Saturday, August 5, 2017

Posted Date : 09:50 (01/08/2017)

மன்னார்குடி திவ்யாவை கொன்ற இளவரசி உறவினர்களின் வாக்குமூலம்!

சே.த.இளங்கோவன்

VIKATAN



உலகமெங்கும் சராசரியாக ஒருநாளைக்கு 5,500 கோடி 'வாட்ஸ்அப்' மெசேஜ்கள் அனுப்பப்படுவதாக அந்த நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதுபோன்றதொரு மெசேஜ் உதவியால், தற்கொலை என ஜோடிக்கப்பட்ட திவ்யா என்ற பெண்ணின் மரணம், கொலை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இக்கொலைக்குக் காரணமானவர்கள் எனக் குற்றம்சாட்டப்பட்ட நபர்களை போலீஸார் கஸ்டடியில் எடுத்து விசாரித்ததில், பல திகில் பின்னணிகள் வெளியாகி உள்ளன.

"திருவாரூர் மாவட்டம் சேரன்குளத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ கார்த்திகேயன் மகள் திவ்யா. இவரை, மன்னார்குடியைச் சேர்ந்த முத்தழகன்-ராணி தம்பதியின் மகனான திருச்சி அப்போலோவில் மருத்துவராகப் பணியாற்றும் இளஞ்சேரனுக்கு, கடந்த 2011-ம் ஆண்டில் திருமணம் செய்துவைத்தனர். முத்தழகன் யார் என்றால், மன்னார்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.பாலகிருஷ்ணனின் மகனாவார். மேலும், முத்தழகனின் சகோதரி வளர்மதியை, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைபெற்று, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளஇளவரசியின் அண்ணன் வடுகநாதன் திருமணம் முடித்துள்ளார். இப்படி அரசியல் செல்வாக்குள்ள குடும்பத்தில் 100 பவுன் நகை, 10 லட்சம் ரூபாய் வரதட்சணையாகக் கொடுத்து, அந்தக் குடும்பத்தில் வாக்கப்பட்டார் திவ்யா. பல்வேறு வண்ணக் கனவுகளோடு புகுந்தவீடு சென்ற திவ்யாவின் கனவுகள் சில வருடங்களிலேயே நிர்மூலமாக்கப்பட்டது. ஆம், புது மலராகச் சென்ற திவ்யாவை பிணமாகத்தான் திருப்பி அனுப்பியது முத்தழகன் குடும்பம். 'சந்தேக மரணம்' என்று வழக்குப்பதிவுசெய்து முத்தழகன், ராணி, இளஞ்சேரன் மூவரையும் கைதுசெய்து சிறையிலடைத்தது மன்னார்குடி காவல்துறை. இந்நிலையில், இந்த வழக்கில் திடீர்த் திருப்பமாக, சந்தேக மரணமாக இருந்த திவ்யா வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட திவ்யாவின் கணவர் உள்ளிட்ட மூவரையும், ஜூலை 27 முதல் 29-ம் தேதிவரை மூன்று நாள்கள், மன்னார்குடி போலீஸார் கஸ்டடியில் எடுத்து விசாரித்துள்ளனர். விசாரணையின்போது கிடைத்தத் தகவல்கள், இந்த வழக்கில் புதிய திருப்பத்தைக் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர், விசாரணையை அறிந்த போலீஸ் உயரதிகாரிகள்.

"போலீஸ் விசாரணையில் கிடைத்த உண்மைகள் என்ன?" என முக்கிய அதிகாரிகள் சிலரிடம் கேட்டோம். "போலீஸ் விசாரணையின்போது, ஒரு இருகிய மனநிலையில்தான் முத்தழகன் இருந்தார். 'எனக்கு வயசாகிடுச்சு. உடல் பலகீனமா இருக்கு. மன உளைச்சல ஏற்படுத்துற கேள்வி ஏதும் கேட்காதீங்க' என்றார் எடுத்தவுடனே. 'உங்க மெடிக்கல் ரிப்போர்ட்ல இருந்து, எல்லாமே பார்த்துவிட்டுத்தான், நாங்க விசாரணை நடத்த வந்திருக்கோம். சட்டப்படிதான் எங்கள் விசாரணை இருக்கும். பயப்படாதீங்க' என்று கூறி விசாரணை டீம் கேள்விகளைக் கேட்டது. பல கேள்விகளுக்கு 'ஆம்', 'இல்லை' என்று ஒரு வார்த்தையில் மட்டுமே அனைவரும் பதிலளித்தனர். திவ்யா மரணம் குறித்து துருவித் துருவி போலீஸார் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினர். 'திவ்யா தற்கொலைதான் செய்துகொண்டார்' என்று சாதித்தவர்களிடம், 'சம்பவத்தன்று ஏழு மணியளவில் தன்னோட பெரியம்மா பொண்ணுக்கு திவ்யா கால் செய்து பேசியிருக்கிறார். அதேநேரத்தில் வாட்ஸ்அப்பில், நட்பு வட்டங்களுக்கு இயல்பாக மெசேஜ் அனுப்பியுள்ளார். கணவர் இளஞ்சேரனுக்கும் மெசேஜ் அனுப்பி இருக்கிறார். அந்த மெசேஜ் எல்லாம், இயல்பாகவே உள்ளது' என்று கேட்டபோது, 'இல்லை' என்று மறுத்துள்ளனர் முத்தழகன் குடும்பத்தினர். திவ்யா அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜில் உள்ள தகவல்களை விசாரணை அதிகாரிகள் காட்டவே, கப்சிப் ஆகினர். திவ்யாவின் வாட்ஸ்அப், இரவு ஏழரை மணி வரையிலுமே ஆன்லைன் காட்டியுள்ளது. எனவே, அவர் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம். எனவே, இனியும் நீங்கள் உண்மையை மறைப்பதில் பலனில்லை என்று கேட்டுள்ளனர்.

