Tuesday, August 15, 2017

நீட் தேர்வில் 196.5 FM வாங்கிய அனித்தாக்களின் நிலை என்ன?


VIKATAN




தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கும் போது, கூடவே மனநல வல்லுனர்களையும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க நியமிக்கவேண்டும் என்று ஒருவர் சமூக வலைதளம் ஒன்றில் பதிவிட்டிருந்தார். இது கிண்டலுக்காகப் பதிவு செய்யப்பட்ட ஒன்று என்றாலும், டாக்டர் ஆகும் ஆசையுடன் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 12-ம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்கள், நீட் தேர்வு விவகாரம் காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வு நடக்குமா நடக்காதா என்ற குழப்பங்கள் இருந்த சமயத்தில், "நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறோம். அதற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பார். எனவே, நீட் தேர்வு குறித்து தமிழக மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை" என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அடிக்கடி கூறி வந்தார்.

தேர்வு தந்த குழப்பம்

இந்த நம்பிக்கை வார்த்தைகளை தமிழக மாணவர்கள் நிஜமாகவே நம்பினார்கள். பெரும்பாலான மாணவர்கள் ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் நமக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்து விடும் என்று எதிர்பார்ப்போடு இருந்தனர். நீட் தேர்வுக்கு தயாரான ஒரு சில மாணவர்களும் ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் தமிழகத்தில் மாணவர் சேர்க்கை இருக்கும் என்பதால், ஏனோ, தானோ என்றுதான் படித்தனர். கவனம் செலுத்திப் படிக்கவில்லை.

ஆனால்தான் நீட் தேர்வு எழுதிய பெரும்பாலான மாணவர்கள் தோல்வியடைந்தனர். தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதிய ஒரு மாணவர் கூட அகில இந்திய ரேங்க் பெறவில்லை. தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதியவர்களில் பல மாணவர்கள் 720 மதிப்பெண்களுக்கு அதிகபட்சமாக 655 மதிப்பெண்களை மட்டும்தான் எடுத்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வில் இருந்து விலக்குக் கோரும் சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற முடியவில்லை. இந்த சூழலில்தான் நீட் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் இருந்து தமிழகப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவிகித ஒதுக்கீடு என்று சொல்லியது தமிழக அரசு.

ஆனால், உச்சநீதிமன்றம், தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதித்துள்ளது. வேறு வழியில்லாமல் மீண்டும் மத்திய அரசின் கைகளை எதிர்பார்த்து தமிழக அரசு காத்திருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் என அடுத்தடுத்து பிரதமர் மோடியை சந்தித்தபோதிலும் இந்த விவகாரத்தில் இன்னும் தெளிவு பிறக்கவில்லை.

அவசர சட்டம் பயன் தருமா?

ஜல்லி கட்டு விவகாரத்தில் தமிழக அரசுதான் அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்று கைவிரித்த மத்திய அரசு இப்போது மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரத்திலும், தமிழக அரசு அவசர சட்டம் வெளியிடலாம் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லி இருக்கிறார். இதையடுத்து அவசரச் சட்டம் வெளியிடப்படும் என்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொல்லி இருக்கிறார். ஆனால், மத்திய‍ அமைச்சரின் ஒரு தகவலையே, மத்திய ஆளும் கட்சியைச் சேர்ந்த எச்.ராஜா மறுத்திருக்கிறார். எனவே அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்வதை எவ்வளவு தூரத்துக்கு நம்பமுடியும் என்பது தெரியவில்லை.

மேலும், நீட் தேர்வு அடிப்படையில்தான் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெளிவாகச் சொல்லி விட்டது. எனவே, இதில் தமிழக அரசு எடுக்கும் கடைசி கட்ட முயற்சிகள் பலிக்குமா என்று தெரியவில்லை. அப்படியே அவசர சட்டம் கொண்டு வந்தாலும், அதை எதிர்த்து நீட் ஆதரவு மாணவர்கள் உச்சநீதிமன்றம் போனால், மேலும் இழுபறி நீடிக்கும் என்றே சொல்லப்படுகிறது.

எண்ணற்ற அனிதாக்கள்

இந்த சமயத்தில் சில நாட்களுக்கு முன்பு தி.மு.க-வின் சிவசங்கர் தன் முகநூல் பக்கத்தில் எழுதியிருந்த அனிதா என்ற மாணவியின் நிலைதான் நமக்கு நினைவுக்கு வருகிறது. அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதா, அவருடைய குடும்பத்தின் வறிய சூழலிலும் 12-ம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றார். அவர் பெற்ற மதிப்பெண்கள் இதுதான்; தமிழ் 195, ஆங்கிலம் 188, இயற்பியல் 200, வேதியியல் 199, உயிரியியல் 194, கணிதம் 200 என்று வாங்கியிருந்தார். 12-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் கட்-ஆப் (அனிதாவின் கட் ஆப் 196.5)அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடக்கும் பட்சத்தில், அவருக்கு நிச்சயம் அரசு மருத்துவக் கல்லூரி ஒன்றில் இடம் கிடைத்திருக்கும்.

இப்போது தமிழக அரசு சுகாதாரத்துறை மட்டத்தில் நாம் பேசியபோது, இன்னும் சில நாட்களில் கலந்தாய்வு தொடங்கி விடும் என்று சொல்கிறார்கள். நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெற்றால், 12-ம் வகுப்புத் தேர்வு அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வை நடத்தும் விதமாக ஒரு ரேங்க் பட்டியலை தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தயாரித்து வைத்திருக்கிறார்கள்.

நீட் தேர்வில் இருந்து விலக்குக் கிடைக்காவிட்டால், நீட் தேர்வு அடிப்படையில் தேர்வான மாணவர்களுக்கான ரேங்க் பட்டியல் ஒன்றையும் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தயாரித்து வைத்திருக்கின்றனர். அதிகாரிகளின் முன்ஜாக்கிரதை வியக்கத்தக்கதாகத்தான் இருக்கிறது. ஆனால், நாம் மேலே குறிப்பிட்ட அனிதாவைப் போன்ற மாணவர்கள் இப்படி முன்ஜாக்கிரதையாக இரண்டையும் படித்து வைக்கவில்லை. அவர்களுக்கு என்ன சொல்லப்போகிறது இந்தத் தமிழக அரசு?

No comments:

Post a Comment

Rain may be back for Christmas Expect Light To Moderate Rain Today, Says IMD

Rain may be back for Christmas Expect Light To Moderate Rain Today, Says IMD TIMES NEWS NETWORK  24.12.2024  Chennai : The weather system ov...