சேலம் அரசு மருத்துவமனையில் நோய் தொற்றியும் அகற்றப்படாத பழைய மருத்துவ உபகரணங்கள்
2017-08-02@ 20:48:18
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ளது. நாள்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் புறநோயாளிகளாகவும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்நோயாளியாகவும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர, 25க்கும் மேற்பட்ட துறைகளுடன் செயல்பட்டு வரும் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ மனையில் நூற்றுக்கணக்கான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், சேலம் மட்டுமல்லாது சுற்றியுள்ள 8 மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் சிகிச்சைக்காக இங்கு வந்து செல்கின்றனர். மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்படுபவர்களுக்காக இரும்பு கட்டில், மெத்தை மற்றும் படுக்கை விரிப்புகள் உள்ளன. மேலும், மருந்துகளை வைக்க இரும்பு டேபிள்கள், குளுக்கோஸ் ஏற்ற இரும்பு ஸ்டேண்ட் போன்றவையும் உள்ளது. பழுதான மற்றும் உபயோகமற்ற இவற்றை மருத்துவமனையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
இதேபோல், நோயாளிகளை ஒரு பிரிவில் இருந்து மற்றொரு பிரிவுகளுக்கு மாற்றவும், ஆம்புலன்சில் அழைத்து வரப்படும் நோயாளிகளை மருத்துவமனைக்குள் தூக்கி செல்லவும், சக்கர நாற்காலி மற்றும் ஸ்டெச்சர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை, துருப்பிடித்தும், சக்கரங்கள் எதுவும் இல்லாமலும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.பொதுவாக அரசு மருத்துவமனைகளில் இவ்வாறு உபயோகமற்ற பொருட்களை ஏலம் விட்டு, அதன்மூலம் வரும் வருவாயை கொண்டு புதிதாக பொருட்கள் வாங்கப்படுவது வழக்கம். ஆனால் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள உபயோகமற்ற பொருட்கள், தேங்கி கிடக்கின்றன. மருத்துவமனையில் பல் மருத்துவ பிரிவுக்கு அருகில், பிரேத பரிசோதனை கூடம் உள்ளிட்ட இடங்களில் மலைபோல் இவை குவித்து வைக்கப்பட்டுள்ளன.
இதனால், அந்த இடம் புதர் போல் காணப்படுகிறது. மேலும் விஷசந்துக்களின் புகலிடமாகவும் மாறிவிட்டது. குறிப்பாக மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி ஏராளமான கொசுக்கள் உருவாகின்றன. இதன்மூலம் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு ஆளாக வேண்டியுள்ளது. மேலும், கடும் துர்நாற்றமும் வீசுவதால், நோயாளிகளும், மருத்துவமனை பணியாளர்களும் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து மருத்துவமனை பணியாளர்கள் கூறியதாவது: சுகாதார சீர்கேட்டால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, அதனை குணமாக்க அரசு மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். ஆனால், நோயை உருவாக்கும் மையமாக சேலம் அரசு மருத்துவமனை மாறிவிட்டது. எங்கு பார்த்தாலும் கடும் சுகாதார சீர்கேடு தான் நிலவுகிறது. இதுகுறித்து பலமுறை கூறியும், மருத்துவமனை நிர்வாகத்தினர் கண்டுகொள்ளவில்லை.
இதனிடையே, மருத்துவமனையில் பயனற்ற பொருட்களை அங்கிருந்து வெளியேற்றாமல் வைத்துள்ளனர். அவை மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படுகின்றன. மருத்துவமனையின் பல் மருத்துவ சிகிச்சை பிரிவுக்கு அருகே பயிற்சி செவிலியர் களின் ஹாஸ்டல் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியுள்ளனர். ஹாஸ்டலுக்கு அருகிலேயே நூற்றுக்கணக்கான உடைந்த கட்டில்கள், மெத்தைகள், டேபிள், சேர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஏராளமான கொசுக்கள் உருவாகிறது.
இதனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட செவிலிய மாணவிகள் 10க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர். இதனால் மருத்துவமனை பணியாளர்களுக்கே, நோய் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு படுக்கை விரிப்புகள் மட்டும் அங்கிருந்து அகற்றப்பட்டது. ஆனால், கட்டிட கழிவுகள் எதுவும் அப்புறப்படுத்தப் படவில்லை. எனவே, இதனை முழுமையாக அகற்றி, ஏலம் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மருத்துவமனை பணியாளர்கள் கூறினர்.
No comments:
Post a Comment