Tuesday, August 1, 2017


வாட்ஸ் ஆப்'-க்கு மாறிய வெற்றிலை பாக்கு அழைப்பு

பதிவு செய்த நாள் 31 ஜூலை
2017
23:44

காரைக்குடி:மஞ்சு விரட்டு, மாட்டு வண்டி பந்தயத்துக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைத்த நடைமுறை, வாட்ஸ் ஆப் தகவலாக சுருங்கி வருகிறது.தமிழகத்திலேயே அதிக அளவில் மஞ்சு விரட்டு, மாட்டு வண்டி பந்தயம் நடக்கும் இடமாக திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை மாவட்டங்கள் திகழ்கிறது. சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை சிராவயல், சிங்கம்புணரி, கண்டிப்பட்டி, நெடுமரம், புதுார், அரளிப்பாறை உள்ளிட்டவை பிரசித்தி பெற்றவை.

ஊரே திருவிழா கோலம் பூணுவதால், மஞ்சு விரட்டு நடத்த தனி விழா கமிட்டியார் நிர்ணயிக்கப்படுகிறார்கள். இவர்கள் மாடு வளர்ப்பவர்களின் வீட்டிற்கு சென்று, வெற்றிலை பாக்கு வைத்து, அதற்கான அழைப்பிதழையும் கொடுத்து அழைப்பார்கள். இதற்கு 'பாக்கு வைத்தல்' என்று பெயர்.இடைப்பட்ட காலங்களில் காளைகள் காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் சேர்த்ததால், போட்டிகளுக்கு தடை ஏற்பட்டது. மாணவர் போராட்டம் எதிரொலியாக மஞ்சு விரட்டு மீண்டும் களை கட்ட தொடங்கியுள்ளது.
பிரசித்தி பெற்ற ஊர்களில் மட்டுமே நடந்த இந்த விளையாட்டுகள் தற்போது அனைத்து ஊர்களிலும் நடத்தப்படுகிறது. வீடுதோறும் காளைகள் வளர்ப்பு அதிகரித்துள்ளது. தகவல் தெரிவிக்கும் முறை மட்டும் வாட்ஸ் ஆப்-ஆக சுருங்கி விட்டது.காரைக்குடியை சேர்ந்த கோபால் கூறும்போது: தலைமுறை தலைமுறையாக மஞ்சு விரட்டு மாடு வளர்த்து வருகிறோம். விழா நடத்துபவர்கள் உரிய மரியாதையுடன் வீடு தேடி வந்து அழைப்பார்கள். எங்களுக்கும் ஒரு கவுரவம் இருந்தது. தற்போது ஒரு சிலரை தவிர பலர் வாட்ஸ் ஆப்பில் தகவல் தெரிவித்து விட்டு இருந்து விடுகின்றனர்.திருமண அழைப்பிதழே வாட்ஸ் ஆப்பில் தான் அனுப்புகின்றனர். அதை கணக்கில் கொள்ளும்போது, இதற்கான அழைப்பிதழை அனுப்புவதில் தவறில்லை. ஆனால் நேர்முகமாக பார்த்து அழைக்கும்போது ஏற்படும் நட்பு மறைந்து விடுகிறது. கலாசாரம் அழியாமல் பாதுகாக்க நம் முன்னோர்கள் வகுத்த பழமையான நடைமுறைகளை நாம் பின்பற்றி வந்தால் தான் உறவு மேம்படும், என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 09.01.2025