Thursday, August 10, 2017



நெருங்காமலும் நீங்காமலும்


By பாறப்புறத் இராதாகிருஷ்ணன் | Published on : 10th August 2017 02:33 AM | - |

இன்று தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி மக்களிடையே பல தாக்கங்களை ஏற்படுத்தி அவர்களின் வாழ்க்கைப் போக்கையே மாற்றி வருகின்றன. இதில் தொலைக்காட்சி, கணினி, கைப்பேசி இவற்றின் பங்கு மகத்தானது.

உலகின் பல்வேறு நிகழ்வுகளை உடனுக்குடன் துல்லியமாக அறிய ஊடகங்கள் பெரிதும் உதவுகின்றன என்றாலும், இவை குடும்ப வாழ்வையும், தனி மனித வாழ்வையும் சீரழித்து வருகின்றன.

முன்பெல்லாம் செய்திகளை தண்டோரா போட்டு அறிவித்தார்கள். பின்னர் வானொலி வந்தது. பிறகு அரசு தொலைக்காட்சி வந்தது. அதன் பிறகு தனியார் தொலைக்காட்சிகள், கைப்பேசிகள் வந்து உலகச் செய்திகளை உடனுக்குடன் விரல் நுனியில் கொண்டு வந்து விட்டன.

இணையம் வழியாக சமூக வலைதளங்கள் நம் வாழ்வின் ஓர் அங்கமாக மாறி விட்டன. உலகத்தின் நிகழ்வுகளை வீட்டில் அமர்ந்தவாறே காண இணைய பயன்பாடு பெரிதும் உதவுகிறது. உலகம் சுருங்கிவிட்டது.

குறிப்பாக, முகநூல், கட்செவி அஞ்சல், சுட்டுரை போன்ற வலைதளங்கள் இன்று அனைவராலும் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய சமூக வலைதளங்களினால் குற்றங்கள் பெருகி வருகின்றன என்பதை மறுக்க இயலாது.

பொழுது போக்கிற்கான பல சமூக வலைதளங்கள் மக்களின் நேரக்கொல்லிகளாக மாறி விட்டன. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இணையத்தைப் பயன்படுத்தும் நிலை மாறி இணையத்திலேயே நேரத்தைக் கழிக்கின்ற நிலை இன்று உருவெடுத்துள்ளது.

சமூக ஊடகங்கள் சுறுசுறுப்பாக இருந்த மக்களை வீட்டிற்குள்ளே கட்டிப் போட்டு சோம்பேறிகளாக்கி விட்டன. ஒரு மனிதன் நல்ல உடல் நிலையில் இருக்க வேண்டுமானால் அவன் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஏழு மணிநேரமாவது தூங்க வேண்டும் என்று மருத்துவ அறிவியல் சொல்கிறது. ஆனால், இந்த சமூக ஊடகங்கள் பலரின் தூக்கத்தை கெடுத்து உடல் நலத்தை பாதித்துவிடுகிறது.

அறிதிறன்பேசி எனப்படும் ஸ்மார்ட் போனை பயன்படுத்துபவர்கள் மூன்று மணி நேரம் தூங்குவது என்பதே அரிதாக உள்ளது.

இவர்கள் இரவு 10 மணிக்கு மேல் முகநூலில் வீடியோ பதிவுகளையும், வதந்திகளையும், அவதூறு செய்திகளையும் அனுப்பி அதில் எவ்வளவு லைக்ஸ் எனப்படும் விருப்பம் வந்துள்ளது, எவ்வளவு பேர் இந்த வதந்திகளை மற்றவர்களுக்கு பகிர்ந்திருக்கிறார்கள் என்பதை இரவு முழுவதும் பார்த்து காலம் போவதே தெரியாமல் பணத்தையும், நேரத்தைதையும் வீணடிக்கிறார்கள்.

டாக்டர் அப்துல் கலாம், இன்றைய இளைஞர்களிடம் கனவுக் காணுங்கள் என்றார். ஆனால், இவர்களுக்கு தூக்கம் வந்தால் தானே கனவு காண்பதற்கு.
இன்றைய இளைஞர்கள் ஒருவித பதற்றம், பய உணர்ச்சி, யாரைக் கண்டாலும் எரிச்சல், பெற்றோர்களை எதிர்த்துப் பேசுவது, கோபப்படுவது, எதிலும் ஆர்வமின்மை, மன அழுத்தம், மனச்சோர்வு, கவனக்குறைவு, மறதி போன்றவைகளால் துன்பப்படுகிறார்கள்.

எப்போதும் சமூக வலைதளங்களையே பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும், பேசிக் கொண்டிருப்பவர்களுக்கும் வெளியில் அவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் போகிறது.

விருப்பமானவர்களிடமிருந்து தகவல் வரவில்லையென்றால், மேலும் துயரமடைந்து ஒருவித மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் என்றும், தூக்கம் வராத வியாதிக்கு உட்படுவார்கள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மேலும், கண் எரிச்சல், கண் அழற்சி, கண் பொங்குதல், கண்களைச் சுற்றி கருப்பு நிறத் திட்டுகள் ஏற்பட்டு, அவர்கள் உடல் நலத்தில் மாற்றம் ஏற்படும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அறிதிறன்பேசிகளின் பயன்பாடுகள் மூலம் ஏற்படும் பாதிப்புகளை நோமோபோபியா (Nomophobia) என்று அழைக்கிறார்கள்.

சமூக ஊடகங்கள் குழந்தைகளையும் விட்டு வைப்பதில்லை. காட்சி ஊடகங்கள் குழந்தைகளை நுகர்வோர்களாக மாற்றி விட்டன.
கலை, அறிவியல், விளையாட்டு என்பது இன்று வசதிபடைத்தவர்களுக்கும், சாதிக்க துடிப்பவர்களுக்குமே என்றாகி விட்டது.

இதனால் பல இளைஞர்கள் அறிதிறன்பேசியிலும், கணினியிலும் விரலசைவுகளினால் விளையாடி, தங்களின் காலத்தை வீணடித்துக் கொள்கிறார்கள். சாதனை படைத்தவர்கள் இவ்வாறு நேரத்தை வீணடிப்பதில்லை என்பதை இளைஞர்கள் உணர வேண்டும்.
தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் பெண்கள் மனதை சீரழித்து வருகிறது. இந்த நெடுந்தொடர்களில் வரும் கற்பனை கதாபாத்திரங்கள் உண்மையென நம்பி, அந்த கொடூர கதாபாத்திரமாக தங்களையும் மாற்றி தங்களின் வாழ்க்கையில் நிம்மதியை இழக்கிறார்கள்.

பெரும்பாலான தொலைக்காட்சிகள் தங்களது நெடுந்தொடர்களில் பெண்களுக்கு எதிரான விஷயங்களை காட்டிக் கொண்டிருக்கின்றன. சமூக ஊடகங்கள் நட்பு வட்டாரத்தை விரிவுப்படுத்துகிறேன் என்று பல தீய நட்புகளைத்தான் வளர்க்கும்.

இதனால், நமக்கும், சமூகத்திற்கும் எந்த பலனும் இல்லை என்பதை உணர வேண்டும். இந்த தொலைக்காட்சி, கைப்பேசி, கணினி, போன்றவற்றை அளவோடு பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் வாழ்வில் அமைதி நிலவும்.

சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் நெருப்பில் குளிர் காய்வதுபோல அதிகமாக நெருங்கி விடாமலும், அதிகமாக நீங்கி விடாமலும் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024