Friday, August 11, 2017

வேலூர் மாநகராட்சி அதிகாரிகளிடம் சென்னையில் விசாரணை

பதிவு செய்த நாள்10ஆக
2017
22:49


வேலுார்: வேலுார் மாநகராட்சி கமிஷனர் குமாரின் லஞ்ச முறைகேடுகள் குறித்து, மாநகராட்சி அதிகாரிகளை, சென்னைக்கு அழைத்து, நகராட்சி இயக்குனரக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். வேலுார் மாநகராட்சி கமிஷனராக இருந்தவர் குமார், 54. நேற்று முன்தினம், கான்ட்ராக்டர் பாலாஜியிடம், 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். குமார் வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தி, 10.44 லட்சம் ரூபாய், 26 சவரன் நகை, பணம் எண்ணும் இயந்திரம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

நீதிபதி உத்தரவு : குமாரை, 23ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளதால், அவரை ஜாமினில் எடுக்க, குடும்பத்தினர், சென்னை உயர் நீதிமன்றம் சென்றுள்ளனர். தற்போது, வேலுார் மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன், பொறுப்பு கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
பாலசுப்பிரமணியன் மற்றும் சில அதிகாரிகள், நேற்று காலை, சென்னை சென்றனர். அவர்களிடம், நகராட்சிகள் இயக்குனரக அதிகாரிகள், குமார் ஊழல்கள் குறித்தும், அதற்கு உடந்தையாக உள்ள அதிகாரிகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.10 கோடி
அதேபோல், வேலுார் மாநகராட்சியில் வேலை செய்யும் கான்ட்ராக்டர்கள் சிலரும், விசாரணைக்கு சென்னை சென்றுள்ளனர். குமார், 40 சதவீதம் வரை கமிஷன் வாங்கி, 10 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்துள்ளதாக, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை கேட்டு, அதிர்ச்சி அடைந்த உயர் அதிகாரிகள், குமாரின் ஊழல்கள் குறித்து முழுமையாக விசாரிக்க, 10 பேர் குழுவை நியமித்துள்ளனர். அந்த குழு, வேலுாரில் விசாரணை நடத்த உள்ளது.

இதற்கிடையில், வேலுார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள குமார், நேற்று மதியம், மட்டன் பிரியாணி, சிக்கன், 65 கேட்டு தகராறு செய்துள்ளார்.
குமார் கைது செய்யப்பட்டுள்ளதால், அவருடன் கூட்டணி அமைத்து, லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் பலர், கலக்கத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024