கல்வி செயலரை மாற்ற தடை : ஐகோர்ட் உத்தரவு
பதிவு செய்த நாள்11ஆக
2017
23:59
சென்னை: 'கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக, அரசு நியமித்துள்ள இரு குழுக்களின் உறுப்பினர்களில், எந்த மாற்றமும் மேற்கொள்ளக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மறு ஆய்வு செய்யணும் : காஞ்சிபுரம் மாவட்டம், சதுரங்கபட்டினத்தைச் சேர்ந்த, ராமலிங்கம் தாக்கல் செய்த மனுவில், 'அரசு நியமித்துள்ள இரு குழுக்களின் உறுப்பினர்களும், எந்தவித இடையூறும் இல்லாமல், தொடர்ந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். 'இதற்கு, அரசும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். குழுக்கள் நியமிக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும் வரை, நீதிமன்ற மேற்பார்வையில், குழு இயங்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு: மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வால், பாடத்திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். 10 ஆண்டுகளுக்கும் மேலாக, பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படவில்லை. அதனால், உயர் கல்வியை தொடர்வதில், மாணவர்கள் மிகுந்த கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியது உள்ளது.
எனவே, இரண்டு விதமான குழுக்களை, அரசு அமைத்துள்ளது. பாடத்திட்டத்துக்கான, 10 பேர் அடங்கிய குழு, 13 பேர் இடம் பெற்ற உயர்மட்டக் குழு என, இரு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. குழுவில், கல்வியாளர்களும், அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுக்கள், ஏற்கனவே செயல்பட துவங்கிவிட்டன. நவீன தொழில்நுட்ப யுகத்தில், சர்வதேச தரத்துக்கு இணையாக, தமிழகத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான அறிக்கையை, குழுக்கள் விரைவில் அளிக்க உள்ளன.
இடையூறு கூடாது : மாணவர்களின் நலன் கருதி, பள்ளிக்கல்வித் துறை செயலர் உட்பட, உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் இடம் பெற்றுள்ள குழுவில், அரசு மாற்றம் எதுவும் மேற்கொள்ளக் கூடாது. குழுக்களின் செயல்பாட்டிற்கு, எந்தவிதத்திலும் இடையூறு செய்யக் கூடாது.
அகில இந்திய அளவில் போட்டி தேர்வு எழுத, கல்வியின் தரத்தை மேம்படுத்த, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி, பள்ளிக்கல்வித் துறை செயலர் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை, 23ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment