Saturday, June 13, 2015

15–ந்தேதி முதல் அமல் ‘தட்கல்’ ரெயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றம் முதல் 30 நிமிட நேரம் ஏஜெண்டுகளுக்கு தடை



புதுடெல்லி,


ஏ.சி. அல்லாத பெட்டிகளுக்கு ‘தட்கல்’ ரெயில் டிக்கெட் முன்பதிவு நேரம் 15–ந் தேதி முதல் மாறுகிறது. மேலும், முதல் 30 நிமிட நேரம் ஏஜெண்டுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

நேரம் மாற்றம்

தற்போது, அனைத்து ரெயில் பெட்டிகளுக்கும் ‘தட்கல்’ முன்பதிவு காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில், டிக்கெட் கவுன்ட்டர்களிலும், ஆன்லைனிலும் நெரிசலை தவிர்ப்பதற்காக, முன்பதிவு நேரத்தை மாற்றி அமைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, ஏ.சி. பெட்டிகளுக்கு, வழக்கம்போல் காலை 10 மணி முதல் 11 மணிவரை முன்பதிவு நடைபெறும். ஏ.சி. அல்லாத பெட்டிகளுக்கான முன்பதிவு நேரம், காலை 11 மணி முதல் 12 மணிவரை என மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த மாற்றம் 15–ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது, டிக்கெட் கவுன்ட்டர், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் என இரண்டுக்கும் பொருந்தும்.

தடை

அதே சமயத்தில், சாதாரண டிக்கெட் மற்றும் தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய முதல் 30 நிமிட நேரம், ஐ.ஆர்.சி.டி.சி. ஏஜெண்டு உள்பட அனைத்துவகை ஏஜெண்டுகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது.

அதாவது, சாதாரண டிக்கெட்டுகளை காலை 8 மணி முதல் 8.30 மணிவரையும், தட்கல் டிக்கெட்டுகளை காலை 10 மணி முதல் 10.30 மணிவரையும், காலை 11 மணி முதல் 11.30 மணிவரையும் ஏஜெண்டுகள் எடுக்க முடியாது.

பாதி கட்டணம் வாபஸ்

மேலும், உறுதி செய்யப்பட்ட ‘தட்கல்’ டிக்கெட்டுகளை ரத்து செய்யும் பயணிகளுக்கு பாதி கட்டணத்தை திருப்பித்தர ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போது, இந்த டிக்கெட் பணம் திருப்பித் தரப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நெரிசலான வழித்தடங்களில், ‘தட்கல்’ சிறப்பு ரெயில்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரெயில்களில் கட்டணம் அதிகமாக இருக்கும். இதற்கான முன்பதிவு, பயண தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பு தொடங்கி, 10 நாட்கள் இருக்கும்போது முடிவடையும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024