Saturday, August 5, 2017


60 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் பி.இ. மாணவர் சேர்க்கை: 6 நாள்களில் முடிகிறது கலந்தாய்வு

By எம். மார்க் நெல்சன்  |   Published on : 05th August 2017 03:28 AM  |   
counseling

பொறியியல் கலந்தாய்வு முடிய இன்னும் ஆறு நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், 60 -க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் சேர்க்கை நடைபெற்றிருப்பது தெரிய வந்திருக்கிறது. அதுபோல், பி.இ. இயந்திரவியல், கட்டுமானப் பொறியியல் (சிவில்) படிப்புகள் மீது மாணவர்களின் ஆர்வம் வெகுவாகக் குறைந்துள்ளது. கணினி அறிவியல், மின்னணுவியல் -தொடர்பியல் பொறியியல் படிப்புகளில் அதிகமானோர் சேர்ந்துள்ளனர் என்றபோதும், கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும்போது அதுவும் குறைவுதான் என்கின்றனர் பொறியியல் சேர்க்கை அதிகாரிகள்.
அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்காக இந்த முறை 570 -க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் 1.75 லட்சம் பி.இ. இடங்கள் அளிக்கப்பட்டிருந்தன. ஜூலை 17 கலந்தாய்வு தொடங்கியது. இந்த ஆண்டு சேர்க்கை தொடங்கியது முதல் கணினி அறிவியல், மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் படிப்புகளில் அதிக மாணவர்கள் சேர்க்கை பெற்று வந்தனர்.
கடந்த ஆண்டுகளில், இதுபோன்று கலந்தாய்வு தொடக்கத்தில் கணினி அறிவியல், மின்னணுவியல் - தொடர்பியல் பொறியியல் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருக்கும். பின்னர், படிப்படியாக அதிக மாணவர்கள் சேர்ந்த பிரிவாக இயந்திரவியல் பிரிவு மாறிவிடும். கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இந்த நிலைதான் நீடித்து வந்தது.
இயந்திரவியல், சிவில் பிரிவுகளில் குறைந்தது ஆர்வம்: இந்த நிலையில், 2017 -18 பி.இ. கலந்தாய்வு முடிய இன்னும் 6 நாள்களே உள்ள நிலையில், தொடக்க நாள் முதல் அதிக மாணவர்கள் தேர்வு செய்யும் பிரிவுகளாக கணினி அறிவியல், மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் பிரிவுகளே இருந்து வருகின்றன.
பி.இ. கணினி அறிவியல் பிரிவில் மொத்தமுள்ள 27,695 இடங்களில் இதுவரை 9,500 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர். மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் பிரிவில் மொத்தமுள்ள 33,881 இடங்களில் இதுவரை 12,000 பேர் சேர்ந்துள்ளனர்.
ஆனால், பி.இ. இயந்திரவியல் பிரிவில் மிக அதிகமாக 38,333 இடங்கள் உள்ளன. இதில் 11,000 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். அதுபோல பி.இ. சிவில் பிரிவில் 25,237 இடங்களில் 5,000 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.
60-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில்...: ஒற்றைச் சாளர கலந்தாய்வு முடிவடைய இன்னும் 6 நாள்களே உள்ள நிலையில், 60 -க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது என்கின்றனர் பொறியியல் சேர்க்கை அதிகாரிகள். மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பி.இ. இயந்திரவியல், பி.இ. சிவில் பிரிவுகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே சேர்க்கை நடைபெற்றிருப்பதும் தெரிய வந்திருக்கிறது. சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பிரிவில் 115 இடங்களும், மின்னணுவியல் -தொடர்பியல் பிரிவில் 116 இடங்களும், கணினி அறிவியல் பிரிவில் 120 இடங்களும் நிரம்பாமல் உள்ளன.
திருவள்ளூரில் உள்ள ஒரு கல்லூரியில் இயந்திரவியல் பிரிவில் 122 இடங்களும், மின்னணுவியல் -தொடர்பியல் பிரிவில் 140 இடங்களும், கணினி அறிவியல் பிரிவில் 65 இடங்களும் நிரம்பாமல் உள்ளன.
கன்னியாகுமரியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பிரிவில் 111 இடங்களும், சிவில் பிரிவில் 72 இடங்களும், மின்னணுவியல் -தொடர்பியல் பிரிவில் 72 இடங்களும், கணினி அறிவியல் பிரிவில் 38 இடங்களும் நிரம்பாமல் உள்ளன.
காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் இயந்திரவியல் பிரிவில் 72 இடங்களும், மின்னணுவியல் -தொடர்பியல் பிரிவில் 73 இடங்களும், கணினி அறிவியல் பிரிவில் 74 இடங்களும் நிரம்பாமல் உள்ளன.
இதேபோல, விழுப்புரம், திருச்சி, நாமக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 60 -க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் சேர்க்கையும், நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இயந்திரவியல், சிவில் பிரிவுகளில் ஒற்றை இலக்கத்தில் சேர்க்கையும் நடைபெற்றிருப்பது அண்ணா பல்கலைக்கழக புள்ளி விவரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

    No comments:

    Post a Comment

    NEWS TODAY 21.12.2024