2வது திருமணம் கைக்கு எட்டாததால் ஆத்திரம் இளம்பெண்ணின் ஆபாச புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பிய வாலிபர் கைது
2017-08-14@ 00:20:00
பல்லாவரம்: இரண்டாவது திருமணம் கைக்கு எட்டாததால், இளம்பெண்ணுடன் எடுத்த போட்டோக்களை ஆபாசமாக சித்தரித்து, நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை வளசரவாக்கம் ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராணி (21), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், தி.நகரில் ஒரு தனியார் கம்பெனியில் அக்கவுன்டன்ட்டாக வேலை செய்து வந்தார். அங்கு, சூபர்வைசராக வேலை செய்து வந்த தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகேயுள்ள தட்டார்மடம் பகுதியை சேர்ந்த அந்தோணி ராஜேஷ்குமார் (32) என்பவருடன் ராணிக்கு பழக்கம் ஏற்பட்டது. இது, நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் சிறகடித்து பல இடங்களை சுற்றி வந்தனர்.
இந்நிலையில், ராணியின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் காதலை கைவிடுமாறு கூறியும் ராணி கேட்கவில்லை. ‘எனக்கு திருமணம் என்றால் அவருடன்தான் அல்லது காலம் முழுவதும் இப்படியே இருந்து விடுகிறேன்’ என பெற்றோரிடம் பிடிவாதமாக கூறியுள்ளார். எனவே, வேறுவழியில்லாமல் ராணியின் திருமணத்துக்கு பெற்றோர் பச்சைக்கொடி காட்டினர். இதை தொடர்ந்து, திருமண மகிழ்ச்சியில் ராணி திளைத்திருந்தார். அதேநேரத்தில், அந்தோணியின் நடவடிக்கையில் பல மாற்றங்கள் தெரிவதை அறிந்து, அவரை ரகசியமாக கண்காணிக்க தொடங்கினார் ராணி. அப்போது, அந்தோணிக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதும், அவர்கள் சொந்த ஊரான தட்டார்மடத்தில் வசித்து வருவதும் தெரிய வந்தது. மேலும் மனைவி மற்றும் குழந்தையை பார்க்க அந்தோணி அடிக்கடி சொந்த ஊர் சென்று வருவதும் தெரிந்தது.
இதை மறைத்து, ராணியை காதலித்து அவரை இரண்டாவதாக திருமணம் செய்வதற்கு அந்தோணி முயற்சி செய்துள்ளார். எனவே, அதிர்ச்சி அடைந்த ராணி, தான் ஏமாற்றப்பட்டது குறித்து பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். பிறகு சுதாரித்துக்கொண்ட ராணியின் பெற்றோர், நல்லவேளை திருமணம் நடப்பதற்கு முன்னதாக அவனது சுயரூபம் தெரிய வந்ததே என நினைத்து ராணிக்கு அவசர அவசரமாக தனது உறவினர்களிலேயே ஒரு மாப்பிளை பார்த்து அடுத்த மாதம் திருமணத்திற்கு நாள் குறித்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்த விஷயம் தெரிந்த அந்தோணி, ராணிக்கு போன் செய்து, ‘நீ என்னைத்தான் திருமணம் செய்யவேண்டும் அல்லது நீயும் நானும் சேர்ந்து நெருக்கமாக எடுத்துக் கொண்ட போட்டோக்கள் அனைத்தையும் நெட்டில் போட்டு உன் வாழ்க்கையையே நாசமாக்கி விடுவேன்’ என்று மிரட்டல் விடுத்துள்ளார். இருப்பினும் அவரது மிரட்டலுக்கு ராணி செவி சாய்க்கவில்லை.
இதன் காரணமாக, ஆத்திரம் அடைந்த அந்தோணி, காதலித்த போது இருவரும் சேர்ந்து எடுத்த போட்டோக்களை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இந்த தகவல்களை நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்ட ராணி, தான் மோசம் போனது குறித்து ராயலா நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணியை வலைவீசி தேடிவந்தனர். போலீசார் தன்னை தேடுவதை அறிந்த அந்தோணி தலைமறைவாகி விட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் சொந்த ஊரான தட்டார்மடம் வீட்டில் பதுங்கி இருந்த அந்தோணியை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment