சென்னை: எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்கான ரேண்டம் எண்ணை மருத்துவக் கல்வி இயக்குனர் கீதாலட்சுமி வெளியிட்டுள்ளார். ஜூன் 19ஆம் தேதி முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்ககம் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவக் கல்வி இயக்குனர் கீதாலட்சுமி, எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஒரே கட் ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்களை வரிசைப்படுத்த ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது என்றும், 12ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண், பிறந்த தேதி மூலம் ரேண்டம் எண்ணை தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
tnhealth.org.in என்ற இணையதளத்தில் ரேண்டம் எண்ணை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்த கீதாலட்சுமி, பிளஸ் 2 மறுமதிப்பு முடிந்த உடன் தகுதி பட்டியல் வெளியிடப்படும் என்றார்.
ஜூன் 19ஆம் தேதி முதல் 25ஆம் தேதிக்குள் முதல் கட்ட கலந்தாய்வை முடிக்க மருத்துவ கல்வி இயக்ககம் திட்டமிட்டிருக்கிறது என்றும், கலந்தாய்வு தேதிகள் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
மருத்துவ படிப்புக்கான இடங்கள் 2,655 ஆக அதிகரித்துள்ளது என்றும், கடந்தாண்டை விட இந்தாண்டு 100 இடங்கள் கூடுதலாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஓமந்தூரர் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மூலம் 100 இடங்கள் கிடைத்துள்ளது என தெரிவித்த கீதாலட்சுமி, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கிடைத்துள்ளது என்றார்.
No comments:
Post a Comment