆண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்காக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பத்திர பதிவுக்கான வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கும் முறை சீரமைக்கப்படும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.
2016-ம் ஆண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்காக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பத்திர பதிவுக்கான வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கும் முறை சீரமைக்கப்படும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.
இதை கருத்தில்கொண்டு, பதிவுத்துறைத் தலைவர் தலைமையிலான மதிப்பீட்டுக் குழு தற்போது மாநிலத்தில் நடைமுறையில் உள்ள சந்தை மதிப்பு வழிகாட்டியை அனைத்து இனங்களுக்கும் 9.6.2017 முதல் 33 சதவீதம் அளவு குறைத்து ஆணையிட்டுள்ளது.
இந்த சந்தை மதிப்பு வழிகாட்டியை குறைப்பதனால் அரசுக்கு ஏற்படக்கூடிய வருவாய் இழப்பை ஈடுசெய்ய விற்பனை (Conveyance), பரிமாற்றம் (Exchange), தானம் (Gift) மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அல்லாத நபர்களுக்காக எழுதிக் கொடுக்கப்படும் ஏற்பாடு (Settlement) போன்ற ஆவணங்களுக்கான பதிவு கட்டணத்தை 4 சதவீதமாக நிர்ணயிக்கவும், இப்பதிவு கட்டண உயர்வு 9.6.2017 முதல் அமல்படுத்தவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
தமிழக அரசு ஆணை சொல்வதென்னெ?
9.6.2017 முதல் 33 சதவீதம் குறைக்கப்பட்ட சந்தை மதிப்பு வழிகாட்டியானது. தமிழகம் முழுவதிலுமுள்ள 50 பதிவு மாவட்டங்களுக்குட்பட்ட அனைத்து கிராம புல எண்கள் மற்றும் தெருக்கள்/நகர்களுக்கு பொருந்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மேலும் 9.06.2017 தேதி முதல் கிரையம், பரிவர்த்தனை, தானம், குடும்ப நபர் அல்லாதவர்களுக்கான ஏற்பாடு ஆகிய நான்கு வகையான தன்மையுடைய ஆவணங்களுக்கு மட்டும் பதிவுக் கட்டணம் 1%-இல் இருந்து 4% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இவற்றை ஒருங்கே நடைமுறைப்படுத்த (Simultaneous Implementation) வேண்டிய நடைமுறைகள்:
1.சீரமைக்கப்பட்ட சந்தை மதிப்பு வழிகாட்டி (Market value Guidelines) ஆனது தற்போது 08.06.2017 தேதியில் நடைமுறையில் உள்ள சந்தை மதிப்பு வழிகாட்டியிலிருந்து 33 சதவீதம் குறைக்கப்பட்டு 09.06.2017 தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி சீரமைக்கப்பட்ட சதுர மீட்டர் மதிப்பானது 08.06-2017 தேதியில் இணையதளத்தில் உள்ள மதிப்பில் 67% சதவீதம் சதுரமீட்டர் மதிப்பு பொறுத்து Rounded to Next 5 Rupees ஹெக்டேர் மதிப்பு பொறுத்து Rounded to Next 500 Rupees கடைபிடிக்கப்பட வேண்டும்.
2. பதிவு அலுவலர்கள் 09.06.2017 தேதி முதல் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள் பொறுத்து சீரமைக்கப்பட்ட சந்தை மதிப்பு வழிகாட்டியினை கடைபிடித்து பதிவுகள் மேற்கொண்டு மதிப்பு குறைவு இருப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பதிவு ஆணை எண்.19136/ப/நாள் 22.04.1998ன் படி ஆவணப்பதிவுகளின் மூலமான உயர்மதிப்புகளை அடுத்துவரும் ஆவணங்களுக்கு கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற ஆணை தொடர்ந்து அமலில் இருக்கும்.
