ரயில்களில் தண்ணீர் நிரப்ப புதிய திட்டம் அறிமுகம்
Added : டிச 09, 2018 21:52
புதுடில்லி: நீண்ட துார ரயில்களில், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் வகையில், புதிய திட்டத்தை, ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்ய உள்ளது.தற்போது நீண்ட துாரம் செல்லும் ரயில்களில், 300 கி.மீ.,க்கு ஒருமுறை தண்ணீர் நிரப்பப்படுகிறது. இவ்வாறு, 24 பெட்டிகள் அடங்கிய ரயிலுக்குத் தேவையான தண்ணீரை நிரப்ப, 20 நிமிடங்கள் ஆகின்றன. ஆனால், ரயில்கள் நீண்ட நேரம் காத்திருக்க முடியாது என்பதால், குறைந்த அளவு தண்ணீரே நிரப்பப்படுகிறது.அதனால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, பயணியர் அவதிப்படுகின்றனர். இதை தடுக்கும் வகையில், புதிய முறையை ரயில்வே நிர்வாகம் உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து, ரயில்வே மூத்த அதிகாரிகள் கூறியதாவது:தண்ணீர் நிரப்பும் வசதியுள்ள ரயில் நிலையங்களில், தற்போது, 4 அங்குல குழாய்கள் மூலம், தண்ணீர் நிரப்பப்படுகிறது. இவை, 6 அங்குல குழாய்களாக மாற்றப்பட உள்ளன. மிகவும் அதிக தண்ணீரை அளிக்கும் வகையில், அதிகசக்தி உடைய மோட்டார்கள் பயன்படுத்தப்பட உள்ளன.மேலும், கம்ப்யூட்டர் கண்காணிப்புடன், தண்ணீர் நிரப்பப்பட உள்ளது. இந்த புதிய வசதிகளை செய்வதற்கு, ரயில்வே வாரியம், 300 கோடி ரூபாயை ஒதுக்கிஉள்ளது. இதனால், இனி, ஐந்து நிமிடங்களுக்குள், ஒரு ரயிலுக்கு தேவையான நீரை நிரப்ப முடியும். அடுத்த மார்ச் முதல், இந்த புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதனால், இனி, ரயில்களில், தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment