10 ஆண்டில் முதல் முறையாக சிங்கப்பூரில் பெட்ரோல் பங்கில் கொள்ளை: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது
2017-08-03@ 00:06:24
சிங்கப்பூர் : கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக, சிங்கப்பூரில் பெட்ரோல் பங்கில் கத்தியைக் காட்டி கொள்ளையடித்த சம்பவம் நடந்துள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் வடிவேலு(48). இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவர், உப்பர் புகிட் டிமா சாலையில் அமைந்துள்ள ஷெல் பெட்ரோல் பங்கிற்கு கடந்த திங்கட்கிழமை 12.50 மணிக்கு சென்றுள்ளார். அங்கிருந்த ஊழியர்களிடம் பிளாஸ்டிக் கவர் ஒன்றில் அங்கிருந்த பணத்தை போட்டு தரும்படி கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார்.பணத்தை எடுத்துக்கொண்ட வடிவேலு இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பி சென்றார். இது தொடர்பாக ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால் அவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் ஊழியர்களால் அவரை அடையாளம் காண முடியவில்லை. பெட்ரோல் பங்கில் இருந்த பெண் ஊழியர் அவர் அணிந்திருந்த ஆடைகளின் வர்ணத்தை போலீசாரிடம் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் உஷார்ப்படுத்தப்பட்டனர். சுமார் 5 மணியளவில் வடிவேலுவை அடையாளம் கண்டு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.32 ஆயிரம் பணம், வங்கி ரசீது மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. வடிவேலு மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. சிங்கப்பூரில் கடந்த 10 ஆண்டுகளில் பட்டப்பகலில் முதல் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment