Thursday, November 9, 2017


அரசு மருத்துவமனை காலி பணியிடங்கள் அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தமிழகத்தில், அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களுக்கு நியமன உத்தரவுகள் வழங்கியது, அவர்கள் பணியில் சேர்ந்தது மற்றும் காலி பணியிடங்கள் குறித்த அறிக்கையை, சுகாதாரத்துறை செயலர் தாக்கல் செய்ய, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், வெங்குளம் ராஜு, 'கீழக்கரை, ஏர்வாடி அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள், லேப் டெக்னீசியன்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை கோரி சுகாதாரத்துறை முதன்மை செயலருக்கு மனு அனுப்பினேன். 
நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
தமிழகத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் மற்றும் இதரக் காலிப் பணியிடங்களை நிரப்ப மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து, தலைமை நீதிபதி அமர்வு உத்தரவுப்படி, சுகாதாரத்துறை முதன்மைச் செயலர், ராதாகிருஷ்ணன், தாக்கல் செய்த அறிக்கை:
மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம், ஐந்து ஆண்டுகளில், 22 ஆயிரத்து, 358 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 
சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதியில், 106 உதவி மருத்துவ அலுவலர்கள் பணியிடங்களுக்கு, நவம்பரில், தற்காலிக தேர்வு பட்டியல் வெளியாகும். 744 சிறப்பு அறுவை சிகிச்சை உதவி டாக்டர் பணியிடங்களுக்கு, நவம்பர் இறுதியில், தற்காலிக தேர்வு பட்டியல் வெளியிடப்படும். 
பொது மருத்துவர் பணியிடங்களுக்கு, 1,223 நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.
பொது சுகாதார நோய் தடுப்பு பிரிவில், 105; ஊரக சுகாதாரத்துறையில் 758; மருத்துவக் கல்வி இயக்குனரகத்தில் 296, மருத்துவ அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. 1,740 நர்ஸ் பணியிடங்களில், 1,170 இடங்கள், டிசம்பர் இறுதிக்குள் நிரப்பப்படும். 2,163 லேப் டெக்னீசியன் பணியிடங்கள் காலியாக உள்ளன. 
பாராமெடிக்கல் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் நியமனம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால்,பணி நியமனங்கள் தடைபட்டுள்ளன.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வழக்கு, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி ஜெ.நிஷாபானு அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சுகாதாரத்துறை செயலரின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, இதுவரை எத்தனை பணியிடங்களுக்கு, நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன, 
அவர்களில் எத்தனை பேர் பணியிடங்களில் சேர்ந்துள்ளனர் மற்றும் அதற்கு பிந்தைய காலிப் பணியிடங்கள் குறித்த அறிக்கையை, சுகாதாரத்துறை செயலர், நவ., 29ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024