Sunday, February 11, 2018

மாசி செவ்வாய், தர்ப்பணம், பிரதோஷம், மகாசிவராத்திரி... மாசி மகத்துவம்!

Published : 10 Feb 2018 10:32 IST


வி.ராம்ஜி



கயிலாசநாதர் நந்தி (திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில்)

மாசி மாதம் அருமையாய் பிறக்கிறது. மிகுந்த சக்தியுடன் பிறக்கிறது. வருகிற 13.2.18 செவ்வாய்க்கிழமை அன்றூ மாசி மாதம் பிறக்கிறது. இந்த நாளில், மாதத் தர்ப்பணம் செய்து, மாலையில் பிரதோஷ தரிசனம் செய்து, இரவில் சிவனாரை தரிசிப்பது மகா புண்ணியம், வாழ்வில் உன்னதங்களையெல்லாம் தந்தருளும் என்கின்றனர் ஆச்சார்யர்கள்!

தை மாதப் பிறப்பு அற்புதமாகப் பிறந்தது. தை மாதப் பிறப்புதான் மகர சங்கராந்தி எனும் பொங்கல் திருநாள். பொங்கல் என்பது சூரிய பகவானுக்கு உரிய நன்னாள். உத்தராயன புண்ய காலம் துவக்கமும் இந்த நாளில்தான்!

அதுமட்டுமா? தை மாதப் பிறப்பு ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தது. அதாவது ஞாயிறு என்றால் சூரியன். சூரிய பகவானுக்கு உரிய நன்னாளில், சூரியனின் உத்தராயன புண்ய காலத் தொடக்கமான தை மாதப் பிறப்பு பிறந்தது சிறப்பு. அன்றைய நாளில் பிரதோஷம் அமைந்தது. அதாவது ஞாயிற்றுக் கிழமை பிரதோஷம்.

பிரதோஷம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரையான காலம். ஞாயிற்றுக் கிழமையின் ராகுகால நேரமும் இதுவே. ஆக, காலையில் மாதத் தர்ப்பணம், பொங்கல் பண்டிகை, சூரியப் படையல், சூரிய நமஸ்காரம், மாலையில் பிரதோஷ வழிபாடு, ராகுகால வேளையில் சிவாலய தரிசனம், நவக்கிரக வழிபாடு என அந்த நாள் வழிபடுவதற்கும் வளம் பெறுவதற்குமான சக்தி மிக்க நாளாக அமைந்தது.

அதேபோல், இந்த மாசி மாதப் பிறப்பும் அமைந்துள்ளது.

மாசி என்றாலே மாசிமாத செவ்வாய்க்கிழமை ரொம்பவே விசேஷம் என்பார்கள். அப்படியொரு செவ்வாய்க்கிழமையில்தான், 13.2.18 அன்று பிறக்கிறது மாசி மாதம். ஆக, மாத தர்ப்பணம் செய்பவர்கள், மறக்காமல் பித்ருக்களை ஆராதனை செய்து, மனதாரப் பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்.

அடுத்து... தை மாதப் பிறப்பானது பிரதோஷ நாளாக எப்படி அமைந்ததோ அவ்விதமாகவே... மாசி மாதப் பிறப்பானதும் பிரதோஷ நாளாகவே அமைந்திருக்கிறது. இது இன்னும் சிறப்புமிக்கது. செழிப்பு தரக்கூடியது.

அடுத்து... மகா சிவராத்திரி! அம்பிகைக்கு நவராத்திரி; ஐயன் சிவனுக்கு ஒரு ராத்திரி... அது சிவராத்திரி என்பார்கள். மாதாமாதம் சிவராத்திரி வந்தாலும், மாசியில் வரும் சிவராத்திரியை மகா சிவராத்திரி என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். மகா சிவராத்திரி நன்னாளில், அன்றைய தினம் இரவு முழுக்க சிவனாருக்கு குளிரக்குளிர அபிஷேகங்களும் பூஜைகளும் ஆராதனைகளும் வழிபாடுகளும் அலங்காரங்களும் அமர்க்களப்படும்.

ஆக, தை பிறப்பில்... ஞாயிறு பிறப்பு, தர்ப்பணம், சூரியப் படையல், பொங்கல், பிரதோஷம் என்றெல்லாம் ஒரே நாளில் அமைந்தது போல், மாசி பிறப்பில்... மாசி செவ்வாயில் மாசி பிறப்பு, மாத தர்ப்பணம், பிரதோஷம், மகா சிவராத்திரி என ஒன்றாக அமைந்திருக்கிறது.

எனவே, முன்னோரை வழிபடுங்கள். தர்ப்பணம் செய்யுங்கள். அவர்களின் நினைவாக, எவருக்கேனும் போர்வை வழங்குங்கள். செருப்பு வாங்கிக் கொடுங்கள். எதுவும் முடியவில்லையா... நான்குபேருக்கு உணவுப் பொட்டலம் வழங்குங்கள்.

அதேபோல், மாலையில் சிவாலயம் செல்லுங்கள். நந்திதேவருக்கும் சிவனாருக்கும் நடைபெறும் பிரதோஷ பூஜையில் கலந்துகொள்ளுங்கள். முடிந்தால், பால், தயிர், திரவியப் பொடி, பஞ்சாமிர்தம், தேன், விபூதி, சந்தனம் என 16 வகை அபிஷேக உபசாரங்கள் வாங்கிக் கொடுங்கள். செவ்வரளியும் அருகம்புல்லும் வில்வமும் வழங்கி வணங்குங்கள்.

அடுத்து... மாசிப் பிறப்பான செவ்வாய்க்கிழமை... 13.2.18 அன்று மகா சிவராத்திரிப் பெருநாள். அன்றிரவு, சிவாலயங்களில் சிவனாருக்கு சிறப்பு வழிபாடுகளும் பாராயணங்களும் அபிஷேக ஆராதனைகளும் விமரிசையாக நடைபெறும். இரவு தொடங்கி விடிய விடிய ஒவ்வொரு கால பூஜையும் அமர்க்களப்படும். சிவராத்திரி விரதமிருந்து சிவ தரிசனம் செய்வது மோட்சம் நிச்சயம் என்பது ஐதீகம். அப்படியெனில் மகா சிவராத்திரி விரதம்... நம் வாழ்வில் மங்காத செல்வங்களையெல்லாம் வழங்கும். சந்ததி சிறக்க வாழலாம். செழிக்க வாழலாம் என்பது உறுதி!

மகத்துவம் நிறைந்த மாசிப் பிறப்பில் மறக்காமல் வழிபடுங்கள். மங்கல காரியங்கள் இல்லத்தில் நடக்கட்டும். மாங்கல்ய பலம் பெருகட்டும்!

No comments:

Post a Comment

NEWS TODAY 09.01.2025