Saturday, August 12, 2017

85 சதவீத ஒதுக்கீடு ரத்து செல்லும் ; 'நீட்' வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு

பதிவு செய்த நாள்12ஆக
2017
05:02


மருத்துவப் படிப்புகளில், தமிழக பாடதிட்டத்தில் படித்தவர்களுக்கு, 85 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் தமிழக அரசின் உத்தரவுக்கு, சென்னை ஐகோர்ட் விதித்த தடையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. மருத்துவப் படிப்புகளுக்காக, தேசிய அளவிலான, 'நீட்' நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களில், 15 சதவீதத்தை, தேசிய ஒதுக்கீட்டுக்கு தமிழக அரசு அளித்தது. மீதமுள்ள, 85 சதவீத இடங்களில், தமிழக பாடதிட்டத்தில் படித்தவர்களுக்கு, 85 சதவீதமும், பிற பாடதிட்டத்தில் படித்தவர்களுக்கு, 15 சதவீதமும் அளிக்கும் வகையில் உள்ஒதுக்கீடு செய்து, அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உள்ஒதுக்கீட்டுக்கு சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தடை விதித்தார்; அதை, சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உறுதி செய்தது. இதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 'சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை' என, நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, ஏ.எம். கன்வில்கர் அமர்வு, நேற்று தீர்ப்பளித்து.

நீதிபதிகள், தீர்ப்பில் கூறியதாவது:நாடு முழுவதும், நீட் தேர்வு நடக்கும்போது, தமிழகத்துக்கு மட்டும் விலக்கு கேட்டீர்கள். விலக்கு கேட்டு ஜனாதிபதியிடம் அளித்த மனு நிலுவையில் இருக்கும்போது, உள்ஒதுக்கீடு அளிக்கும் உத்தரவை எப்படி பிறப்பிக்க முடியும்? வேறு எந்த மாநிலமும் இதுபோல் செய்யவில்லை. தமிழக அரசு மட்டும், இவ்வாறு செய்து வருகிறது.
சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை. உள்ஒதுக்கீடு அளிக்கும் உத்தரவுக்கான தடை தொடரும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024