Thursday, November 9, 2017

ஈரோடு தனியார் மருத்துவமனையில் நூதன முறையில் ரூ.8 லட்சம் அபேஸ்

ஈரோடு: பெண் டாக்டர் போல் குரலை மாற்றி பேசி, எட்டு லட்சம் ரூபாயை, மருத்துவமனையில் இருந்து பெற்று சென்றவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு, பெருந்துறை ரோட்டில், சுதா மருத்துவ மனை உள்ளது. இதன் நிர்வாக அதிகாரி, டாக்டர் தனபாக்கியம். இவர் நேற்று முன்தினம், சொந்த வேலையாக, கோவைக்கு சென்றார்.
இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமி, மருத்துவமனையின் கேஷியரை போனில் தொடர்பு கொண்டு, டாக்டர் தனபாக்கியத்தின் குரலில் பேசி, 'நான் ஒருவரை அனுப்புகிறேன். அவரிடம், எட்டு லட்சம் ரூபாயை கொடுத்து அனுப்புங்கள்' என, கூறியுள்ளார்.
சிறிது நேரத்தில், மருத்துவமனைக்கு காரில் வந்த ஒருவர், கேஷியரிடம், டாக்டர் தனபாக்கியம் அனுப்பியதாக கூறி, எட்டு லட்சம் ரூபாயை வாங்கிச் சென்றார். டாக்டர் தனபாக்கியம், நள்ளிரவு மருத்துவமனை திரும்பினார்.
அப்போது, மர்ம நபர், எட்டு லட்சம் ரூபாயை நுாதன முறையில், ஏமாற்றி வாங்கிச் சென்றது தெரிந்தது. வீரப்பன்சத்திரம் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் இந்த நுாதன மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்துள்ளது.
டி.எஸ்.பி., சண்முகம் கூறுகையில், ''மருத்துவமனையில் இருந்த, கண்காணிப்பு கேமரா பதிவை ஆராய்ந்து வருகிறோம். மருத்துவமனையில், ஏற்கனவே பணியாற்றியவர் இந்த மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம்.
''பெண் ஊழியர்களுக்கும், கேஷியருக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கிறோம். விசாரணை நடக்கிறது,'' என்றார். 

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024