தொடர்ந்து, மௌனத்தைக் கடைபிடித்த முத்தழகன் குடும்பத்தினரிடம் கேள்வியெழுப்பிய டீம், 'திவ்யாவை நீங்களே அடித்துக் கொன்றுவிட்டு, நாடகமாடியுள்ளீர்கள். அதிலும், உச்சகட்டமாக அரசு மருத்துவமனைக்கு திவ்யாவை கொண்டு வந்தபோது, 'அம்மாவை திருடன் வந்து கொன்னுட்டுப் போய்ட்டான்' என இரண்டு வயசுப் பையனைப் பேசவைத்து, அதை ரெக்கார்டு செய்து, திவ்யா குடும்பத்தினரிடம் போட்டுக் காட்டியுள்ளீர்கள். ஒருவர் இறந்த துக்கத்தில் இருப்பவர்கள், இப்படியெல்லாம் ரெக்கார்டு செய்யணும் என்று யோசிக்க முடியுமா? அப்படியென்றால் தவறுசெய்த நீங்கள், தப்பிக்க பச்சை குழந்தையையும் பகடைக்காயாக மாற்ற முயற்சித்துள்ளீர்கள்' என்று விசாரணை அதிகாரிகள் தங்கள் குரலில் கடுமையைக் கூட்டினர். அதன்பின்னரே கடைசியில் திவ்யாவை தாங்கள் கொலைசெய்ததை முழுமையாக ஒப்புக்கொண்டனர்" என்றனர் அதிகாரிகள்.



முத்தழகன் குடும்பத்தினரின் வாக்குமூலம் என்ன?

"திவ்யாவிடம் மேலும் கூடுதல் வரதட்சணை கேட்டு 17.7.17 அன்றும் சண்டை ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் அதிகரித்து, திருவாரூரில் உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவில் எஸ்.எஸ்.ஐ-யாக இருக்கும் ராணியின் அண்ணன் சிவக்குமாரை வரவழைத்துள்ளனர். அவர், கரூரைச் சேர்ந்த லாரி டிரைவர் செந்திலைக் கூட்டி வந்துள்ளார். அவர்களும் சேர்ந்து திவ்யாவை மிரட்ட, ஒரு கட்டத்தில் சண்டை உச்சம் அடைந்து, திவ்யாவைத் தாக்கியுள்ளார் முத்தழகன். அதன்பிறகு அங்கிருந்த சிவகுமார், கரூர் செந்தில் ஆகியோர் சேர்ந்து, திவ்யாவின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொன்றுள்ளனர். வீட்டுக்கு வெளியே பேரனுக்கு சோறூட்டிக்கொண்டிருந்த ராணி, அவரைக் காரில் வைத்து பூட்டிவிட்டு, வீட்டிற்குள் வந்தவர் தடயங்களை எல்லாம் அழித்துள்ளார். இந்தக் கொலைக்கு இரண்டு லட்சம் ரூபாய் பேசப்பட்டு, ஒரு லட்சம் ரூபாயை சிவகுமாருக்கு முத்தழகன் முன்பணமாகக் கொடுத்துள்ளார். இதன்பிறகே, இந்தக் கொலை அரங்கேறியுள்ளது" என்றனர் போலீஸ் அதிகாரிகள் விரிவாக.

தற்போது சிவகுமார், செந்தில் ஆகியோரைத் தனிப்படை போலீஸார் கைதுசெய்து திருச்சி சிறையில் அடைத்துள்ளனர். அதேநேரம் திவ்யாவின் குடும்பத்தினரோ, "இளஞ்சேரனுக்கு திருச்சியில் வேறொரு பெண்ணுடன் நெருக்கமான நட்பு ஏற்பட்டு, அவரைத் திருமணம் செய்துகொள்ள இருந்தார். இந்தத் தகவல் தெரிந்து, திவ்யா அதைக் கண்டித்தார். அதன்காரணமாகவே, திவ்யாவை அவர்கள் அடித்துக்கொன்றுவிட்டனர். முத்தழகனுக்குக் கடுமையான தண்டனை கிடைக்காமல், எளிய தண்டனை கிடைக்க மன்னார்குடியைச் சேர்ந்த ஒரு முக்கியக் கல்வி நிலைய வேந்தர், முத்தழகன் குடும்பத்துக்கு சப்போர்ட் செய்கிறார். எந்தவகையிலும் முத்தழகன் குடும்பம் தப்பிக்கக்கூடாது" என்கின்றனர் அழுத்தமாக.


திவ்யா வழக்கை விசாரித்து வரும் மன்னார்குடி டி.எஸ்.பி அசோகனிடம் இதுபற்றி நாம் கேட்டோம். "வழக்கை முறையாக விசாரித்து வருகிறோம். கஸ்டடி எடுத்து விசாரித்ததில் கிடைத்த தகவல்களை, நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம். மேற்கொண்டு இந்த வழக்கின் தன்மையை, திவ்யாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தபிறகே சொல்ல முடியும்" என்றார் சுருக்கமாக.

திவ்யாவின் மரணம் ஏற்படுத்திய வலி, இன்னும் சில நாள்களுக்கு மன்னார்குடி மக்கள் நெஞ்சில் இருந்து அகலாது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024