Wednesday, August 2, 2017

ஆன்மிகம்

சாப–பாவங்கள் போக்கும் வரலட்சுமி நோன்பு





லட்சுமி தேவியை நினைத்து வழிபடும் முக்கியமான விரதம் ‘வரலட்சுமி நோன்பு’. இந்த விரதத்தை ‘வரம் தரும் விரதம்’ என்றும் அழைப்பார்கள்.

ஆகஸ்ட் 01, 2017, 08:00 AM 4–8–2017 அன்று வரலட்சுமி விரதம்

லட்சுமி தேவியை நினைத்து வழிபடும் முக்கியமான விரதம் ‘வரலட்சுமி நோன்பு’. இந்த விரதத்தை ‘வரம் தரும் விரதம்’ என்றும் அழைப்பார்கள். அஷ்ட லட்சுமிகளும் ஒரே உருவாக இருந்து, செல்வம், வெற்றி, வீரம், புத்திர பாக்கியம், கல்வி உள்ளிட்டவற்றை அருளும் சிறப்பு மிக்க விரதம் இதுவாகும். அமிர்தம் வேண்டி பாற்கடலை கடந்தபோது, கடலில் இருந்து தோன்றியவர் லட்சுமி. இவர் மகாவிஷ்ணுவை மணந்தார். லட்சுமியின் கையில் எப்போதும் பூரண கும்பம் இருக்கும். திருமால் பூலோகத்தில் பல அவதாரங்களை எடுத்தபோது, லட்சுமியும் சீதாதேவி, பத்மாவதி, துளசி என பல வடிவங்களில் வந்து நித்ய சுமங்கலியாக இருந்தவர். பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளமும், பொறுமையை கொண்ட லட்சுமிதேவி, செல்வத்துக்கு அதிபதியாக இருந்து, தன்னை வழிபடுபவர்களுக்கு செல்வங்களை வாரி வழங்குகிறார்.

லட்சுமிதேவியை விரதம் இருந்து வழிபடுவதால், அஷ்டலட்சுமிகளின் அருள் கிடைக்கும். மாங்கல்ய பாக்கியம் பெறலாம். திருமணத் தடை விலகி, பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். சுமங்கலி பெண்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வாழவும், கணவருக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், குழந்தைகள் நலமுடன் வாழ வேண்டியும், லட்சுமிதேவியை நினைத்து வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப் படுகிறது.

முன் காலத்தில் சாருமதி என்ற பெண், தன் கணவனையும், மாமனார், மாமியாரையும் கடவுளர்களாகவே நினைத்து பணிவிடை களைச் செய்து வந்தாள். அவளின் அன்பு மிகுந்த மனதைக் கண்டு, மகாலட்சுமி தேவி மகிழ்ச்சி கொண்டாள். ஒரு நாள் சாருமதியின் கனவில் தோன்றிய லட்சுமிதேவி, ‘என்னைத் துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களின் இல்லத்தில் நான் வசிப்பேன்’ என்று கூறியதுடன், அந்த விரதத்தை கடைப் பிடிக்கும் வழிமுறைகளையும் சாருமதிக்கு எடுத்துரைத்தார். அதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் சிறப்பு மிகுந்த பணியையும் அவளிடம் லட்சுமிதேவி ஒப்படைத்தாள்.

சாருமதியும், தேவியின் எண்ணப்படியே அனைத்தையும் செய்து முடித்தாள். சாருமதி ‘வரலட்சுமி விரதம்’ இருந்து பல நன்மை களைப் பெற்றாள். அதைக் கண்ட மற்ற பெண்களும் அந்த விரதத்தை கடைப் பிடிக்கத் தொடங்கினர். அதன் காரணமாக அந்த நாடே சுபீட்சம் அடைந்தது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

விரதம் இருக்கும் முறை

ஆடி அல்லது ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்னதாக வரும் வெள்ளிக் கிழமை அன்று, வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அதற்கு முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையை மெழுகி, கோலமிட வேண்டும். வீட்டின் தென்கிழக்கு மூலையில் ஒரு சிறிய மண்டபம் அமைத்து அலங்கரிக்க வேண்டும். மண்ட பத்தின் இரு பக்கங்களிலும் வாழை மரக்கன்று கட்டி, பூக்களால் தோரணம் கட்ட வேண்டும். அதில் தங்கம், வெள்ளி அல்லது சந்தனத்தால் செய்யப்பட்ட வரலட்சுமி தேவியின் படத்தை வைக்க வேண்டும்.