3.ஆவண தாக்கல் நாளில் உள்ள வழிகாட்டி மதிப்பிற்கு குறைவான மதிப்பில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களுக்கு ஆவணத் தாக்கல் நாளில் உள்ள சந்தை மதிப்பு வழிகாட்டியின் படியே இந்திய முத்திரைத்தாள் சட்டப் பிரிவு 47 A1/A3 நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் வேண்டும் 09.06.2017 தேதி, மற்றும் அதற்கு பின்னர் பதிவு செய்யப்படும் ஆவணங்களைப் பொறுத்து 09.06.2017 தேதிக்கு முந்தைய பதிவு புள்ளி விவரங்களை கருத்தில் கொண்டு சார்பதிவாளர்கள் பரிந்துரை செய்வதோ மாவட்ட வருவாய் அலுவலர்/ தனித்துணை ஆட்சியர் (முத்திரை) ஆகியோர் முன் ஆவணப்பதிவுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மதிப்பு நிர்ணயம் செய்வதோ தவிர்க்கப்பட வேண்டும்.
4. 04.06.2017 தேதி மற்றும் அதற்குப் பின்னர் பதிவுக்குத் தாக்கல் செய்யப்படும் ஆவணத்தில் கண்ட ஓர் சொத்து பொறுத்து 09.06.2017 தேதிக்கு முன்னர் அதே சொத்து பதிவு செய்யப்பட்ட முன் ஆவணத்தில் கண்ட உயர்மதிப்பு மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்/ தனித்துணை ஆட்சியர் (முத்திரை) ஆகியோர் நிர்ணயித்த உயர்மதிப்பின் அடிப்படையில் மதிப்பு குறைவு குறித்து நடவடிக்கை மேற்கொள்ளலாகாது.
5. கட்டிடம் பொறுத்தும் முன் ஆவணப்பதிவில் கண்ட கட்டிட மதிப்பினை கடைபிடிக்க வேண்டும் என பதிவு அலுவலர்கள் ஆவணதாரர்களை நிர்பந்தித்தல் கூடாது. நடைமுறையில் உள்ள பொதுப்பணித்துறை தளவிலைப்பட்டியலில் படியான மதிப்பினை அனுசரித்தாலே போதுமானது.
6. 08.06.2017 தேதி மற்றும் அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட/பதிவுக்குத் தாக்கல் செய்யப்பட்டு மதிப்பு நிர்ணயத்திற்காக நிலுவையிலுள்ள வழக்குகள் பொறுத்தமட்டில் பழைய வழிகாட்டி மதிப்பின் அடிப்படையிலேயே மதிப்பு நிர்ணயம் செய்து அதனடிப்படையில் செயல்பட வேண்டும். அவ்வாறான மனை/மனை பிரிவுகளுக்கு 09.06.2017 தேதி முதல் மதிப்பு 33 சதவீதம் குறைத்து மேலே வரிசை 1-இல் குறிப்பிட்ட நடைமுறைப்படி கடைபிடித்திட வேண்டும்.
7. 09.06.2017 தேதிக்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள் பொறுத்த மதிப்பு நிர்ணய வழக்குகளுக்கு 09.06.2017 தேதிக்கு முன்னர் உள்ள சம்பந்தப்பட்ட சர்வே எண் மதிப்பினையோ, சுற்றி உள்ள மதிப்பினையோ பதிவு புள்ளி விவரப்படியான உயர்மதிப்பினையோ கருத்தில் கொள்ளுதல் கூடாது. ஆனால், 09.06.2017 தேதிக்குப் பிறகு ஏற்படும் உயர்மதிப்புகளை கருத்தில் கொண்டு பதிவு சுற்றறிக்கை எண். 01/2014 நாள் 27.01.2014 (கோப்பு எண் 3321/ப/2014 மற்றும் தொடர்புடைடைய பதிவு ஆணைகளைப் பின்பற்றி மதிப்பு நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
8. சீரமைக்கப்பட்ட மதிப்பானது இணையதளத்தில் 08.06.2017 தேதியில் கண்டுள்ள மதிப்பிற்கே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஏற்கனவே முரண்பாடு களையப்பட்டு அல்லது மதிப்பு நிர்ணம் செய்யப்பட்டு அம்மதிப்பு இணையத்தளத்தில் உட்புகுத்த விடுபட்டிருக்கும் நிகழ்வுகளைப் பொறுத்து சார்பதிவாளர்கள் மாவட்ட பதிவாளர் வழி துணை பதிவுத் துறை தலைவர் ஆணையை பெற்று சீரமைக்கப்பட்ட மதிப்பு விவரத்தினை பதித்துறைத்தலைவடுக்கு தெரிவிக்கும் நிலைலையில் இணையதளத்தில் உரிய மதிப்பு மாற்றம் செய்யப்படும்.
