Sunday, August 20, 2017

இறுதி சடங்கு ஏற்பாடுகள் நடந்த நேரத்தில் பரிசோதனைக்கு உடலை பெற்ற போலீசார்

பதிவு செய்த நாள்19ஆக
2017
19:30





சென்னை, இறந்தவரின் உடலை மருத்துவமனை ஒப்படைத்து, இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் நடந்த நிலையில், பிரேத பரிசோதனைக்காக, போலீசார் உடலை பெற்ற சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.சென்னை, தி.நகரைச் சேர்ந்தவர் தீனதயாளன், 37; தனியார் நிறுவன ஊழியர். அவருக்கு, அனிதா என்ற மனைவியும், மூன்று வயது மகளும் உள்ளனர்.தீனதயாளன், 12ம் தேதி, வேளச்சேரியில் உள்ள, தன் பெற்றோர் வீட்டிற்கு சென்று திரும்பிய போது, விபத்தில் சிக்கினார். கால் மற்றும் தலையில், அவருக்கு காயம் ஏற்பட்டது. 

லேசான காயம் என, நினைத்து, அவர் யாரிடமும் கூறவில்லை.இந்நிலையில், அன்று இரவு தலைவலி, மயக்கம் ஏற்பட்டு, ராயப்பேட்டை, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின், உறவினர்கள் அவரை, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, ஆபத்தான நிலைக்கு சென்றதால், 15ம் தேதி, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் இறந்தார்.

இதையடுத்து, குடும்பத்தினரின் ஒப்புதலுடன், தீனதயாளனின் கண்கள் தானமாக அளிக்கப்பட்டன. பின், நேற்று காலை, அவரது உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உறவினர்கள், தி.நகரில், இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்தனர். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், தீனதயாளன் அனுமதிக்கப்பட்ட போது, விபத்து தொடர்பாக, கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.அவர், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், இறந்து உடல் ஒப்படைக்கப்பட்டது குறித்து அறிந்த, போலீசார் பதறினர்.பின், தி.நகரில் உள்ள, தீனதயாளனின் வீட்டிற்கு சென்று, அவரது சடலத்தை பெற்று, மீண்டும், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். 

அங்கு, பிரேத பரிசோதனை செய்த பின், தீனதயாளனின் உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.இது குறித்து, போலீசார் கூறுகையில், 'விபத்து என, வழக்கு பதிவு செய்துள்ளோம். எங்களிடம் தகவல் தெரிவிக்காமலும், பிரேத பரிசோதனை செய்யாமலும், உடலை ஒப்படைத்து விட்டனர்.'இதனால், உடலை பெற்று, பிரேத பரிசோதனை செய்தோம். இதற்கு மருத்துவமனை ஊழியர்களின் கவனக்குறைவே காரணம்' என்றார்.மருத்துவமனை டீன் நாராயணபாபு கூறுகையில், ''இது குறித்து விசாரித்து, கவனக்குறைவாக செயல்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...