பல்கலை குறைதீர் கூட்டம்: 100 பேருக்கு உடனடி தீர்வு : துணைவேந்தர் முன் கதறி அழுத மாணவி
பதிவு செய்த நாள்07ஆக
2017
23:01
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலை கல்வி திட்டம் சார்பில், முதன்முறையாக நடந்த மாணவர்களுக்கான குறைதீர் கூட்டத்தில், 100 பேருக்கு உடனடி சான்றிதழ்கள் அளித்து தீர்வு காணப்பட்டது.
இப்பல்கலையில் 2 ஆண்டுகளுக்கு மேலாக துணைவேந்தர் பணியிடம் காலியாக இருந்ததால், தொலைநிலை கல்வி மையங்களில் படித்த மாணவர் பலருக்கு மதிப்பெண் உட்பட பல்வேறு சான்றிதழ்கள்முறையாக வழங்குவதில் தேக்கம் ஏற்பட்டது. இதை தவிர்க்க மாணவர்கள் குறைதீர் கூட்டம் நடத்த துணைவேந்தர் செல்லத்துரை உத்தரவிட்டார்.இதன்படி முதல் கூட்டம் அவரது தலைமையில் நடந்தது. டில்லி, மும்பை, கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.பெரும்பாலும், 2013ல் இருந்து மதிப்பெண் சான்றிதழ், பட்டம் மற்றும் பட்டய சான்றிதழ், நேரடி மாணவர் சேர்க்கைசான்றிதழ் வழங்காதது, இணையான சான்றிதழ் பெற முடியாதது, கட்டண பிரச்னை, பெயர் திருத்தம் குறித்து 250 மனுக்கள் அளிக்கப்பட்டன. துறைகள் வாரியாக துணை பதிவாளர்கள், கண்காணிப்பாளர்கள் விசாரணை நடத்தி 100 பேருக்கு உடனடியாக சான்றிதழ் அளிக்கப்பட்டன.
வாட்ஸ் ஆப்... பேஸ்புக்.... : செல்லத்துரை கூறுகையில்,"படித்தவர் வராதபட்சத்தில் அவரது உறவினர் வந்தாலும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நேரடி மாணவர் சேர்க்கை மூலம் தேர்வு
எழுதியவர்களுக்கு அவர்கள் அசல் சான்றிதழ் சமர்ப்பித்தால் மதிப்பெண், டிகிரி சான்றிதழ் அளிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பங்கேற்றவர் 'வாட்ஸ் ஆப்' மற்றும் 'பேஸ்புக்'கில் தகவலை பதிவிட்டால், அடுத்த கூட்டத்தில் பலர் பயனடைய வாய்ப்புள்ளது," என்றார்.
இயக்குனர் கலைச்செல்வன், தேர்வாணையர் ஆண்டியப்பன், கூடுதல் தேர்வாணையர் விஜயதுரை, சீனியர் துணை பதிவாளர் முத்தையா, துணை பதிவாளர் நாகசுந்தரம், நிதி அதிகாரி சலீமா, துணை இயக்குனர்கள் இந்திராணி, இளையராஜா, முத்துக்குமார், பி.ஆர்.ஓ., அறிவழகன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
பெயர் மாறிய டில்லி மாணவர்...
காரியாபட்டி ஜோதி என்ற மாணவி 2008ல் படித்த இளநிலை பட்டம் முடித்து டி.இ.டி., தேர்வு எழுத அதற்கான 'இணையான சான்றிதழ்' கேட்டு விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை. இதனால் வேலைவாய்ப்பு பாதித்தது. பல்கலையே இதற்கு காரணம் என கூறி கண்ணீர் விட்டு கதறி அழுது, 'தனக்கு சான்றிதழே வேண்டாம்,' என கோபத்தில் தெரிவித்தார். அவரை துணைவேந்தர் சமாதானம் செய்து உரிய நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.
டில்லி நித்தின், "தனக்கு வழங்கப்பட்ட எம்.சி.ஏ., சான்றிதழில் எனது பெயர் 'லித்தின்'," என இருப்பதாக தெரிவித்தார். அது உடனடியாக திருத்தம் செய்யப்பட்டது.
கோவை சமீர், தனது மனைவி பரீதா எம்.பில்., முடித்தும் 'வைவா'விற்கு அழைக்கப்படவில்லை என தெரிவித்தார். விசாரணையில் அவரது 'தீசிஸ்' மதிப்பீடு செய்யாதது தெரிய வந்தது. கையோடு அவர் கொண்டு வந்த மற்றொரு பிரதியை சமர்ப்பித்து, உடன் மதிப்பீடு செய்ய உத்தரவிடப்பட்டது.
No comments:
Post a Comment