லட்சுமிதேவியின் முன்பாக ஒரு வாழை இலை போட்டு, அதில் பச்சரிசியை பரப்ப வேண்டும். அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை மற்றும் பழங்கள் வைக்க வேண்டும். லட்சுமிக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும். ஒரு கலசத்தில் மஞ்சள் கயிறு கட்டி, அதன் மேல் தேங்காய் வைக்க வேண்டும். தேங்காயிலும், கலசத்திலும் குங்குமம் இட வேண்டும். பின்னர் கலசத்தை அரிசியின் நடுவில் வைக்க வேண்டும்.

தொடர்ந்து முதலில் விநாயகர் பூஜை செய்ய வேண்டும். பின்னர் லட்சுமியை அர்ச்சித்து, தூப– தீபங்கள் காட்ட வேண்டும். அன்னம், பாயசம், பழ வகைகள் நிவேதனம் செய்ய வேண்டும். பின்னர் வரலட்சுமியின் முன் வைத்திருந்த நோன்புச்சரட்டை மஞ்சள், குங்குமம் இட்ட மலர்களோடு சேர்த்து கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். பூஜையின் போது அஷ்ட லட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகா லட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், திருமணமான பெண்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வம் சேரும். கன்னிப்பெண்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தைகளுக்கு கல்வி ஞானம் கிட்டும். அம்பிகையின் அருளால் விரும்பிய நலன்கள் வாழ்வில் கிடைக்கப்பெறும் என்பது ஐதீகம்.

சாபம் நீங்கியது..

சித்திரநேமி என்பவர் தேவதைகளின் நடுவர். ஒரு முறை கயிலாயத்தில் சிவனும், பார்வதியும் சொக்கட்டான் ஆடினர். அவர்களுக்கு நடுவராக சித்திரநேமி இருந்தார். ஆட்டத்தின் முடிவில் சித்திரநேமி, பாரபட்சமாக ஈசன் வெற்றி பெற்றதாக அறிவித்தார். இதனால் ஆத்திரம் கொண்ட பார்வதி, சித்திரநேமிக்கு தொழுநோய் ஏற்படும்படி சாபம் கொடுத்தார்.

இதையடுத்து ஈசன், பார்வதியிடம், ‘சித்திரநேமி என் மீதுள்ள பாசத்தால் அப்படி நடந்து கொண்டு விட்டான். நீ அவனது சாபத்தை போக்கி அருள் செய்ய வேண்டும்’ என்றார். அதே நேரத்தில் சித்திரநேமியும், சாப விமோசனம் கேட்டு பார்வதியின் காலில் விழுந்தார்.

இதையடுத்து, ‘எப்போது தடாகத்தில் தேவ கன்னிகைகள், வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிப்பார்களோ.. அப்போது உன் நோய் நீங்கும்’ என அருள் செய்தார் பார்வதி.

சித்திரநேமி பூலோகம் வந்து ஒரு குளக்கரையில் வசித்து வந்தார். ஒரு நாள் அங்கே வந்த தேவப் பெண்கள், துங்கபுத்ரா நதிக்கரையில் வரலட்சுமி பூஜையை செய்தனர். இதைப் பார்த்த சித்திர நேமியின் தொழு நோய் நீங்கியது. பின்னர் அவரும் வரலட்சுமி விரதத்தை கடைப்பிடித்தார்.

லட்சுமி அருள் கிடைக்க..

