Thursday, August 17, 2017


மதுரை துணைவேந்தர் மீதான புகார்: கவர்னருக்கு தெரியுமா : ஆக.30ல் பதில் அளிக்க உத்தரவு

பதிவு செய்த நாள்17ஆக
2017
00:29


மதுரை: மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் செல்லத்துரை நியமனத்தை ரத்து செய்ய தாக்கலான வழக்கில், கவர்னரின் முதன்மை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

மதுரை மாவட்ட மக்கள் உரிமை பாதுகாப்பு மைய செயலாளர் லயோனல் அந்தோணிராஜ் தாக்கல் செய்த பொதுநல மனுவில், துணைவேந்தர் செல்லத்துரைக்கு விதிகள்படி போதிய தகுதிகள், முன் அனுபவம் இல்லை.துணைவேந்தராக கல்யாணி இருந்தபோது, பல்கலை பாதுகாப்பு குழு கன்வீனர் சீனிவாசன் தாக்கப்பட்டார். செல்லத்துரை உட்பட சிலர் மீது நாகமலை புதுக்கோட்டை போலீசார் 2014 ல் பதிவு செய்த வழக்கு, நிலுவையில் உள்ளது.செல்லத்துரையை துணைவேந்தராக நியமித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும், என தெரிவித்திருந்தார்.பல்கலை துணைவேந்தர் தேடுதல் குழு உறுப்பினர் ஹரிஷ் எல்.மேத்தா பதில் மனுவில், செல்லத்துரைக்கு எதிராக வழக்கு நிலுவையில் உள்ளது. பல்கலை இளைஞர் நலத்துறை இயக்குனராக இருந்துள்ளார். அது பேராசிரியர் பதவிக்கு இணையானது இல்லை. அவர் மீது புகார் மனுக்கள் வந்தன. அவரது விண்ணப்பத்தில் குறைபாடுகள் இருந்தன,' என ஆட்சேபித்தேன்.

தேடுதல் குழு : கன்வீனர் முருகதாஸ், 'செல்லத்துரை அரசின் தேர்வு,' என்றார். துணைவேந்தர் பதவிக்கான பரிந்துரை பட்டியலில் செல்லத்துரையின் பெயரை சேர்க்க கன்வீனர் அழுத்தம் கொடுத்தார்' என குறிப்பிட்டிருந்தார். தேடுதல் குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், 'செல்லத்துரையின் பெயரை சேர்க்க எதிர்ப்புத் தெரிவித்தேன். ஆனால், கன்வீனர் ஆர்வம் காட்டினார். துணைவேந்தர் பதவிக்கான இறுதி பரிந்துரை பட்டியலில், கட்டாயப்படுத்தி எங்களிடம் கன்வீனர் கையெழுத்து வாங்கினார்,' என பதில் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வு விசாரித்தது.தேடுதல் குழு கன்வீனர்முருகதாஸ் தாக்கல் செய்த பதில் மனு: துணைவேந்தர் பதவிக்கு 164 விண்ணப்பங்கள் வந்தன. தகுதியான 64 பேர் பரிசீலிக்கப்பட்டனர். மத்திய மனித வளத்துறை மற்றும் பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) விதிகள்படி தயாரிக்கப்பட்ட படிவம் வினியோகிக்கப் பட்டது. அதில் துணைவேந்தராக தேர்வு செய்யப்படுவோரின் குற்றப்பின்னணி வழக்கு விபரங்கள் பற்றி எதுவும் கோரவில்லை.முருகன் என்பவர் செல்லத்துரைக்கு எதிராக புகார் அனுப்பினார். செல்லத்துரையிடம் விளக்கம் பெற்றோம். பல்கலை 'போர்டு ஆப் ஸ்டடீஸ்' தலைவர் வேளாங்கண்ணி ஜோசப்பிடம் விளக்கம் கோரினோம். அவர், 'பல்கலை இளைஞர் நலத்துறையில் செல்லத்துரை வகித்த பதவியானது கல்விப் பணிக்கு சமமானது,' என்றார். இது ஒரு தகுதியாக ஏற்கப்பட்டது.

செல்லத்துரைக்கு எதிராக வழக்கு (எப்.ஐ.ஆர்.,) நிலுவை உள்ளது பற்றி, உயர்நீதிமன்ற அரசு கூடுதல் வழக்கறிஞர் குமாரிடம் கருத்து கோரப்பட்டது. அவர், 'செல்லத்துரைக்கு எதிராக எப்.ஐ.ஆரில் உள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை; வழக்கிற்கும் அவருக்கும் சம்பந்தமில்லை என தெரிகிறது,' என்றார். இவ்விபரங்களை கவர்னரின் முதன்மை செயலருக்கு
அனுப்பினோம்.செல்லத்துரையை துணை வேந்தராக நியமிக்க யாரும் அழுத்தம், நிர்ப்பந்தம் கொடுக்க வில்லை. தேடுதல் குழு உறுப்பினர்கள் இரண்டு மாதங்களாக அமைதியாக இருந்துவிட்டு, தற்போது தவறான தகவல்களை கூறுகின்றனர். அவர்கள் குறைகளை, கவர்னரிடம் தெரிவித்திருக்கலாம். 

தேடுதல் குழுவின் ஒருமித்த கருத்து அடிப்படையில், செல்லத்துரை தேர்வு செய்யப்பட்டார். அவரை தேர்வு செய்ய கையெழுத்திடுமாறு யாரையும் நிர்ப்பந்திக்கவில்லை. குழு உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகள் கற்பனையானது. இவ்வாறு குறிப்பிட்டார்.

செல்லத்துரை, 'துணைவேந்தருக்குரிய தகுதிகள் எனக்குஉள்ளன. குற்ற வழக்கு பற்றி குழுவிடம் விளக்கம் அளித்துள்ளேன். அந்த வழக்கிற்கும், எனக்கும் தொடர்பில்லை. எப்.ஐ.ஆரை ரத்து செய்யக்கோரிய மனு, உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது,' என பதில் மனு செய்தார்.

நீதிபதிகள்: செல்லத்துரைக்கு எதிராக கவர்னர் அலுவலகத்திற்குபுகார் சென்றுள்ளது. இது கவர்னரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டதா? இல்லையா? என்பதை இந்நீதிமன்றம் அறிய விரும்புகிறது. எனவே, கவர்னரின் முதன்மை செயலாளர் ரமேஷ்சந்த்மீனா ஆக.,30ல் பதில்
மனு தாக்கல் செய்ய வேண்டும், என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024