Wednesday, August 2, 2017

தேசிய செய்திகள்

சசிகலாவின் மறுஆய்வு மனு மீது சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரணை உடனே முடிவு தெரிய வாய்ப்பு




சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையில் இருந்து விடுவிக்க கோரும் சசிகலாவின் மறுஆய்வு மனு மீது சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரணை நடத்துகிறது.

ஆகஸ்ட் 02, 2017, 04:30 AM

புதுடெல்லி,

வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 66 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டில் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து அவர்கள் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில், அந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி 4 பேரின் தண்டனையையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து கர்நாடக அரசு மற்றும் தி.மு.க. பொதுச்செயலாளர் க. அன்பழகன் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் கீழ்க்கோர்ட்டு விதித்த தண்டனையை உறுதிசெய்து தீர்ப்பு வழங்கினர்.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அவர் விடுவிக்கப்பட்டார். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு, அவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

மறு ஆய்வு மனு

இந்த நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவில், “ சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட 4 பேரில் ஜெயலலிதா மட்டுமே அரசு பதவி வகித்து வந்தார். அவரை மட்டுமே ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் தண்டிக்க முடியும். அவருடைய மரணத்தை தொடர்ந்து அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரை தண்டிப்பது முறையானது அல்ல. ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்களும் விடுவிக்கப்பட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இன்று விசாரணை

சசிகலா உள்ளிட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மறு ஆய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டில் இன்று (புதன்கிழமை) நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், அமிதவராய் ஆகியோர் விசாரிக்கின்றனர்.

மறு ஆய்வு மனுக்கள் மீதான விசாரணை திறந்த நீதிமன்ற அமர்வில் நடைபெறாது. இது நீதிபதிகளின் அறையில் நடைபெறுவதுதான் வழக்கம். இந்த விசாரணையில் வக்கீல்கள், வழக்குதாரர்கள் பார்வையாளர்கள் உள்ளிட்ட யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே வழக்கம்தான், சசிகலா உள்ளிட்டவர்களின் மறு ஆய்வு மனு விசாரணைக்கும் பின்பற்றப்படுகிறது.

உடனே முடிவு

எனவே விசாரணை முடிந்து உடனே இன்று மாலை சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் இந்த விசாரணை மீதான முடிவை வெளியிடுவதற்கு வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

PhD aspirants demand online availability status of guides

PhD aspirants demand online availability status of guides Ardhra.Nair@timesofindia.com  26.11.2024 Pune : Citing difficulties in application...