மகாலட்சுமி ஒவ்வொரு வீட்டிலும் வாசம் செய்ய, அருள்புரிய சில காரியங்களைச் செய்ய வேண்டும். அதிகாலை எழுந்ததும் கொல்லைப்புற வாசலை திறந்து வைத்து அதன் பின் தலைவாசலை திறக்க வேண்டும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கை ஏற்றி லட்சுமியை வழிபட வேண்டும்.

வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தண்ணீர் கொடுக்க வேண்டும். மஞ்சள் கிழங்கும் கொடுக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும்.

மேலும் பவுர்ணமி தோறும் மாலையில் குளித்து சத்ய நாராயணரை, துளசி மற்றும் செண்பக மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். பால், பாயசம், கற்கண்டு, பழ வகைகளை நைவேத்தியமாக படைத்து, இரவில் உணவு உட்கொள்ள வேண்டும்.

ஒரு பெண் தன்னுடைய திருமணத்திற்கு சீராக கொடுக்கப்பட்ட வெள்ளிப் பாத்திரங்களை, தான் வாழும் காலத்தில் விற்கவோ, பிறருக்கு அன்பளிப்பாகவோ கொடுக்கக் கூடாது. வெற்றிலை, பாக்கு, திருநீறு, ஆடை, பொன் போன்றவற்றை இரு கரங்களால் ஏற்க வேண்டும். வளையல், சீப்பு, கண்ணாடி, கண் மை, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றை தேங்காயுடன் முறத்தில் வைத்து தானம் அளிப்பவருக்கு, லட்சுமி தேவி விரும்பிய வரங்களை அளித்து அருள்புரிவார்.

செல்வம் கிடைத்தது..

பத்ரச்ரவஸ் என்ற மன்னன் சிறந்த விஷ்ணு பக்தன். அவனது மனைவி சுரசந்திரிகா. இவர் களுக்கு சியாமபாலா என்ற மகள் இருந்தாள். அவளை சக்கரவர்த்தியான மாலாதரன் என்பவனுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். ஒரு நாள் மகாலட்சுமி தேவி, வயதான சுமங்கலி வேடத்தில் சுரசந்திரிகா அரண்மனைக்கு வந்தாள். சுரசந்திரிகாவிடம் வரலட்சுமி விரதத்தை விரிவாக கூறி அதை கடைப்பிடிக்கும் படி கூறினாள். ஆனால் மகளை பிரிந்த ஏக்கத்தில் இருந்த சுரசந்திரிகா, லட்சுமி தேவியை யாரோ என்று கருதி விரட்டி விட்டாள்.

விரட்டப்பட்ட லட்சுமி தேவியை, சியாமபாலா சமாதானப்படுத்தி, அவரிடம் இருந்து வரலட்சுமி விரத முறைகளை விரிவாக கேட்டு உபதேசம் பெற்றாள். பக்தியுடன் விரதத்தை கடைப் பிடித்தாள். விரத மகிமையில் அவள் செல்வச் சிறப்பை அடைந்தாள். ஆனால் லட்சுமி தேவியை அவமானப்படுத்தியதால், அவளது பெற்றோர் தங்கள் செல்வங்களை இழந்து நாடோடிகளாயினர்.

இதுபற்றி அறிந்த சியாமபாலா, ஒரு குடம் நிறைய தங்கத்தை பெற்றோருக்கு அனுப்பி வைத்தாள். ஆனால் அவர்கள் செய்த தீவினையால் அது கரியாகி விட்டது. பின்னர் சியாமபாலா தன் தாயிடம் வரலட்சுமி விரதத்தைப்பற்றி சொல்லி பூஜை செய்யும் படி கூறினாள். அவளும் மகள் சொன்னபடி வரலட்சுமி விரதத்தை கடைப்பிடித்தாள். இதையடுத்து அவர்கள் இழந்த செல்வம் மீண்டும் வந்து சேர்ந்தது.

No comments:

Post a Comment

Girl who left home after a fight 7 years ago found

Girl who left home after a fight 7 years ago found  Abhay@timesofindia.com 11.01.2025 New Delhi : In 2018, a 17-year-old girl fought with he...