Friday, August 11, 2017


கும்பகோணம் தீ விபத்து: இருவருக்கு மட்டுமே தண்டனை


பதிவு செய்த நாள்10ஆக
2017
23:54


சென்னை: கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில், பள்ளி நிறுவனர் மற்றும் சமையலர் குற்றவாளி என, தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையில் மட்டும் மாற்றம் செய்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், கிருஷ்ணா பள்ளியில், 2004 ஜூலை, 16ல் ஏற்பட்ட தீ விபத்தில், 94 குழந்தைகள், தீயில் கருகி உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக, கும்பகோணம் போலீசார், 24 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். வழக்கை, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்விசாரித்தது. வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட, அப்போதைய, முதன்மை கல்வி அலுவலர் பழனிசாமி, தாசில்தார் பரமசிவம், தொடக்கப் பள்ளி இயக்குனர் கண்ணன் ஆகியோர் மீதான வழக்கு திரும்பப் பெறப்பட்டதால், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். கும்பகோணம் நகராட்சி கமிஷனர் சத்தியமூர்த்தி உட்பட, 11 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.பள்ளி நிறுவனர் பழனி சாமிக்கு, ஆயுள் தண்டனை, 51.65 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டது.

நிறுவனரின் மனைவியும், தாளாளருமான சரஸ்வதி, கிருஷ்ணா பள்ளி தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையலர் வசந்தி, மாவட்ட கல்வி அலுவலர்பாலாஜி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக உதவியாளர் சிவபிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின், நேர்முக உதவியாளர் துரைராஜ் ஆகியோருக்கு, தலா, ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், கட்டட பொறியாளர் ஜெயசந்திரனுக்கு, இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது.

தண்டனையை எதிர்த்து, 10 பேரும், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடுசெய்தனர். விடுதலையை எதிர்த்து, தமிழக அரசும் மேல்முறையீடு செய்தது. 'அப்பீல்' மனுக்களை விசாரித்த, நீதிபதிகள் சத்தியநாராயணன், வேலுமணி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: பள்ளி நிறுவனர் பழனிசாமி, சமையலர் வசந்தி ஆகியோர், குற்றவாளி என்பதை, இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது. அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையில் மாற்றம் செய்யப்படுகிறது. ஏற்கனவே, சிறையில் அனுபவித்த நாட்கள் போதுமானது; பழனிசாமிக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை, 1.16 லட்சம் ரூபாயாக மாற்றம் செய்யப்படுகிறது. பள்ளி தாளாளர் சரஸ்வதி இறந்து விட்டதால், அவரது மேல்முறையீட்டு மனு விலக்கப்படுகிறது.

மற்ற ஏழு பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்படுகிறது. 11 பேர் விடுதலையை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

'அப்பீல்' செய்வோம்: சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அறிந்து, குழந்தைகளை இழந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தைகளை இழந்த, பெற்றோர் நலச்சங்க செயலர், இன்பராஜ் - கிறிஸ்டி தம்பதி கூறியதாவது: எங்களின், இரு மகன்கள் தீயில் கருகி இறந்தனர். சம்பவம் நடந்து, 10 ஆண்டு களுக்கு பின், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு குறைவான தண்டனையே வழங்கப்பட்டது. தற்போது, இவர்களை விடுதலை செய்தது, பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. சாதாரண வழக்கு போல, நீதிமன்றம் இதை கருதி உள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். இல்லையெனில், நாங்களே மேல்முறையீடு செய்வோம்.

மகேஷ் - சாந்தி தம்பதி: எங்களது மகள், தீயிலிருந்து தப்பினாலும், மகன் இறந்துவிட்டான். தற்போது, நீதிமன்றம் வழங்கியதீர்ப்பால், நிலைகுலைந்து போய் உள்ளோம். அவர்கள் வெளியே வந்துவிட்டால், இது போன்ற தவறுகளை செய்பவர்களுக்கு துணிச்சல் வந்துவிடும். எனவே,தமிழக அரசு, மேல் முறையீடு செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024