10 வயதில் தாயான சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு
பதிவு செய்த நாள்19ஆக2017 01:07
புதுடில்லி: பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு, பெண் குழந்தை பெற்றெடுத்த, 10 வயது சிறுமிக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவது குறித்து பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கும், சண்டிகர் நிர்வாகத்துக்கும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சக நிர்வாகத்தின் கீழுள்ள, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் பொது தலைநகரான, சண்டிகரைச் சேர்ந்த, 10 வயது சிறுமி, பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு, சமீபத்தில் பெண் குழந்தை பெற்றெடுத்தார். முன்னதாக, 32 வாரக் கருவை கலைக்க அனுமதி கோரும், அச் சிறுமியின் மனுவை, மருத்துவக் காரணங்களுக்காக உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இந்த வழக்கு, நீதிபதிகள், மதன் லோகூர், தீபக் குப்தா அமர்வு முன், நேற்று, மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக, 'அமிகஸ் கியூரி'யாக நியமிக்கப்பட்டுள்ள, மூத்த வழக்கறிஞர், இந்திரா ஜெய்சிங், ஒரு மனுவை தாக்கல் செய்தார். மனுவில் கூறப்பட்டுஉள்ளதாவது: சமீபத்தில், ஒரு வழக்கில், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே நேரத்தில், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட, 10 வயது சிறுமிக்கு, இதுவரை, எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை. குழந்தை பெற்றெடுத்தாலும், அவள் ஒரு சிறுமி. அவளால், குழந்தையை பார்த்துக் கொள்ள முடியாது. அதனால், அந்த சிறுமிக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
சிறுமிக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கும், சண்டிகர் நிர்வாகத்துக்கும், அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக பதிலளிக்கும்படி, தேசிய சட்ட சேவை ஆணையம் மற்றும் சண்டிகர் மாவட்ட சட்ட சேவை ஆணையத்துக்கும், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.வழக்கின் விசாரணை, வரும், 22ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment