Thursday, August 17, 2017

எவ்வளவு அதிகமோ...அவ்வளவும் ஆபத்து!

2017-08-10@ 17:21:56




நன்றி குங்குமம் டாக்டர்


சென்னையில் உள்ள பிரபல தனியார் உணவகம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். ஆர்டர் செய்திருந்த மஷ்ரூம் பிரியாணி கண்களைக் கவரும் வகையில் ‘பளிச்’ நிறத்தோடு சில நிமிடங்களுக்குப் பிறகு பரிமாறப்பட்டது. சாப்பிட்டுவிட்டு கைகளைக் கழுவிய பிறகும், பிரியாணியின் அதீத சிவப்பு நிறம் கையைவிட்டு மறையவில்லை. இது ரசாயன நிறமூட்டிகளின் கைவண்ணமே என்பது புரிந்தது. பஜ்ஜி முதல் பிரியாணி வரை சமீபகாலமாக எல்லா உணவுகளுமே இதுபோல் அதீத நிறத்தோடே தயாரிக்கப்படுகிறது; விற்கப்படுகிறது. மக்களும் அதையே விரும்பி வாங்குகிறார்கள். உணவுகளின் மீது ஏற்றப்படுகிற இந்த செயற்கை நிறம் எந்த அளவுக்கு ஆபத்தானது? உணவியல் நிபுணர் ராதிகாவிடம் பேசினோம்...‘‘இன்றைய அவசர வாழ்வில் எல்லாமே கலர்ஃபுல்லாக இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

இது கடந்த 50 ஆண்டுகளில் 500 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதுதான் நம் உணவிலும் பிரதிபலிக்கிறது. வியாபாரிகளும் அதற்கேற்பவே ரசாயன நிறங்களைக் கொண்டு விற்பனைக்காக உணவுப் பொருட்களைத் தயாரிக்கிறார்கள். இயற்கையில் ஒவ்வொரு உணவுப்பொருளுக்குமே ஒரு பிரத்யேக நிறம் உண்டு. மாம்பழம் என்பது இந்த நிறத்தில்தான் இருக்கும் என்று மக்கள் ஒரு வண்ணத்தை முடிவு செய்து வைத்திருக்கிறார்கள். மக்களின் இந்த மனநிலையைப் பயன்படுத்தித்தான் உணவுப் பொருட்களில் நிறமூட்டிகளைக் கலக்கிறார்கள். நிறமூட்டிகளில் இயற்கையான நிறமூட்டிகள், செயற்கையான ரசாயன நிறமூட்டிகள் என இரண்டு வகைகள் உண்டு. இதில் இயற்கை நிறமூட்டிகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுகளை வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம். தவறு இல்லை.

ஏனெனில் காய், பழம், இலை, பூ போன்றவற்றைப் பயன்படுத்தி இயற்கை நிறமூட்டிகளை எடுக்கிறார்கள். இந்த நிறமூட்டிகள் உணவை வண்ணமயமானதாக மாற்றுவதோடு உணவுப் பொருள் கெட்டுப் போகாமல் தடுப்பதற்கும் உதவுகிறது. மேலும் இந்த இயற்கை வகை நிறமூட்டிகளால் உடலுக்கு எந்த தீங்கும் வருவதில்லை. ஆனால், செயற்கை முறை நிறமூட்டிகள்தான் ஆபத்தானவை. பெட்ரோல், குருடாயில், மரக்கறி, ரசாயனம் போன்றவற்றை பயன்படுத்தியே செயற்கை வகை நிறமூட்டிகளை எடுக்கிறார்கள். இந்த செயற்கை முறை ரசாயனங்கள் கலந்த உணவுகளைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது, பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. மூளையில் கட்டி, சிறுநீரகக் கோளாறு, கல்லீரல் புற்றுநோய், தைராய்டு கட்டிகள், ஹைப்பர் ஆக்டிவிட்டி, அலர்ஜி, தூக்கமின்மை, நடத்தைக்கோளாறுகள், மரபணு பாதிப்பு போன்ற பல ஆபத்துகள் செயற்கையான நிறமூட்டிகளால் ஏற்படுகிறது.

அதனால் செயற்கை வகை நிறமூட்டிகளால் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை நாம் வாங்கி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஓர் உணவுப்பொருள் இயற்கையான நிறமூட்டியால் தயாரானதா அல்லது செயற்கையான நிறமூட்டியால் தயாரானதா என்பதை நுட்பமாக சென்றெல்லாம் கண்டுபிடிக்க வேண்டியதில்லை. ஓர் உணவுப் பொருள் அதீத நிறத்தோடு பளிச்சென்று இருந்தால் அது ரசாயன நிறமூட்டிகள் கலக்கப்பட்ட உணவு என்பதைப் புரிந்துகொள்ளலாம். அதேபோல், ஓர் உணவுப் பொருளில் எந்த அளவுக்கு நிறம் கொண்டதாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஆபத்தானது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அது சாதாரண பஜ்ஜியாக இருந்தாலும் சரி, கேக் வகைகளாக இருந்தாலும் சரி, இல்லை இதுபோல் பிரியாணியாக இருந்தாலும் சரி. அதிக நிறம்... ஆபத்துதான்.

உண்ணும் உணவு தரமானதாக, சுகாதாரமானதாக இருக்க வேண்டுமே தவிர கலர்ஃபுல்லாக இருக்க வேண்டியதில்லை. இந்த விழிப்புணர்வு மக்களிடம் அதிகரிக்க வேண்டும். தொடர்ச்சியாக வாங்கக் கூடிய உணவுப்பொருட்களில் சந்தேகம் இருந்தால் தங்களது உணவியல் நிபுணர் அல்லது மருத்துவரிடம் இந்த பிராண்ட் தரமானதுதானா என்றும் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். குழந்தைகளுக்கென தயாரிக்கும் பண்டங்களான ஐஸ்கீரிம், சாக்லெட், பிஸ்கட் போன்றவைகளில் அதிக வகையான செயற்கை நிறங்கள் கலக்கப்படுகின்றன என்பதால், அதிக நிறம் கொண்ட உணவுகளை குழந்தைகளுக்கு வாங்கித் தருவதை பெற்றோர் தவிர்க்க வேண்டும். ஓர் உணவுப் பண்டம் வாங்கும்போது அதில் நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் அதனுடைய விபரத்தைப் பார்த்து வாங்க வேண்டும்.

உணவுப் பண்டத்தை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் அதில் கலக்கப்பட்டுள்ள நிறமூட்டிகளின் விபரங்களைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். மக்கள் புரிந்துகொள்ளும் வகையிலும் அந்த நிறமூட்டிகளின் விபரத்தைக் குறிப்பிட வேண்டும். இயற்கை முறையில் நிறமூட்டுவதை அரசு ஊக்குவிக்க வேண்டும். மேலும், உணவு பாதுகாப்புத் துறையான FSSAI இயற்கை முறையில் நிறமூட்டியை பயண்படுத்தி தயாரித்த உணவுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். முக்கியமாக, இந்த குழப்பங்களை எல்லாம் தவிர்க்க உணவை ரெடிமேடாக வாங்கி சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு நேரடியாக சமைத்து சாப்பிட்டு பழக வேண்டும். வீட்டில் சமைக்கும்போதும் உணவு கலர்ஃபுல்லாக இருக்க வேண்டும் என்று வண்ணங்களைத் தெளிக்காமல் இயற்கையான வண்ணத்துடனும், மணத்துடனும் தயாரித்தாலே ஆபத்து எதுவும் இல்லை!’’


- க. இளஞ்சேரன்

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024