9. முன் ஆவணங்களில் கண்ட மதிப்புகளை கருத்தில் கொள்ளக் கூடாது எனினும் ஓர் சொத்து பொறூத்து உடன்படிக்கை அமுலில் இருந்தால் அம்மதிப்பு சீரமைக்கப்பட்டுள்ள மதிப்பை விட கூடுதலாக இருக்கும்பட்சத்தில் உடன்படிக்கை ஆவணத்தில் கண்ட மதிப்பையே சந்தை மதிப்பாகக் கருத்தில் கொண்டு பதிவு அலுவலர்கள் செயல்பட வேண்டும். ஆனால், சீரமைக்கப்பட்ட சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பு நடைமுறைக்கு வந்த தேதிக்கு முன்னரோ பின்னரோ உடன்படிக்கை ஆவணம் ரத்து செய்யப்பட்டிருப்பின், ரத்து செய்யப்பட்ட உடன்படிக்கை ஆவணத்தில் கண்ட மதிப்பினை அதே ஆவணதாரர்களாக இருப்பின், கடைபிடித்திட நிர்பதித்தல் கூடாது.
10. சந்தை மதிப்பு வழிகாட்டி 33 சதவீதம் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து கிரையம்(Conveyance), பரிவர்த்தனை(Exchange) தானம் (Gift), மற்றும் குடும்ப நபர் அல்லாதவர்களுக்கிடையேயான ஏற்பாடு( Settlement in Favour of Non Family Members) [Articles 23, 31, 33 and 58 (a)(ii) of Schedule I of the Indian Stamp Act, 1899] ஆவணங்களுக்கு மட்டும் பதிவுக் கட்டணம் 1 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக பார்வை 2-இல் கண்ட அரசாணையின்படி உயர்த்தப்பட்டுள்ளதை பதிவு அலுவலர்கள் கருத்தில் கொண்டு செயல்பட அறிவுறுத்தப்படுகிறது.
11. மேலும் குறைக்கப்பட்ட சந்தை மதிப்பு வழிகாட்டியானது 9.6.2017 முதல் (பத்தி 9க்குட்பட்டு) பதிவுக்கு தாக்கல் ஆகும் அனைத்து வகையான ஆவணங்களுக்கும் பொருந்தும், 1%-இல் இருந்து 4% ஆக உயர்த்தப்பட்ட பதிவுக் கட்டணமானது பத்தி 11-இல் கூறப்பட்டுள்ள நான்கு வகையான தன்மையுடைய ஆவணங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
12. மேற்சொன்ன நடைமுறைக்குட்பட்டு மாவட்டப் பதிவாளர்கள் தங்களது தணிக்கை பணியினை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
13. இச்சுற்றறிக்கையின் 1 முதல் 12 வரையிலான நெறிமுறைகளை பொதுமக்கள் அறியும் வண்ணம் தங்களது எல்லைகுட்பட்ட சார்பதிவகங்கள், மாவட்டப்பதிவாளர் அலுவலகம், துணைபதிவுத்துறைத் தலைவர் அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலர்/தனித்துணை ஆட்சியர் (முத்திரை) அலுவலகங்களில் பதாதைகள் (Flex Board) மூலம் நன்கு விளம்பரப்படுத்தப்படுவதை மாவட்டப்பதிவாளர்கள்/துணைப்பதிவுத் துறைத்தலைவர்கள் ஆகியோர் உறுதி செய்திடல் வேண்டும்.
14. பதிவு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சீரமைக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பு நடைமுறைக்கு வரும் 09.36.2017 தேதி முதல் 13.06.2017 வரையிலான ஆவணப் பதிவுகளுக்கு சார்பதிவாளர்கள் முத்திரை தீர்வை மற்றும் பதிவுக்கட்டணங்கள் உச்சவரம்பின்றி ரொக்கமாகவும் வசூலிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.
பத்திரப்பதிவு மூலம் அரசுக்கு, ஆண்டுக்கு ரூ.8 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. தற்போது, வழிகாட்டி மதிப்பை 33 சதவீதம் குறைப்பதன் மூலம் ரூ.900 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், ஆவணங்களுக்கான பதிவு கட்டணத்தை ஒரு சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்துவதன் மூலம் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது.
C.P.சரவணன், வழக்கறிஞர்
செல்பேசி எண் - 9840052475
செல்பேசி எண் - 9840052475
No comments:
Post a Comment