ஊதிய உயர்வு சரியா?: எம்எல்ஏ.க்கள் மனசாட்சிப்படி முடிவு எடுக்கட்டும்
By DIN | Published on : 05th August 2017 01:33 AM |
ஊதிய உயர்வு சரியானதா என்பதை சட்டப் பேரவை உறுப்பினர்களே முடிவு செய்யட்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை கருத்து தெரிவித்துள்ளது.
சட்டப் பேரவை உறுப்பினர்களின் ஊதிய உயர்வுக்கு எதிரான மனுவை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.
தமிழக சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு ஜூலை 19 ஆம் தேதி ஊதிய உயர்வு அறிவிப்பு வெளியானது. இதில் மாத ஊதியம் மற்றும் இதரப் படிகள் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு வழங்கும் ஆணையை நிறுத்தி வைக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.
அதில், தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக வறட்சியால் விவசாயிகள் பலர் தற்கொலை செய்துள்ளனர். பல அரசுத்துறைகள் நஷ்டத்தில் இயங்குகின்றன. இந்நிலையில், சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தமிழகம் கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் நிலையில் சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கான ஊதிய உயர்வு தேவையற்றது என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம் கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் நிலையில் சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கான ஊதிய உயர்வு தேவையற்றது என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் இது தேவையா என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டப் பேரவையில் கேள்வி எழுப்பியுள்ளனர். சட்டப் பேரவை உறுப்பினர்களின் ஊதிய உயர்வு அரசின் கொள்கை முடிவு, இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஆனால், அந்தக் கொள்கை முடிவு தவறாக இருக்கும் பட்சத்தில் நீதிமன்றம் தலையிடுவதில் தவறில்லை. இந்த விவகாரத்தில் அரசு தான் நீதிமன்றமாகச் செயல்பட வேண்டும். அரசு எடுக்கும் கொள்கை முடிவின் மீது ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. சட்டப் பேரவை உறுப்பினர்கள் தங்களது பொறுப்பு, பணி உள்ளிட்டவற்றை உணர்ந்து செயல்பட வேண்டும். மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது. முதல்வர் பிறப்பித்த உத்தரவை சட்டப் பேரவை ஏற்றுக் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த ஊதிய உயர்வு சரியா, தவறா என்று சட்டப் பேரவை உறுப்பினர்கள் தங்களுக்குள்ளே கேள்வி எழுப்பிக் கொள்வது அவசியம். அவர்களது மனசாட்சிக்கே இந்தப் பிரச்னையை விட்டுவிடுகிறோம். அவர்களே முடிவு செய்யட்டும். இந்திய அரசியலமைப்பின்படி நிர்வாகம், நீதி, சட்டப் பேரவை எல்லாம் தனித்தனி துறைகள். நிர்வாகத்தின் முடிவுக்கு சட்டப் பேரவை ஒப்புதல் அளிக்கலாம். அது சட்டப் பூர்வமாகச் சரியா என்பதை மட்டுமே நீதித்துறையால் பார்க்க முடியும்.
இந்த வழக்கில் மனுதாரர் தனது கோரிக்கையை சட்டப்பூர்வமாக முன்வைக்காமல் தார்மீக அடிப்படையில் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் நீதித்துறை இதில் தலையிடலாமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment