குடிநீர் பிரச்னையால் மக்கள் பரிதவிப்பு:குடம் ரூ. 4க்கு விற்பனை
பதிவு செய்த நாள் 01 ஆக
2017
00:31
தேவதானப்பட்டி:எருமலைநாயக்கன்பட்டியில் கடும் குடிநீர் பிரச்னை நிலவுகிறது. ஒரு குடம் குடிநீர் ரூ. 4க்கு விற்பனை செய்யப்படுவதால் வேறுவழியின்றி வாங்கி மக்கள் பரிதவிக்கின்றனர்.பெரியகுளம் ஒன்றியம் எருமலைநாயக்கன்பட்டியில் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். குடிநீர் தேவை அதிகமாக உள்ளது. இவர்களுக்காக இரண்டு கிலோ மீட்டர் துாரம் உள்ள வேட்டுவன்குளம் கண்மாயில் 'போர்வெல்' அமைத்து நீர் சப்ளை செய்யப்பட்டது. மழையின்றி வறட்சி காரணமாக குடிநீர் 'போர்வெல்'லில் கிடைத்த நீரின் அளவு குறைந்து விட்டது. இக்கிராமத்தில் கடந்த 45 நாட்களுக்கு மேலாக நீர் சப்ளை இல்லை.
பொம்மிநாயக்கன்பட்டி ரோட்டில் உள்ள போர்வெல்லில் அவ்வப்போது நீர் வற்றி ஊறுவதால் அங்கு மோட்டார் இயக்கி பிடித்து வருகின்றனர். மேலும் காளிம்மன்கோயில் அருகில் உள்ள கிணற்றில் வாளி மூலம் நீரை எடுத்து வருகின்றனர். தேவையான நீருக்காக தோட்ட வெளிகளுக்கு சென்று அவதிப்படுகின்றனர்.
ஒருகுடம் ரூ. 4குடிப்பதற்கு நீர் கிடைக்காத நிலையில் டேங்கர் லாரிகள் மூலம் வெளியூர்களில் இருந்து நீர் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. ஒரு குடம் நீர் நான்கு ரூபாய்க்கும், 25 குடம் 100 ரூபாய்க்கும் வாங்கி மக்கள் பரிதவிக்கின்றனர்.இக்கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி கூறுகையில், ''குடிநீர் கிடைக்காததால் தேவதானப்பட்டி காமாட்சி அம்மன் கோயில் அருகில் ஆட்டோவில் சென்று நீர் பிடித்து வருகிறோம். டேங்கர் லாரிகளில் கிடைக்கின்ற நீரை வேறு வழியின்றி விலைக்கு வாங்கி பயன்படுத்துகிறோம். இப்பிரச்னையை தீர்க்க மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், ''என்றார்.
No comments:
Post a Comment