Wednesday, November 1, 2017

நடிகை கார் வாங்கிய விவகாரம் : புதுச்சேரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கிரண் பேடி ஆய்வு

kiranbed

நடிகை அமலாபால் கார் வாங்கிய விவகாரம் தொடர்பாக புதுச்சேரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆளுநர் கிரண் பேடி செவ்வாய்க்கிழமை அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.
அமலாபால் ரூ.1.5 கோடி மதிப்பிலான பென்ஸ் காரை, புதுச்சேரியில் போலி முகவரி அளித்து பதிவு செய்தார். குறைந்த தொகையை சாலை வரியாகச் செலுத்தியுள்ளார் எனப் புகார் எழுந்தது. இதேபோல, புதுவையில் போலி முகவரி கொடுத்து விலை உயர்ந்த கார்களுக்கு குறைந்த சாலை வரியைச் செலுத்தி பலர் மோசடி செய்துள்ளனர் என தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த புதுச்சேரி போக்குவரத்து செயலருக்கும், காவல்துறை முதுநிலை எஸ்.பி.க்கும் கிரண் பேடி உத்தரவிட்டார். 
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை புதுச்சேரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குச் சென்ற கிரண் பேடி அங்கு அதிரடியாக ஆய்வு செய்தார். அலுவலகத்தில் வாகனங்கள் பதிவு செய்யும் பிரிவு, உரிமம் தரும் பிரிவு, கணினியில் பதிவாகியுள்ள விவரங்கள், பதிவேடுகள் குறித்து ஆய்வு செய்தார். 
இது தொடர்பாக கிரண் பேடி கூறியதாவது:
இந்தப் புகார் உண்மையானதாக உள்ளது. வாகனப் பதிவுக்கும் ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் வரை வசதி படைத்தவர்கள் அரசுக்கு சாலை வரியை செலுத்தாமல் ஏமாற்றும் நிலை நீடிக்கும். சிறிய மாநிலமான புதுவையில் நிதிச் சிக்கல் உள்ள நிலையில், இதுபோன்ற வரி ஏய்ப்புகளால் மேலும் பாதிப்புதான் உண்டாகும். புதுச்சேரி நிர்வாகத்தில் பெரியளவில் சீரமைப்பு தேவைப்படுகிறது. அனைத்து வகையிலும் தன்னிறைவு பெற வேண்டியுள்ளது. சிரமத்தில் உள்ள நாம் செயல்பட வேண்டிய தருணம் வந்து விட்டது. இது சட்டப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட மோசடியாகும். இந்த மோசடி தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளேன்.
சிறிய யூனியன் பிரதேசமான புதுவையில் மதுவின் மூலம் கிடைக்கும் பாவப்பட்ட பணத்தை நாம் வருவாயாகப் பெறுகிறோம். வெளி மாநிலங்களைச் சேர்ந்த வசதி படைத்தவர்களால் விலை உயர்ந்த கார்கள் வாங்கி மோசடியாகப் பதிவு செய்வதால் கடும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன என்றார் கிரண் பேடி.
ஆய்வின் போது துணை போக்குவரத்து ஆணையர் ரத்னகோஷ் சாரு, வட்டாரப் போக்குவரத்து அதிகாரி ரகுநாத் ஆகியோர் உடனிருந்தனர்.
'தவறு நடைபெறவில்லை': இது தொடர்பாக புதுவை மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எப்.ஷாஜஹான் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: போக்குவரத்துத் துறை சட்டவிதிகள்படி ஒருவர் ஒரு வாகனத்தை பதிவு செய்ய, வாக்காளர் அட்டை, எல்ஐசி பாலிசி, கடவுச்சீட்டு, பள்ளிச் சான்று, பிறப்புச் சான்று, பிரமாண பத்திரம் ஆகியவற்றை ஆதாரங்களாக தாக்கல் செய்யலாம். இவை இருப்பிடத்தை உறுதி செய்யும். 
அமலாபால் தனது கையெழுத்துடன் கூடிய பத்திரத்தை தாக்கல் செய்தார். புதுச்சேரி திலாசுபேட்டையில் வாடகை வீட்டில் இருப்பதற்கான இருப்பிடச் சான்றை தாக்கல் செய்துள்ளார். அத்துடன் எல்ஐசி பாலிசி நகலையும் இந்த முகவரியிலிருந்து தந்துள்ளார் என்றார் அவர். 

No comments:

Post a Comment

news today 23.10.1024