சீன விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு அவமரியாதை
பதிவு செய்த நாள்14ஆக
2017
02:57
புதுடில்லி : அண்டை நாடான சீனாவில் உள்ள விமான நிலையத்தில், விமான நிறுவன ஊழியர்களால், இந்தியப் பயணியர் அவமதிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடக்கிறது.
இந்தியா - சீனா இடையே, டோக்லாம் எல்லைப் பிரச்னையால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், சீன விமான ஊழியர்களால், இந்திய பயணியர் அவமதிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அமெரிக்காவில் செயல்படும், பஞ்சாப் சங்கத்தின் செயல் இயக்குனர், சத்னாம் சிங் சாசல், வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், அவர் கூறியுள்ளதாவது: சமீபத்தில் டில்லியில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு, சீனாவின் ஷாங்கான் புடோங்க் விமான நிலையம் வழியாக பயணம் செய்தேன். புடோங்க் விமான நிலையத்தில், சக்கர நாற்காலி மூலம் செல்லும் பயணியருக்கான வாயிற்கதவு அருகே, இந்திய பயணியரிடம், சீன விமான நிறுவன ஊழியர்கள் அவதுாறாக நடந்து கொண்டனர். நம் நாட்டவரை பழிக்கும் வகையில் அவர்கள் செயல்பட்டுள்ளனர். இதில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இதன்படி, இந்தப் பிரச்னை குறித்து, சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் புடோங்க் விமான நிலைய அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடக்கிறது.
No comments:
Post a Comment