Monday, August 14, 2017

சென்னை இந்தியன் வங்கியில் 2500 கோடி கடன் மோசடி மும்பை தொழிலதிபர் கைது: ஏர்போர்ட்டில் அமுக்கியது சிபிஐ

2017-08-14@ 00:19:29




மும்பை: வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றி வரும் பெரிய கம்பெனிகளின் பட்டியலை அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் கடந்த 2013ல் வெளியிட்டது. அதில், மோசடி செய்யும் உள்நோக்கத்தில் வங்கிகளில் திட்டமிட்டே கடன் வாங்கி மோசடி செய்த ‘டாப் -10’ கம்பெனிகளின் பட்டியலில் ‘வருண் இண்டஸ்டிரீஸ்’ இடம் பெற்றுள்ளது. இதன் உரிமையாளர் கைலாஷ் அகர்வாலும், அவருடைய வியாபார பங்குதாரர் கிரண் மேத்தாவும் இணைந்து, சென்னையில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில் ரூ.330 கோடி கடனை கடந்த 2007ல் வாங்கினர்.

அதைத் தொடர்ந்து, இந்த வங்கியின் துணை வங்கிகள் மற்றும் இதர நிதி அமைப்புகளில் பங்குகளை அடமானம் வைத்து ரூ.1,593 கோடி கடன் பெற்றனர். 2007 முதல் 2012 வரையில் இந்த கடன்கள் பெறப்பட்டன. இது தவிர தனியார் நிதி நிறுவனங்களிலும் ரூ.500 கோடிக்கு மேல் கடன் பெற்றுள்ளனர். 2013க்குப் பிறகு இந்த கடன்களை திருப்பி செலுத்தாமல் இவர்கள் ஏமாற்ற தொடங்கினர். வங்கிகள் நெருக்கடி கொடுத்ததும், இருவரும் துபாய்க்கு தப்பியோடி விட்டனர். இந்தியன் வங்கி கொடுத்த புகாரின் பேரில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து, இவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வந்தது.

இந்நிலையில், கடந்த 5ம் தேதி துபாயில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் வந்திறங்கிய கைலாஷ் அகர்வாலை சிபிஐ கைது செய்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவரை காவலில் எடுத்து விசாரிக்க அது நடவடிக்கை எடுத்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024