மல்லையாவை அடைக்க மும்பை சிறை தயார்?
புதுடில்லி,:'வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, பிரிட்டனுக்கு தப்பியோடிய தொழிலதிபர், விஜய் மல்லையா, 61, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால், அவரை அடைத்து வைக்க, மும்பையில் உள்ள, ஆர்தர் சாலை சிறை, பாதுகாப்பு மிக்கதாக இருக்கும்' என, அரசு உயரதிகாரிகள் கூறியுள்ளனர்.
கர்நாடகாவைச் சேர்ந்த, மதுபானத் தொழிலதிபர், விஜய் மல்லையா. இவர், விமான சேவை நிறுவனம் நடத்த, வங்கிகளில்,9,000 கோடி ரூபாய் கடன் வாங்கினார். அந்த கடனை திருப்பிச் செலுத்தாமல், பிரிட்டனுக்கு தப்பி ஓடினார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த, மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆர்தர் சாலை சிறை
இந்நிலையில், டில்லியில், மூத்த அரசு அதிகாரிகள் கூறியதாவது:பிரிட்டனில் உள்ள மல்லையாவை, இந்தியாவுக்கு நாடு கடத்தும்படி, அரசு தரப்பில் அழுத்தம் தரப்பட்டு வருகிறது. மல்லையா, இந்தியாவுக்குநாடு கடத்தப்பட்டால், அவரை பாதுகாப்பாக அடைத்து வைக்கும் வகையில், மும்பையில், ஆர்தர் சாலையில் உள்ள சிறை திகழ்கிறது.
இது தொடர்பாக, ஆர்தர் சாலை சிறைத்துறை, விரிவான அறிக்கை தயாரித்து, மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
அந்த அறிக்கை, பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள, வெஸ்ட்மின்ஸ்டர் பகுதி மாஜிஸ்திரேட் கோர்ட்டில், மத்திய அரசால் சமர்ப்பிக்கப்பட உள்ளது. மல்லையாவை நாடு கடத்தக் கோரும் வழக்கு விசாரணை, இந்த கோர்ட்டில் தான் நடந்து வருகிறது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
No comments:
Post a Comment