ஆக்சிஜன் இருப்பு வைத்துக்கொள்ளுங்க! : மருத்துவ கல்லூரிகளுக்கு அரசு உத்தரவு
பதிவு செய்த நாள்13ஆக
2017
23:53
லக்னோ: 'உ.பி.,யில், அனைத்து மருத்துவக் கல்லுாரிகளும், போதிய மருந்துப் பொருட்கள், ஆக்சிஜன் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்' என, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
உ.பி.,யில், கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாததால், 63 குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. உ.பி., மாநில அரசுக்கு, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்தநிலையில், உ.பி., மாநில அரசு கல்லுாரிகளுக்கு, அம்மாநில மருத்துவக் கல்வித்துறை அனுப்பியுள்ள கடிதத்தில், போதிய மருந்துப் பொருட்கள், ஆக்சிஜன் வைத்துக் கொள்ளும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மருத்துவக் கல்வித்துறை தலைமை செயலர் அனிதா பட்நாகர் ஜெயின், லக்னோவில், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: கோரக்பூர் சம்பவத்துக்கு பின், அனைத்து அரசுக் கல்லுாரிகளுக்கும், முக்கியத்துவம் வாய்ந்த, மருத்துவ கல்வி மையங்களுக்கும், கடிதம் எழுதி உள்ளோம். மருத்துவமனைகளில், மருந்துப் பொருட்கள், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாமல், தேவையான அளவு இருப்பு வைத்துக் கொள்ளும்படி, அந்த கடிதத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு, பாக்கி வைத்திருந்தால், உடன், அதை செலுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவக் கல்லுாரிகளின் முதல்வர்களையும் தனிப்பட்ட முறையில், தொலைபேசியில் அழைத்து, மருந்து, ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளோம். இவ்விஷயத்தில் கவனக்குறைவை, பொறுத்துக் கொள்ள மாட்டோம் என, கண்டிப்பாக தெரிவித்துள்ளோம்.
கோரக்பூர் அரசு மருத்துவமனையில், குழந்தைகள் இறந்ததற்கு, ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் அல்ல. ஆக்சிஜன் சப்ளை நிறுவனங்களுக்கு, பாக்கி எதுவும் வைக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, கோரக்பூர் பாபா ராகவ்தாஸ் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், குழந்தைகள் பிரிவு கண்காணிப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த, கபீல் கான், அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ரூ.85 கோடி செலவில் மருத்துவ ஆய்வு மையம் : குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை தீவிரமாக ஆய்வு செய்ய, உ.பி., மாநிலம், கோரக்பூரில், 85 கோடி ரூபாய் மதிப்பில், பிராந்திய மருத்துவ மையம் ஏற்படுத்த, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால், குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்பட்ட, கோரக்பூர் மருத்துவமனைக்கு, மத்திய சுகாதார அமைச்சர், ஜே.பி. நட்டா, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதன்பின், அமைச்சர், நட்டா கூறியதாவது:கடந்த பார்லிமென்ட் கூட்டத் தொடரின்போது, உ.பி.,யில், மருத்துவ ஆய்வு மையம் அமைக்க உதவுவதாக, உ.பி., முதல்வர், யோகி ஆதித்யநாத்திடம் உறுதி கூறியிருந்தேன். இங்கு வருவதற்கு முன், கோரக்பூரில், மருத்துவ ஆய்வு மையம், 85 கோடி ரூபாய் செலவில் அமைப்பதற்கான திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளேன். குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்கள், அவற்றுக்கான காரணங்கள் குறித்து, இந்த மையம் ஆய்வு செய்யும்.இவ்வாறு நட்டா கூறினார்.யோகி ஆதித்யநாத் கூறுகையில்,''குழந்தைகள் இறந்ததால், அவர்களின் பெற்றோருக்கு எவ்வளவு வேதனை ஏற்படுமோ, அதை விட பல மடங்கு வேதனை, எனக்கு ஏற்பட்டுள்ளது,'' என்றார்.
No comments:
Post a Comment